“கேப்டனின் ஆன்மா மன்னிக்காது” என்ற ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (அக்டோபர் 1)செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:
“மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, தற்போது தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்துள்ளேன்.
தேமுதிக, திமுக கூட்டணியில் இருப்பதால், ஸ்டாலின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கூட்டணி தர்மத்தை மதித்து இன்று தாராபுரத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளோம். தாராபுரத்தில் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என நம்புகிறேன்; பொறுத்திருந்து பார்ப்போம்.
எங்களைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணி வெற்றிபெறும் என்றுதான் நாங்கள் சொல்வோம்; மற்றவர்கள் அவர்கள் கூட்டணி ஜெயிக்கும் என்று சொல்வார்கள். இது இடைத்தேர்தல், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, கேப்டனின் ஆன்மா குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்த கேள்விக்கு, “முதலில் ஆதவ் அர்ஜுனா கேப்டனை நேரில் பார்த்திருக்கிறாரா? சினிமாவில் திரையில் பார்த்திருப்பார். கேப்டனின் ஆன்மா என்னைச் சுற்றியும், எங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடமும்தான் இருக்கும். கேப்டன் குடும்பத்திற்கும், கேப்டன் கட்சிக்கும் சம்பந்தமே இல்லாதவர்கள் கேப்டனின் ஆன்மா பற்றிப் பேசுவதற்குத் தகுதியே கிடையாது; அவர்கள் கேப்டனைப் பக்கத்தில் கூட பார்த்தது கிடையாது. தம்பி ஆதவ் அர்ஜுனா இதோடு அவரைப் பற்றிப் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.
