திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியதன் பின்னணி குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

மதுராந்தகத்தில் நேற்று நடைபெற்ற தவெக பிரசார பொதுக் கூட்டத்தில் வைகோ பேசியதாவது: ஏன் இந்த இடைத்தேர்தல்? எதற்காக வந்தது இந்த இடைத்தேர்தல்? மதுராந்தகத்திலும் தாராபுரத்திலும் இதற்குக் காரணம் என்ன? இதற்குப் பல விளக்கங்களைத் தருகிறார்கள். ஒரே விளக்கம்தான். துருவங்கள் சந்திப்பதில்லை இயற்கையின் அமைப்பில். ஆனால் அரசியல் களத்தில் துருவங்கள் சந்திக்கிற ஒரு காட்சி அரங்கேறியது.
அதைப் பகிரங்கமாக அறிவித்தவர் யார்? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய அகில இந்திய பொதுச்செயலாளர், என் உயிர் நண்பர் தோழர் பேபி அவர்கள்.
“அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி நடத்தட்டும். எடப்பாடியின் ஆட்சி நீடிக்கட்டும். அவரே முதலமைச்சராக இருந்துகொள்ளட்டும். நாங்கள் ஆதரவு தருகிறோம். நாங்கள் இதுவரை அனுபவித்த பலன்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கட்டும். கஜானாவின் கதவுகள் எங்கள் பக்கமே திறக்கட்டும்” என்று அந்தரங்கமான ஆலோசனை நடந்ததா, இல்லையா?
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் மதிப்புமிக்க தலைவர், கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்களால் வார்ப்பிக்கப்பட்ட தலைவர், கல்லூரியிலே பேராசிரியராக இருந்த தலைவர், உண்மையைத் தவிர வேறொன்றும் பேசத் தெரியாத ஒழுக்கசீலர் பேராசிரியர் காதர் மொய்தீன் இதே கருத்தைப் பதிவு செய்தார்.
“எடப்பாடி ஆட்சி நீடிக்க திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு கொடுப்பது என்ற முடிவு எங்களை நிலைகுலையச் செய்தது.” வாக்குகள் எண்ணப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நான் செய்தியாளர்களிடம் சொன்னேன், “தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி தரத்தக்கதாகவும் ஆச்சரியமாகவும் இருக்கக்கூடும்” என்று.
ஆனால் இந்த வெற்றி கிடைத்த பிறகு, 100 தொகுதி எண்ணிக்கையைத் தாண்டியதற்குப் பிறகு, இப்படி ஒரு அந்தரங்கமான சம்பாஷணை, அந்தரங்கமான ஒரு உரையாடல் அவர்களுக்குள் நடந்ததென்று சொல்லுவது யார்?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய அகில இந்திய தலைவர். கூறுவது யார்? இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தினுடைய தலைவர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர், முன்னணி வீரர்களாக இருந்தவர்கள் வெளியேறிவிட்டார்கள். அதிர்ச்சியால் நிலைகுலைந்துபோன என்னைப் போன்றவர்கள்…
62 ஆண்டுகாலம் நான் பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்து, 62 வருடங்கள் ஓடி முடியப்போகிறது. 1964 ஆகஸ்ட் 21-ல் கோகலே மண்டபத்தில் இந்தி ஆதிக்க எதிர்ப்புக் கருத்தரங்கத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் முன்னால் உரையாற்றிய எனக்கு, 62 வருடங்கள் பொதுவாழ்விலே ஓடி மறைந்துவிட்டன.
நான் ஐந்தரை ஆண்டுகாலம் சிறையில் இருந்திருக்கிறேன். 6 ஆயிரம் கிலோ மீட்டர் தமிழக வாழ்வாதாரங்களைக் காப்பதற்காக நான் நடந்து, கோடிக்கணக்கான மக்களைச் சந்தித்திருக்கிறேன்.
இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டபொழுது, “It is not only political suicide.” இது அரசியல் தற்கொலை மட்டுமல்ல. “It is a terrible and intolerable political fraud.” இது பெரிய அரசியல் மோசடி.. இந்த மோசடியை இவர்கள் நடத்தி, ஆட்சியிலே எடப்பாடி தொடரட்டும்; அந்த ஆட்சியிலே கிடைக்கக்கூடிய பலன்கள் எங்களுக்குத் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கட்டும் என்ற விதத்தில், அந்த ‘Power Centre of DMK’, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகார மையம் இப்படி முடிவெடுத்திருக்கிறது என்பதால் நிலைகுலைந்து, வேதனைப்பட்டுத்தான் வெளியேறுவது என்று நாங்கள் அப்பொழுதே முடிவெடுத்தோம்.
சகோதரர் ஜோசப் விஜய் அவர்கள் என் இல்லம் தேடி வருவார் என்று நான் ஒருகாலும் எதிர்பார்க்கவில்லை. அவருடைய நுண்ணிய கூர்த்த மதியையும், தொலைநோக்குச் சிந்தனையையும், திராவிட இயக்கத்தினுடைய மூலாதாரக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருப்பதையும் உணர்ந்துகொண்ட நான்…
ஆனந்த் அவர்களும் ஆதவ் அர்ஜுனா அவர்களும், “எங்கள் கூட்டணியில் நீங்கள் அங்கம் பெற வேண்டும்” என்ற ஜோசப் விஜய் அவர்களின் மடலோடு என் இல்லத்திற்கு வந்தபோது, அந்த முடிவை ஏற்றுக்கொள்கிறேன் என்று நானும் கூட்டணியிலே வந்து இணைந்தேன். இந்த இடைத்தேர்தல் அதனால்தான்.
இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாத மரகதம் குமரவேலும், தாராபுரத்திலே சத்தியபாமாவும் தங்கள் எம்.எல்.ஏ. பதவியைத் தூக்கி எறிந்தார்கள். “மக்கள் மன்றத்திற்கு வருகிறோம்” என்று மீண்டும் தேர்தலுக்கு வந்திருக்கிறார்கள்.
இந்த அரசியல் மோசடியை நடத்த முயன்றவர்கள் இன்றைக்குக் கடுமையாக, நாகரிகமற்ற முறையில், தரக்குறைவான முறையில் முதலமைச்சரை விமர்சித்து வருவதை நாடு பார்க்கிறது.
“இன்னும் 3 மாதத்துக்குள் ஆட்சி முடிந்துவிடும்” என்று ஆரூடம் சொல்கிறார்கள். அன்பு நண்பர்களே, பலகாலம் உங்களோடு நான் இருந்தவன். இந்த ஆட்சி 6 மாதத்தில் முடியாது.
2027-லும் விஜய் ஆட்சிதான். 2028-லும் விஜய் ஆட்சிதான். 2029-லும் விஜய் ஆட்சிதான். 2030-லும் விஜய் ஆட்சிதான். 2031-ல் நடக்கப்போகிற தேர்தலிலும் மீண்டும் விஜய்தான் வெற்றிபெற்று கூட்டணி அமைப்பார்.
உங்கள் மனக்கோட்டைகள் மண்கோட்டைகளாக மாறும். உங்கள் எண்ணங்களை, திட்டங்களைத் தகர்ப்போம்; தவிடுபொடியாக்குவோம். நீங்கள் நினைக்கின்ற விதத்தில் ஒருகாலும் வெற்றிபெற முடியாது. இவ்வாறு வைகோ பேசினார்.
