தமிழ், ஆங்கிலம் என இருமொழிக் கொள்கையைத் தமிழக வெற்றிக் கழகம் பின்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆட்சிக்கு வந்த பின்னர் தற்போது மாநில நெடுஞ்சாலையில் இந்தியில் பெயர் பலகை வைத்துள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தமிழக மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டிப் பலகையில் ஊரின் பெயர்கள் இந்தி மொழியில் இருந்ததால் சர்ச்சை எழுந்தது. தமிழக அரசு பல்வேறு வணிக வளாகங்கள், கடைகளின் பெயர்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்ற வேண்டும் எனச் சமீபத்தில் உத்தரவிட்டிருந்த நிலையில், மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் இந்தியில் ஊர் பெயர்கள் இருந்ததால் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இதுகுறித்து முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், இதுவரை ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைத்தான் தமிழ்நாடு எதிர்கொண்டு வந்தது.
தற்போது, மாநில அரசே அந்தப் பணியைச் செய்வதுதான் அவர்கள் சொன்ன மாற்றம் போல.
எல்லாவற்றிலும், ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் ‘U Turn’ அடிக்கும் த.வெ.க. அரசின் மற்றுமொரு முயற்சியா இது?
வடமாநில influencer-களுக்காக ரீல்ஸ் ஆட்சி நடத்தும் த.வெ.க. அரசு இதன் ஆபத்தை உணர்ந்து, உடனடியாகத் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன்.
இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கை. அதில் விளையாட வேண்டாம்!” என தெரிவித்துள்ளார்.
