திருச்சியில் ரூ.50 கோடி மதிப்புள்ள ஸ்ரீரங்கம் கோயில் நிலம் அபகரிக்கப்பட்டதாக அப்பகுதி பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் திமுக பகுதிச் செயலாளர் ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று (அக்டோபர் 2) அமைச்சர் ரமேஷ் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“கோயில் சொத்துக்களைப் பாதுகாப்பதில் ஜோசப் விஜய் ஆட்சி மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் கோயில் நிலங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாகப் பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர். அதன் அடிப்படையில், ரூ.50 கோடி மதிப்புள்ள ஸ்ரீரங்கம் கோயில் நிலம் முறைகேடாக அபகரிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாகப் புகார்களை அளித்து வந்தனர். அப்புகாரின் பேரில் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டதில், நில ஆக்கிரமிப்பு நடந்ததற்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. இதன்பேரில் கோயில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கை ரத்து செய்யக் கோரியும், முன்ஜாமீன் கோரியும் குற்றஞ்சாட்டப்பட்ட தரப்பில் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எனினும், மனுக்களை விசாரித்த நீதிமன்றம், வழக்கின் தன்மையைக் கருத்தில் கொண்டு முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபரை உடனடியாகக் கைது செய்தனர். தற்போது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை நேர்மையாக நடைபெறும்.
இவ்வழக்கில் நில அபகரிப்புச் சதியில் தொடர்புடைய நபர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது அடுத்தடுத்து சட்டப்படியான கடும் நடவடிக்கைகள் தொடரும்.
கோயில் நிலங்களை நாங்கள்தான் பாதுகாக்கிறோம்; கோயில் நிலங்களை நாங்கள்தான் மீட்டோம்’ என்று சொல்லும் திமுக ஆட்சியில், திமுகவினரே பல கோயில் நிலங்களை அபகரித்துள்ளனர் என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.
அதுமட்டுமில்லாமல், வழக்கம்போல் நேற்று கைது செய்தவுடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ‘எனக்கு நெஞ்சு வலிக்கிறது’ என்று அழுது அட்டகாசம் செய்துள்ளனர். ஆனால் மருத்துவமனையில் மிகச் சிறப்பாக அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டு, அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று உறுதி செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
திமுகவினரின் தொடர் பாணி (Pattern) இதுவாகத்தான் இருக்கிறது. ஆபாசமாகப் பேசுவது, பொதுமக்களின் சொத்தை அபகரிப்பது, அதில் மாட்டிக்கொண்டால் ‘ஐயோ, அம்மா’ என்று கத்தி ‘நெஞ்சு வலி’ என்று சொல்வதுதான் திமுகவின் பாணியாக உள்ளது. இதை திமுக அமைச்சர்கள் மட்டுமல்ல, அடிமட்ட நிர்வாகிகள் வரை அதையே பின்பற்றுகிறார்கள். ஆனால், மருத்துவர்கள் நேர்மையாக அனைத்து விதமான பரிசோதனைகளையும் செய்ய, காவல்துறையினரும் சிறப்பான கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர்,” என்றார்.
“கோயில் சொத்துக்களை விலைக்கு வாங்கிய ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நிலத்தை விற்ற புதுச்சேரியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி என்று சொல்லப்படும் நபர் கைது செய்யப்படுவாரா?” என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “இந்த நில மோசடி வழக்கில் சட்டப்படியாக அனைத்து நடவடிக்கைகளும் தொடரும்,” என்று பதிலளித்தார்.
