கொளத்தூரில் கொத்து புரோட்டா போட்டோம் என சட்டமன்றத்தில் வீராப்பு பேசிய முதல்வர் விஜய், இன்றைக்கு அடுத்த கட்சி எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து, அதற்காகக் குதிரை பேரத்தை அரங்கேற்றிய ஜனநாயகப் படுகொலையைத் திசைதிருப்பவே பல்வேறு நாடகங்களை மேடையில் அரங்கேற்றி வருகிறார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “அனல் பறக்கும் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் மத்தியில், மதுராந்தகத்தில் இன்றைக்கு 39 இடங்களில் 5 மணி நேரம் 10 பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள செய்தி, முதல்வர் விஜய் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை கடந்த நான்கு மாத கால ஆட்சியில் வீழ்ச்சியைச் சந்தித்து வருவதைக் காட்டுகிறது. தவெக ஆட்சியின் செயல்பாடுகள், முதல்வரின் அணுகுமுறைகள் மற்றும் விஜய்யின் வசீகரம் ஆகியவை வீழ்ச்சியைச் சந்தித்து வருவதையே இந்தத் தீவிரப் பிரச்சாரம் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.
இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் தவெக வீழ்ச்சி அடைந்துவிடுமோ என்ற தோல்வி பயத்தில், தொகுதிக்கு இரண்டு நாள் தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதிலும் தேர்தல் விதிமுறைகளை மீறி, கோடிக்கணக்கான ரூபாய் செலவில் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோ நடத்துகிறார். தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள செலவு வரம்பைத் தாண்டி கோடிக்கணக்கான ரூபாய் செலவில் பிரச்சாரத்தைத் தொடர்ந்து மேற்கொள்வதோடு, ஒட்டுமொத்த அமைச்சரவையையும் தவெக சட்டமன்ற உறுப்பினர்களையும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார். இந்த நிலைமை தவெகவிற்கும் முதல்வர் விஜய்க்கும் ஏன் வந்தது? இதுதான் ஜனநாயகத்தின் வலிமை!
‘வாழ்க்கை ஒரு வட்டம்’ என்று முதல்வர் விஜய் சொல்வார். அதேபோல மேலே இருப்பவர் கீழே வருவதும், கீழே இருப்பவர் மேலே வருவதும் இயற்கை நியதியாகும்.
மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, செப்டம்பர் 25-ஆம் தேதி முதல்வர் விஜய் முதல்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக இன்றைக்கு மதுராந்தகம் தொகுதியில் வாகனத்தில் இருந்தபடியே 39 இடங்களில் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக ஒட்டுமொத்த தவெக பொறுப்பாளர்களும் தேர்தல் பணியில் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது மக்கள் ஜனநாயகத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்தார்கள். அப்போது விஜய் பிரச்சாரத்திற்கே செல்லாமல் 34.99% வாக்குகளைப் பெற்று, தவெக ஆட்சி அமைத்தது.
அதிலும் கொளத்தூர் தொகுதியில் 5 நிமிடப் பிரச்சாரத்தில் முன்னாள் முதலமைச்சரைத் தோற்கடித்துக் ‘கொத்து புரோட்டா போட்டோம்’ எனச் சட்டமன்றத்தில் வீராப்பு பேசிய விஜய், இன்றைக்கு முதல்வரான பிறகு அடுத்த கட்சிச் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, அதற்காகக் குதிரை பேரத்தை நடத்தி, பதவி ஆசை காட்டுகிறார். இவர் அரங்கேற்றி வருகின்ற ஜனநாயகப் படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த இரண்டு தொகுதி மக்களும் தீர்ப்பளிக்க உள்ளார்கள்.
இடைத்தேர்தலில் இரட்டை இலை மீண்டும் மலர இருக்கிறது. ஆகவே, குதிரை பேரம் நடத்தி பதவி ஆசை காட்டித் தொடர்ந்து அரங்கேற்றி வரும் ஜனநாயகப் படுகொலையைத் திசைதிருப்பவே, இன்றைக்கு அவர் மேடையில் பஞ்ச் டயலாக் பேசுவது, அழுகை நாடகம் நடத்துவது எனப் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகிறார்.
39 இடங்களில் 5 மணி நேரம் ஒட்டுமொத்த தவெக தொண்டர்களும் கூட்டணி கட்சித் தலைவர்களும் நியமிக்கப்பட்டிருக்கும் செய்தியே, முதல்வர் விஜய் மீது வாக்காளர்கள் வைத்திருந்த நம்பிக்கை கெட்டுவிட்டது என்பதற்குச் சான்றாகும்.
கடந்த நான்கு மாத கால தவெக ஆட்சியில் மின்சார வெட்டு, சட்டஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, லாக்கப் மரணங்கள், பெண்கள் பாதுகாப்புக்குக் கேள்விக்குறி, விலைவாசி உயர்வு – அதிலும் குறிப்பாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஆகியவை எல்லாம் விஜய்யின் ஆளுமையைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. ஒட்டுமொத்தமாக விஜய்யின் வசீகரம் வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
கொளத்தூரில் கொத்து புரோட்டா போட்டோம் எனச் சட்டமன்றத்தில் வீராப்பு பேசிய விஜய்க்கு, இந்தத் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி மக்கள் வழங்கும் தீர்ப்புதான், இனி கட்சி மாறுகின்ற கலாச்சாரத்திற்குத் தமிழகத்தில் முடிவுரை எழுதும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாக இருக்கும். அப்போதுதான் ஜனநாயகத்தின் வலிமையும், மக்கள் மீது ஜனநாயகக் கட்சிகள் வைத்திருக்கிற நம்பிக்கையும் உறுதி செய்யப்படும் என்பதை விஜய் புரிந்துகொள்ள வேண்டும். வசீகரத்தால் எதை வேண்டுமானாலும் வளைத்துவிடலாம் என நினைக்கும் விஜய்க்கு இந்த இரண்டு தொகுதிகளிலும் ஏமாற்றம்தான் கிடைக்கும்.
எடப்பாடியாரின் கருத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த இரண்டு தொகுதிகளிலும் மீண்டும் இரட்டை இலைதான் மலரும்” எனத் தெரிவித்துள்ளார்.
