”நடுவானில் என்ன நடந்தது?” : பிரதமர் மோடியிடம் கூறிய கேப்டன் ஸ்மித் மச்சார்

Published On:

| By Kavi

விமானி ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்துள்ளார். 

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி புறப்பட்ட பிளைதுபாய் விமானத்தில், நடுவானத்தில் விமானிகள் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. 

ADVERTISEMENT

கத்திக்குத்து காயம் ஏற்பட்ட போதிலும் கேப்டனாக இருந்த இந்திய விமானி ஸ்மித் மச்சார் சாதுரியமாக செயல்பட்டு 174 பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார். தற்போது அவர் சவுதியில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த நிலையில் விமானி ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசியுள்ளார். 

ADVERTISEMENT

இருவரது உரையாடல்கள்….

பிரதமர் மோடி

ADVERTISEMENT

“ஸ்மித், வணக்கம்… எப்படி இருக்கிறீர்கள்? இப்போது உடல்நிலை எப்படி இருக்கிறது?

கேப்டன் ஸ்மித் மச்சார்

வணக்கம் சார், இப்போது பரவாயில்லை… நன்றாக இருக்கிறேன்.

பிரதமர் மோடி

ஒட்டுமொத்த தேசமும் உங்களுக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறது. நாடெங்கிலும் மகா மிருத்யுஞ்சய பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. உங்கள் தைரியம், மன உறுதி மற்றும் புத்திக் கூர்மை, நொடி பொழுதில் நீங்கள் எடுத்த முடிவுகள் அத்தனை மக்களின் உயிரையும் காப்பாற்றியுள்ளன. இன்று ஒட்டுமொத்த நாடும் பெருமையுடன் சொல்கிறது, ‘நாங்கள் இந்தியர்கள்; உயிரைப் பறிப்பவர்கள் அல்ல, உயிரைக் காப்பவர்கள்’ என்று.

உங்கள் உடலில் அவ்வளவு பெரிய காயம் ஏற்பட்ட பிறகும், நீங்களே உயிருக்கும் மரணத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருந்த அந்த நேரத்திலும், உங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் அனைத்து பயணிகளின் உயிரைப் பற்றியே சிந்தித்தீர்கள். 140 கோடி இந்தியர்களின் பெருமையை உயர்த்திப் பிடித்துள்ளீர்கள். இதற்காக நான் மனதார பெருமிதம் கொள்கிறேன்.

நேற்று எனக்கு உங்கள் தந்தை பூபேந்திர பாயிடம் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. உங்கள் தாயார் கீதா பென், மனைவி சோனல் பென் ஆகியோரிடமும் பேசினேன்.

நான் கீதா பென்னிடம் சொன்னேன்… ‘உங்கள் பெயர் கீதா, ஆனால் நீங்கள் கிருஷ்ணனின் பகவத் கீதையை முழுமையாக உள்வாங்கி, அந்த கீதையின் நன்னெறிகளோடு ஸ்மித்தின் வாழ்க்கையை உருவாக்கியுள்ளீர்கள் என்றேன்.

கேப்டன் ஸ்மித் மச்சார்:

“நிச்சயமாக சார்… நீங்கள் தான் எனக்கு மிகப்பெரிய முன்மாதிரி. நீங்களே எனக்கு நேரடியாக போன் செய்து தைரியம் அளிப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.

அந்த தருணத்தில், நான் என் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தேன். ஆனால், நான் காயமடைந்து கீழே விழுந்தபோது எனக்கு ஒன்று புரிந்தது.

நான் 17 ஆண்டுகளாக விமானம் ஓட்டுகிறேன், கடந்த 11 ஆண்டுகளாக கேப்டனாக இருக்கிறேன். கண்கள் மூடி இருந்தாலும் விமானத்தில் என்ன நடக்கிறது என்று என்னால் உணர முடியும்.

நான் கீழே விழுந்து கிடந்தபோது, விமானம் கீழே இறங்குவதை உணர்ந்தேன்.  ஒரே ஒரு கடைசி முயற்சி—அந்த கதவைத் திறப்பதுதான் என்று தோன்றியது. நான் அடி வாங்கிக்கொண்டே தான் கதவைத் திறந்தேன். அதன் பிறகு மற்ற அனைவரும் வந்து உதவினார்கள், அவர்களுக்கும் இதில் பங்கு உண்டு. பயணிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும், அவர்களை இறக்க விடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். 

சவுதியிலும் இங்குள்ள மருத்துவமனையிலும் எனக்கு மிகச்சிறந்த பராமரிப்பும் மருத்துவ உதவியும் கிடைத்து வருகிறது. எனக்கு எப்போதெல்லாம் வலி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் நான் ‘ஹனுமான் சாலீசா’வை மட்டுமே மனதிற்குள் ஜெபிக்கிறேன். கடவுள் தான் என்னைக் காப்பாற்றினார். இப்போது உங்கள் அழைப்பும் வந்துவிட்டது, மிகவும் பெருமையாக உணர்கிறேன்… மன்னியுங்கள்… உங்கள் முன்னால் அழுவதற்கு…” . 

பிரதமர் மோடி

ஸ்மித், என் முன்னால் நீங்கள் உணர்ச்சிவசப்படாமல் வேறு யாரிடம் படுவீர்கள்?  நீங்கள் எவ்வளவு பெரிய சாதனையைச் செய்திருக்கிறீர்கள்! இன்று ஒவ்வொரு இந்தியரும், உலக மக்களும் உங்களிடம் பேசவும் உங்களைப் பார்க்கவும் ஆவலாக இருக்கிறார்கள் 

நீங்கள் கூறிய ஹனுமான் சாலீசா விஷயத்திற்காக கீதா பென்னையும், பூபேந்திர பாயையும் வணங்குகிறேன் . சோனல் பென்னிடம் பேசியபோது நான் ஆச்சரியப்பட்டேன். அவ்வளவு தெளிவோடும் தைரியத்தோடும் பேசினார். ஒரு குடும்பமாக நீங்கள் ஒட்டுமொத்த நாட்டின் பெயரையும் சிறப்படையச் செய்துள்ளீர்கள் .

கேப்டன் ஸ்மித் மச்சார்

நான் தினமும் காலையில் பூஜை செய்யும்போது, என் 2 வயது மகனை மடியில் அமரவைத்து ஹனுமான் சாலீசா கேட்க வைப்பேன்.  நாம், நாட்டிலிருந்து தூரத்தில் இருந்தாலும், நம் கலாச்சாரத்திலிருந்து தூரமாகிவிடக் கூடாது அல்லவா.

பிரதமர் மோடி

“மிகச் சரியான வார்த்தை  குஜராத்தின் பிற பகுதிகளிலும், இந்தியா முழுவதிலும் மக்கள் உங்களுக்காக உணர்வுப்பூர்வமாகப் பிரார்த்திக்கிறார்கள். நேற்று அனைத்து கோயில்களிலும் உங்களுக்காக ஆரத்தியும் வழிபாடுகளும் நடைபெற்றன . நீங்கள் விரைவில் குணமடைவீர்கள். உங்களை வரவேற்பதில் இந்தியா மிகவும் ஆர்வமாக உள்ளது.

உடலில் காயங்களின் வலி இருக்கலாம், ஆனால் நீங்கள் ஒரு வீரன். காயங்களை எதிர்கொள்வது உங்களுக்கு எளிதானது தான்.

கேப்டன் ஸ்மித் மச்சார்

நான் இந்தக் காயங்களை ஒரு பெரிய தடையாக நினைக்கவில்லை. இதையொரு மெதுவான பயணமாகவே கருதுகிறேன். மீண்டும் முழு ஆரோக்கியம் பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக உள்ளது

பிரதமர் மோடி

“உங்களை சிறப்பாக கவனித்துக் கொண்டதற்காக சவுதி அரசுக்கும், யு.ஏ.இ அரசுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் . ஸ்மித், உங்களுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும், ஒரே ஒரு போன் மட்டும் செய்யுங்கள்.

நேற்று சமூக வலைதளங்களில் மக்கள் தங்களின் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டதைப் பார்த்தேன். ‘ஒருவேளை ஸ்மித் இதைச் செய்யாமல் இருந்திருந்தால், இந்திய விமானிகளுக்கு.என்ன நடந்திருக்குமோ’ என்று பதிவிட்டிருந்தார்கள். நீங்கள் அனைவரையும் காப்பாற்றிவிட்டீர்கள் .

நான் உங்களை நேரில் சந்திக்கும் போது மற்ற விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன் . நீங்கள் முழுமையாகக் குணமடையுங்கள். ஒட்டுமொத்த தேசமும் உங்களுடன் இருக்கிறது .

இன்று காந்தி ஜெயந்தி. அகிம்சை மற்றும் உயிரைக் காப்பது என்றால் என்ன என்பதை நீங்கள் செய்து காட்டியிருக்கிறீர்கள்.

PM Modi speaks with Captain Smit Machchhar, wishes speedy recovery
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share