இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை சஸ்பெண்ட் செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
பொதுநலன் மனுக்களின் கோரிக்கைகள் என்ன?
ராக்கேஷ் குமார் சிங் தாக்கல் செய்த மனுவில், ”இந்திய தேர்தல் ஆணையம் பல உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு என்பதால், தலைமை தேர்தல் ஆணையர் மட்டும் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க முடியாது என அறிவிக்க வேண்டும். சர்ச்சைக்குரிய முடிவுகள் அரசியலமைப்பு மற்றும் சட்ட விதிகளின்படி எடுக்கப்பட்டதா என்பதை கண்டறிய தேர்தல் ஆணையத்தின் அசல் ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும். இடைக்கால நிவாரணமாக ஞானேஷ் குமாரை தலைமை தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
மற்றொரு மனுவை வழக்கறிஞர் ஷைலேந்திர மணி திரிபாதி தாக்கல் செய்துள்ளார். அதில், “மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களின் ஒப்புதல் இல்லாமல் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக எடுத்ததாக கூறப்படும் 14 முடிவுகளையும் ரத்து செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சைபர் பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட சுதந்திரமான நீதித்துறை விசாரணை ஆணையம் அல்லது சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.
விசாரணையில் என்ன நடந்தது?
இன்றைய விசாரணையின்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாக பதவியில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் அல்லது தலைமை தேர்தல் ஆணையராக செயல்படுவதற்கான அதிகாரத்தை அவரிடம் இருந்து பறிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஜாய்மால்ய பாக்சி, “அப்படியானால் தேர்தல்களை யார் நடத்துவது?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு, மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களும் தேர்தல்களை நடத்த முடியும் என்று விகாஸ் சிங் பதிலளித்தார்.
நீதிமன்றம் ரத்து செய்துவிட முடியும்
இதையடுத்து தலைமை நீதிபதி சூர்ய காந்த், ”இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல்களை முதலில் நீதிமன்றம் பார்க்க வேண்டும்; தேவைப்பட்டால் எந்த ஒரு முடிவையும் நீதிமன்றத்தால் ரத்து செய்ய முடியும்” என்றார்.
தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் தொடர்பாக நடைபெற்ற வாதத்தின்போது, அடுத்த விசாரணை வரை தேர்தல் ஆணையம் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் மட்டுமே முடிவுகளை எடுக்க வேண்டும் என உத்தரவிடலாம் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது தலைமை நீதிபதி சூர்ய காந்த், “அவர்கள் ஒருமித்த கருத்துடன் முடிவுகளை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றால் பெரும்பான்மை அடிப்படையில் முடிவு எடுக்கப்பட வேண்டும். தற்போதைய குற்றச்சாட்டுகள் ஒரு செய்தி அறிக்கையின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ளது” என்றார்.
அதற்கு மனுதாரர் தரப்பில், ”தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த குற்றச்சாட்டுகள் மறுக்கப்படவில்லை” என்று வாதிடப்பட்டது.
விளைவுகள் என்ன ஆகும் தெரியும்தானே?
இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், ”செய்தி அறிக்கை முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ சரியாக இருக்கலாம்; இருந்தாலும் தேர்தல் ஆணையத்தின் பதிலை நீதிமன்றம் கேட்க விரும்புகிறது. சட்டம் இருக்கும்போது அதை தேர்தல் ஆணையம் பின்பற்ற வேண்டும்; சட்டம் பின்பற்றப்படவில்லை என்பது தெரியவந்தால் அதற்கான விளைவுகள் என்ன என்பது அனைவருக்கும் தெரியும்” என்றார்.
அப்போது மனுதாரர் தரப்பில், சர்ச்சைக்குரிய 14 முடிவுகள் தொடர்பான அசல் ஆவணங்களை தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அந்த ஆவணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து நீதிபதி ஜாய்மால்ய பாக்சி, மனுதாரரின் குற்றச்சாட்டின்படி இரண்டு தேர்தல் ஆணையர்களும் இந்த முடிவுகளுக்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனரா? என்று கேள்வி எழுப்பினார்.
சட்டவிரோதம் என அறிவிக்க முடியும்
மேலும், ”தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு சில முடிவுகள் ஒருமித்த கருத்திலோ அல்லது சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முறையிலோ எடுக்கப்படவில்லை என்பது தெரியவந்தால், அந்த முடிவுகளை ரத்து செய்து சட்ட விரோதமானவை என்று அறிவிக்க முடியும்” என்று நீதிபதி ஜாய்மால்ய பாக்சி குறிப்பிட்டார்.
ஆனால், ”தேர்தல் ஆணையத்தின் பதிலை கேட்காமல், அனைத்து முடிவுகளும் தன்னிச்சையாக எடுக்கப்பட்டவை என்ற முடிவுக்கு நீதிமன்றம் வர முடியுமா? தேர்தல் ஆணையம் இந்த குற்றச்சாட்டுகளுக்கு தெளிவான மற்றும் வெளிப்படையான முறையில் பதிலளிக்க வேண்டும்” என்றார் நீதிபதி ஜாய்மால்ய பாக்சி.
Form 6-ல் புதிய நிபந்தனைகள்
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி, டெல்லியில் எஸ்.ஐ.ஆர். நடத்தப்பட்ட விதம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். மேலும் Form 6-ல் 2 புதிய நிபந்தனைகள் சேர்க்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அப்போது தலைமை நீதிபதி சூர்ய காந்த் குறுக்கிட்டு, ”Form 6-ல் செய்யப்பட்ட எந்த மாற்றத்துக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை; சம்பந்தப்பட்ட ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு Form 6-ஐ மாற்றியது யார்? என்பதை நீதிமன்றம் ஆய்வு செய்யும்” என்றார்.
ஞானேஷ்குமாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், இந்த மனுக்கள் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதே நேரத்தில் ஞானேஷ் குமாரை உடனடியாக தலைமை தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்ற இடைக்கால கோரிக்கையின் மீது உச்சநீதிமன்றம் இன்று எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
ஆனால் மற்ற 2 தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்பையும் மீறி 14 முடிவுகள் தன்னிச்சையாக எடுக்கப்பட்டதா என்பது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் பதிலையும், சம்பந்தப்பட்ட அசல் ஆவணங்களையும் நீதிமன்றம் ஆய்வு செய்ய உள்ளது.
அந்த ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு சட்டம் பின்பற்றப்படாமல் முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தால், அவற்றை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதையும் உச்சநீதிமன்றம் இன்றைய விசாரணையில் தெளிவுபடுத்தியுள்ளது.
