விஜய்-க்கு மாட்டு வண்டி ஓட்டியது ‘போலீசால் தேடப்படும்’ நபர்?- தாராபுரத்தில் புதிய சர்ச்சை!

Published On:

| By Pandeeswari Gurusamy

பொட்டிக்காம்பாளையம் வழக்கில் தொடர்புடையவர் எனக் கூறப்படும் அதிமுக நிர்வாகி, தவெக துண்டுடன் முதல்வர் விஜய் பங்கேற்ற தவெக பிரச்சாரத்தில் பங்கேற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று, தமிழக முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தாராபுரத்தில் ரோட் ஷோ சென்று வாக்கு சேகரித்தார். அப்போது விஜய் பங்கேற்ற ரோட்ஷோவில், பொட்டிக்காம்பாளையம் பகுதியில் நடைபெற்ற பிரச்சனை தொடர்பாகக் காவல்துறையால் தேடப்பட்டு வருவதாகக் கூறப்படும் நபர் மாட்டுவண்டியை ஓட்டிச் சென்றதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளராகச் சத்யபாமா போட்டியிடுகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், 20 நாட்களுக்குள் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு உடனடியாகத் தவெகவில் இணைந்தார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலில் மீண்டும் தவெக சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார்.

இதனால் சத்யபாமா பிரச்சாரம் மேற்கொள்ளும் சில பகுதிகளில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

குறிப்பாக, பொட்டிக்காம்பாளையம் பகுதியில் சத்தியபாமா பிரச்சாரத்திற்குச் சென்றபோது, குடிநீர் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சனைகளை முன்வைத்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், வேட்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளியாகின. சம்பவ இடத்தில் காவல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாகப் போலீசார் சிலரைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்ததாகவும், அங்கு நடைபெற்ற சம்பவத்தைச் செல்போனில் பதிவு செய்த கல்லூரி மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இதுதொடர்பாக மறுமலர்ச்சி திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா வெளியிட்ட அறிக்கையிலும் பொட்டிக்காம்பாளையம் சம்பவம் குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், அன்றைய சம்பவத்தில் அதிமுகவைச் சேர்ந்த அசோக் என்பவரும் வழக்கில் தொடர்புடையவராக இருந்து, அவர் தொடர்ந்து தேடப்பட்டு வந்ததாகத் தற்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்தத் தகவலைக் காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்திய தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற விஜய்யின் தாராபுரம் ரோட்ஷோவில், அதே அசோக் எனக் கூறப்படும் நபர் மாட்டுவண்டியை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் அதிமுகவைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்தப்பட்ட நிலையில், தவெக கட்சித் துண்டை அணிந்துகொண்டு விஜய்யின் பிரச்சார வாகன அணிவகுப்பில் மாட்டுவண்டி ஓட்டுநராக இருந்ததாகக் கூறப்படும் காட்சிகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

பொட்டிக்காம்பாளையம் சம்பவத்தில் எதிர்தரப்பைச் சேர்ந்தவர் எனக் கூறப்பட்ட ஒருவர், பின்னர் தவெக தலைவரின் பிரச்சார நிகழ்ச்சியில் முக்கியமான பங்கில் இருந்ததாக வெளியாகியுள்ள தகவல் குறித்து அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே, தாராபுரம் தொகுதியில் சத்தியபாமாவுக்கு எதிர்ப்பு நிலவுவதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சத்தியபாமா தரப்போ, இந்த எதிர்ப்புகள் திமுக–அதிமுக தரப்பினரால் திட்டமிட்டு உருவாக்கப்படுவதாக மறுத்து வருகிறது.

இந்நிலையில், காவல்துறையால் தேடப்பட்டு வருவதாகக் கூறப்படும் ஒருவர், மறுநாளே தவெக வேட்பாளரின் பிரச்சார நிகழ்ச்சியில் வெளிப்படையாகப் பங்கேற்றதாகக் கூறப்படும் சம்பவம், தாராபுரம் தேர்தல் களத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளக்களில் வைரலாகி வருகிறது. இதுதான் தவெக அரசு கொண்டு வந்த மாற்றமான என நெட்டிசன் கடும் விமர்சனங்கள் முன் வைத்து வருகின்றனர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share