இலங்கை சிறையில் 20 தமிழக மீனவர்கள்… 270 படகுகள்: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் 4-வது முறையாக கடிதம்!

Published On:

| By Mathi

Fishermen-Tamil Nadu-Vijay

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 20 மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள 270 மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று (அக்டோபர் 5) வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 மீனவர்களையும், 270 மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கக்கோரி, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு 5.10.2026 அன்று கடிதம் எழுதியுள்ளார்.

ADVERTISEMENT

அக்கடிதத்தில், தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து, மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்கள் தனிக்கவனம் செலுத்திட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 3.10.2026 அன்று, இராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒன்பது மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்திருப்பதோடு, அவர்களின் விசைப்படகையும் (பதிவு எண்: IND-TN-10-MM-0457) பறிமுதல் செய்துள்ளனர் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது தமிழ்நாட்டின் கடலோர மீனவச் சமூகத்தினரிடையே பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருவதாகவும் அக்கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், இராமநாதபுரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், பாரம்பரியமாகவே பாக் ஜலசந்தி பகுதியில் மீன்பிடித் தொழிலைச் செய்து தங்கள் வாழ்வாதாரத்தைப் பேணி வருகின்றார்கள் என்றும், குறிப்பாக, மீன்பிடிப்படகுகள் அவர்களின் முதலீடான வாழ்வாதாரமாக விளங்குவதால், மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் அவர்களது குடும்பங்களுக்குப் பெருந்துயரத்தையும், பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடிப்படகுகள், அவர்களின் படகமைப்பு மற்றும் மீட்பு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மிகவும் இன்றியமையாததாகும் என்றும் அக்கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

ADVERTISEMENT

இத்தகைய சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது, இரு நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகளை துரிதமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது என்றும், இதற்கென அமைக்கப்பட்டுள்ள மீன்பிடி விவகாரங்கள் தொடர்பான இந்தியா-இலங்கை கூட்டுப் பணிக்குழுவை (India–Sri Lanka Joint Working Group on Fisheries) உரிய முறையில் புனரமைத்து, அதன் கூட்டத்தை விரைவாக கூட்டி, இருநாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு ஆக்கப்பூர்வமான தீர்வுகளைக் காண நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

எனவே, இவ்விவகாரத்தை இலங்கை அரசிடம் உடனடியாகக் கொண்டு சென்று, தற்போது இலங்கையில் காவலில் வைக்கப்பட்டுள்ள 20 தமிழ்நாட்டு மீனவர்களை விரைவாக விடுதலை செய்து தாயகம் அழைத்து வரவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள 270 மீன்பிடிப் படகுகளை மீட்டுத் தரவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களை அக்கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4-வது முறை கடிதம்

தமிழக மீனவர்கள் கைது விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதுவது இது 4-வது முறை.

முன்னதாக மே 12-ஆம் தேதி 6 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து முதல் முறையாக ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதன்பின்னர் ஆகஸ்ட் 6-ஆம் தேதி 11 மீனவர்கள் கைது தொடர்பாகவும், ஆகஸ்ட் 13-ஆம் தேதி 9 மீனவர்கள் கைது தொடர்பாகவும் கடிதம் எழுதியிருந்தார்.

தற்போது இலங்கை காவலில் உள்ள 20 தமிழக மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட 270 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி அக்டோபர் 5-ஆம் தேதி 4-வது முறையாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

அத்துடன் மே 27-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேரில் சந்தித்தபோதும், இலங்கை காவலில் உள்ள தமிழக மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் வலியுறுத்தியிருந்தார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share