மீனவர் பிரச்சனை- மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய விஜய்.. ஈழத் தமிழர்கள் சொல்வது என்ன?

Published On:

| By Mathi

Fishermen Issue

இலங்கை கடற்படை செய்துள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய கோரி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம் அனுப்பி இருந்தார்.

இது தொடர்பாக இலங்கை யாழ்ப்பாணத்தில் அகில இலங்கை மீனவர் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ADVERTISEMENT

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சி.ஜோசப் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு எமது மக்கள் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையில் 30 ஆண்டுகாலப் போரினால் பாதிக்கப்பட்டு, பல பிரச்சினைகளுக்கு மத்தியில் சவால்களுடன் வாழ்ந்து வருகிறோம். இத்தகையச் சூழலில் எங்களது வாழ்வாதாரமாக இருப்பது பாக் சலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடற்பகுதிகளே.

ADVERTISEMENT

ஆனால், அந்தப் பகுதிகளில் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாகச் சட்டவிரோத மீன்பிடி முறைகளில் ஈடுபடுகின்றனர். இதைத் தடுப்பதற்காக ஏற்கனவே 4 முறை இந்திய மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னரும் பிரச்சினை தீரவில்லை.

இந்தப் பிரச்சினை குறித்துக் கடந்த காலங்களில் தமிழக அரசிடம் முறையிட்டபோது, அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த ஆயுதம் பேனா தான். உடனே பேனாவை எடுத்து வெளியுறவுத் துறை அமைச்சருக்கோ அல்லது மத்திய அரசுக்கோ கடிதம் எழுதுவார்.

ADVERTISEMENT

அதேபோலவே, இன்று முதல்வராகியுள்ள சி.ஜோசப் விஜய்யும் கடிதம் எழுதத் தொடங்கியுள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களது படகுகளை மீட்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். இது எங்களுக்கு வேதனையளிக்கிறது.

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நாங்கள் காரணமல்ல. 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி 8 மாதங்கள் காத்திருந்தோம். எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் ஒன்பதாவது மாதம் வழக்குத் தொடர்ந்தோம்.

அதாவது, வெளிநாட்டு மீன்பிடிப் படகுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தைச் செயல்படுத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். தமிழக மீனவர்களின் அலட்சியப் போக்கும், எங்களைத் தொடர்ந்து ஏமாற்றி வந்ததுமே இந்த வழக்கிற்கு முக்கியக் காரணம். அதன்படி, நீதிமன்றம் 2018-இல் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தான் எல்லை தாண்டி வரும் படகுகளும் மீனவர்களும் கைது செய்யப்பட்டு, அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படுகிறது.

பழைய அரசின் செயல்பாடுகளை எல்லாம் கைவிட்டுவிட்டு, இப்போது வந்துள்ள தமிழக முதல்வர் விஜய் இந்தப் பிரச்சினை குறித்து விரிவாக ஆராய்ந்து, சாதக பாதகங்களை அறிந்து நல்லதொரு தீர்வை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

அவரிடம் அன்புடன் கேட்க எங்களுக்கு உரிமை இருக்கிறது. அவர் இந்தியாவில் பிறந்திருந்தாலும், அவரது புகுந்த வீடு இலங்கை – யாழ்ப்பாணம் தான். அந்த வகையில் அவர் தனது புகுந்த வீட்டிற்கும் பெருமை தேடித்தர வேண்டும். அவர் நல்லதொரு தீர்வைத் தருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தமிழக மீனவப் பிரதிநிதி ஜேசுராஜா சில மாதங்களுக்கு முன்பு ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அதாவது, கடந்த காலங்களில் பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் எதிலும் முழுமையாகக் கையெழுத்திடவில்லை என்று கூறினார். ஒருவேளை அதுதான் காரணமாக இருக்குமானால், மீண்டும் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வரத் தயாராக இருக்கிறோம்.

புதிய தமிழக அரசு, இரு நாட்டு மீனவர்களையும் விரைவில் அழைத்து ஒரு புதிய பேச்சுவார்த்தையை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அந்தப் பேச்சுவார்த்தையின் மூலம் இந்திய – இலங்கை மீனவர்கள் பரஸ்பர உறவுடன் வாழ முடியும். இவ்வாறு என்.வி.சுப்பிரமணியம் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share