நம்பிக்கை வாக்கெடுப்பு நாளில் சட்டசபைக்கு போகாத 2 மதிமுக எம்.எல்.ஏ.க்கள்.. வைகோ சொன்ன “மிக முக்கிய” காரணம் இதுதான்!

Published On:

| By Mathi

MDMK Vaiko

மதிமுகவின் (MDMK) 2 எம்.எல்.ஏக்களும் இன்று மே 13-ந் தேதி சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் விஜய் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக எம்.எல்.ஏக்களும் தேமுதிகவின் ஒரே எம்.எல்.ஏ.வான பிரேமலதா விஜயகாந்தும் வெளிநடப்பு செய்தனர். ஆனால் விஜய் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவின் எஸ்பி வேலுமணி அணி, விஜய் அரசுக்கு ஆதரவளித்தது. இதனால் விஜய் அரசுக்கு 144 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைத்தது. இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அரசு வெற்றி பெற்றது.

ADVERTISEMENT

இந்நிலையில் மதிமுகவின் 2 எம்.எல்.ஏக்களான சீர்காழி செந்தில் செல்வன், கடையநல்லூர் திமு ராஜேந்திரன் ஆகியோர் இன்றைய சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மதிமுகவின் ”மிக முக்கியமான நிர்வாக குழு கூட்டம்“ ”நடைபெற்றதால் 2 பேரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவித்தார்.

ADVERTISEMENT

மதிமுகவின் 2 எம்.எல்.ஏக்களும் தேர்தலில் திம்கவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அரசு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய நிலையில் நடத்தப்பட்ட மதிமுகவின் “மிக முக்கியமான” நிர்வாகக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

ADVERTISEMENT

தீர்மானம்: 1

தமிழ்நாட்டில் 17 ஆவது சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23, 2026 இல் நடைபெற்று, தமிழ்நாட்டு மக்கள் ஜனநாயகத்தின் தீர்ப்பை வழங்கி உள்ளனர். அதன்படி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், மதச்சார்பின்மை, சமூக நீதி, கூட்டாட்சிக் கொள்கை, போதை கலாச்சார ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு இவற்றைப் பாதுகாத்து, இந்த நெறிகளில் இருந்து இம்மி அளவும் பிசகாமல் தமிழக அரசின் ஆட்சியை நடத்திட வேண்டும் என்று இந்த நிர்வாகக் குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்: 2

தமிழ்நாட்டில் சீமைக் கருவேல மரம் என்று அழைக்கப்படுகின்ற வேலிக் கரிவேலம் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வேரூன்றிப் பரவி விவசாயத்தைப் பாழ்படுத்துவதோடு, நல்ல குடிதண்ணீர் கிடைப்பதற்கும் வாய்ப்பின்றி செய்வதால் சில நாடுகளில் பிசாசு மரம் என்று அழைக்கப்படுகின்ற இந்த வேலிக் கருவேல மரங்களை (Devilstree) அகற்றுவதற்காக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 10.09.2015 ஆம் நாள் அன்று கழகப் பொதுச்செயலாளர் – வழக்கறிஞர் வைகோ அவர்கள் தாக்கல் செய்த வழக்கில் தொடர்ந்து சில அமர்வுகளில் Juli flora எனப்படும் வேலிக் கருவேல மரங்களால் தமிழகத்தில் வேளாண்மைக்கும், சுற்றுச் சூழலுக்கும் ஏற்பட்டுள்ள கேடுகளை தீங்கினை புள்ளி விவரங்களோடு தனது வாதத்தில் முன்வைத்த பின்னணியில், நீதியரசர் மாண்புமிகு எ.செல்வம், நீதியரசர் மாண்புமிகு கலையரசன் ஆகியோர் சீமைக் கருவேல மரங்களை தமிழ்நாட்டில் அகற்றுகின்ற பணியில் அரசாங்க அதிகாரிகளும், நீதித்துறை நீதிபதிகளும், விவசாய பெருமக்களும், அனைத்துத் தரப்பினரும் ஈடுபட வேண்டும். இப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கண்காணித்து மேற்பார்வையிட வேண்டும் என்று 21.12.2016 ஆம் நாள் அன்று தீர்ப்பு வழங்கியதோடு, வழக்கில் வாதாடிய வைகோ அவர்களைப் பார்த்து, நீங்களே உங்கள் கட்சித் தோழர்களை இணைத்துக் கொண்டு இந்தப் பிசாசு செடியை அகற்றுவதற்கு முன்வர வேண்டும் என்றும் அறிவித்தார்.

அதன் அடிப்படையில் தொடர்ந்து பல நாட்கள் வைகோ அவர்கள் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் கழகக் கண்மணிகள் மற்றும் விவசாயிகளோடு இணைந்து பல ஊர்களில் அப்பணியைச் செய்தார்.

கழகப் பொதுச்செயலாளர் வைகோ தாக்ககல் செய்த வழக்கு தொடர்ந்து நிலுவையில் இருந்தது. 18.03.2026 ஆம் நாள் அன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்றத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு அரசாங்கமும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று நீதியரசர் மாண்புமிகு சதீஷ்குமார், நீதியரசர் மாண்புமிகு பரத் சக்ரவர்த்தி அமர்வில் தீர்ப்பளித்தனர்.

சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றதால், உடனடியாக அந்தப் பணியில் ஈடுபட முடியாததால், தற்போது வைகோ அவர்களும், கழகத் தோழர்களும், வேளாண் பெருங்குடி மக்களும் வேலிக் கருவேலையை அகற்றுகின்ற பணியில் ஈடுபடுவது என்றும் ஜூன் 1 ஆம் தேதி கலிங்கப்பட்டி ஊராட்சியில் தொடங்குவது என்றும், பின்னர் ஜூன் 2 தூத்துக்குடி மாவட்டத்திலும், ஜூன் 4 ஆம் தேதி தஞ்சை வடக்கு மாவட்டத்திலும், ஜூன் 8 ஆம் தேதி செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்திலும், ஜூன் 10 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலும், ஜூன் 11 ஆம் தேதி விருதுநகர் மேற்கு மாவட்டத்திலும், ஜூன் 12ஆம் தேதி மதுரை வடக்கு மாவட்டத்திலும், ஜூன் 13 ஆம் தேதி மதுரை மாநகர் மாவட்டம், ஜூன் 19 ஆம் தேதி விருதுநகர் மத்திய மாவட்டத்திலும், 21 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திலும், ஜூன் 30 ஆம் தேதி செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்திலும், ஜூலை 2 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திலும், 06 ஆம் தேதி திருப்பூர் வடக்கு மாவட்டத்திலும், 7 ஆம் தேதி கோவை வடக்கு மாவட்டத்திலும், 11 ஆம் தேதி கடலூர் கிழக்கு மாவட்டத்திலும் இப்பணியில் ஈடுபடுவது என்றும், மீதம் உள்ள மாவட்டங்களுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தீர்மானிக்கப்படுகிறது.

இப்பணியில் ஈடுபடுதற்காக வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சு.ஜீவன், மாநில தொண்டர் அணி செயலாளர் ஆ.பாஸ்கரசேதுபதி, கழக அமைப்புச் செயலாளர் சு.குருநாதன், அரசியல் ஆலோசனைக் குழுச் செயலாளர் சிப்பிப்பாறை அ.இரவிச்சந்திரன், அரசியல் ஆய்வு மையச் செயலாளர் ஆவடி இரா.அந்திரிதாஸ், மாநில தீர்மானக்குழுச் செயலாளர் கவிஞர் மா.மணிவேந்தன், மாநில விவசாய அணிச் செயலாளர் வாரணவாசி இராஜேந்திரன், மாநில இளைஞர் அணிச் செயலாளர் ப.த.ஆசைத்தம்பி, மாநில மாணவர் அணிச் செயலாளர் பால சசிகுமார், மாநில ஆபத்து உதவிகள் அணிச் செயலாளர் த.சுமேஷ் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.

தீர்மானம்: 3

1. தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் வட்டம், சிவகிரி வட்டம், திருவேங்கடம் வட்டம் பகுதிகளில் உள்ள 25 ஆயிரம் ஏக்கர் நன்செய் நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் உள்ளாறு அணைக்கட்டுத் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும்.

2. மேற்கு மலைத் தொடர் சரிவுகளிலிருந்து கூட்டம் கூட்டமாக வரும் காட்டுப் பன்றிகள் தென்காசி, நெல்லை மாவட்டங்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பகுதிகளில் உள்ள விவசாயப் பயிர்களை நாசப்படுத்தி அழிக்கும் பெருந் தீமையிலிருந்து விவசாய நிலத்தைப் பாதுகாக்கும் வகையில் காட்டு விலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப் பன்றிகளை நீக்கும் முடிவினை மத்திய அரசு செயல்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வலியுறுத்தியும்.

3.தியாகச் சுடர் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ள செண்பகவல்லி தடுப்பணை சற்று பழுது பட்டதால் அதைச் செப்பனிட நினைவில் வாழும் வாழும் முதலமைச்சர் எம்.ஜி ஆர் அவர்கள் ஆட்சி காலத்தில் கேரள அரசுக்கு அனுப்பிய பணத்தை சில ஆண்டுகள் கழித்து கேரள அரசு திருப்பி அனுப்பி விட்டது. தமிழகத்திற்கு பயன்பட்டு வந்த அந்தத் தண்ணீர் தற்போது யாருக்கும் பயனின்றி கடலில் போய்ச் சேருகிறது. 25 ஆயிரம் ஏக்கர் தமிழ்நாட்டில் உள்ள நன்செய் நிலங்களுக்கு பாசன வசதி வழங்கிய நிலைமை அடியோடு தடுக்கப்பட்டுவிட்டது.

பின்னர் அந்த தடுப்பணையை கேரள அரசு உடைத்துவிட்டது. கேரள மாநில முதலமைச்சராக மாண்புமிகு உம்மன்சாண்டி ஆட்சி நடத்திய காலத்தில் பொதுச் செயலாளர் வைகோ அவர்களும், விவசாய சங்கத் தலைவர்களும் கேரள முதல்வரைச் சந்தித்து, செண்பகவல்லி அணையை முழுமையாக மீண்டும் எழுப்ப வேண்டும் என்று முன்வைத்தக் கோரிக்கையை அவர் ஏற்றுக் கொண்டு, தனது அரசின் தலைமைச் செயலாளரிடம் ஆணையிட்டார். ஆனால், மூன்று மாதத்திற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் அமைந்த மார்க்சிஸ்ட் கட்சி அரசிடம் குறிப்பாக கேரள முதல்வர் அச்சுதானந்தன் அவர்களிடமும், பின்னர் முதலமைச்சராக வந்த பினராயி விஜயன் அவர்களிடமும் கழகப் பொதுச்செயலாளர் வைகோ செண்பகவல்லி அணையை எழுப்பித் தருமாறு விடுத்த வேண்டுகோள் அப்படியே உள்ளது.

இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விவசாயிகள் சார்பில் செண்பகல்லி அணையை மீண்டும் கட்டுவதற்கு வை.ரவிச்சந்திரன் தாக்கல் செய்த ரிட் மனு தற்போது நிலுவையில் இருக்கிறது.

செண்பகவல்லி தடுப்பணையை மீண்டும் கட்டுவதற்கு கேரள அரசை தமிழக அரசு வலியுறுத்தவும். அதற்கான செலவுத் தொகையை தமிழக அரசு ஒதுக்கீடு செய்யவும் வலியுறுத்திடவும்,

மேற்கூறப்பட்ட மூன்று காரணங்களுக்காக ஜூன் 5 ஆம் தேதி வெள்ளிக் கிழமை அன்று வாசுதேவநல்லூரில் பெருமளவில் விவசாயிகள் பங்கேற்கும் உண்ணாநிலை அறப்போரை கழகப் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம்: 4

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கும், தேர்தலில் கடுமையான உழைப்பைத் தந்து களப்பணி ஆற்றிய தோழமை கட்சிகளுக்கும் மறுமலர்ச்சி திமுக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இக்கூட்டம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்: 5

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட்ட மதுரை தெற்கு, கடையநல்லூர், மொடக்குறிச்சி, சீர்காழி (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் வாக்களித்த மக்களுக்கும், கடையநல்லூர், சீர்காழி (தனி) தொகுதிகளில் கழக வேட்பாளர்களான தி.மு.இராசேந்திரன், இரா.செந்தில்செல்வன் ஆகியோருக்கு பெருவாரியான வாக்குகள் அளித்து வெற்றி பெறச் செய்த அத்தொகுதிகளின் வாக்காளர்களுக்கும், பொதுமக்களுக்கும் மறுமலர்ச்சி திமுக சார்பில் நன்றி மலர்களை காணிக்கை ஆக்குகிறோம்.

தீர்மானம்: 6

ஒன்றிய பா.ஜ.க. அரசின் தேசிய கல்விக் கொள்கையில் பி.எம்.ஸ்ரீ திட்டம், இடம்பெற்றுள்ளது. இதில் மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளதால், திமுக அரசு இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது. இதன் விளைவாக தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய சுமார் 3500 கோடி ரூபாய் கல்வி நிதியை நிறுத்தி வைத்தது.

இத்திட்டத்தில் சேருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே சம்ரக் சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிதியை அளிக்க முடியும் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழ்நாட்டுச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து புதிய அரசு அமைவதற்குள்ளாகவே மே-6 ஆம் தேதி ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு கெடு விதித்து கடிதம் அனுப்பியது. தலைமைச் செயலாளருக்கு நெருக்கடி கொடுத்து ஆளுநர் மூலம் மும்மொழித் திட்டத்தை தமிழ்நாட்டில் புகுத்த முயற்சித்த ஒன்றிய அரசுக்கு மறுமலர்ச்சி திமுக கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள விஜய் தலைமையிலான அரசு, ஒன்றிய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திடக் கூடாது; மும்மொழிக் கல்வித் கொள்கையை ஏற்கக் கூடாது என்று மறுமலர்ச்சி திமுக வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 7

தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் மே 11 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில், காணொளி வாயிலாக’ பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு ஏழு கோரிக்கைகளை பின்பற்றுமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1. சாத்தியமுள்ள இடங்களில் வீட்டில் இருந்து வேலை செய்ய முன்னுரிமை கொடுக்க வேண்டும்,

2. ஓராண்டுக்கு தங்கம் வாங்காதீர்கள்.

3. பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறையுங்கள்; பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள்.

4. சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறையுங்கள்.

5. ரசாயன உரம் சார்ந்து இருப்பதை குறையுங்கள்; இயற்கை வேளாண்மைக்கு மாறுங்கள்.

6. வெளிநாட்டுப் பொருட்களுக்கு பதிலாக சுதேசிக்கு மாறுங்கள்.

7. ஓராண்டுக்கு வெளிநாட்டுச் சுற்றுலா தவிருங்கள்.

பிரதமர் முன் வைத்துள்ள இவை அனைத்தும் 12 ஆண்டு கால மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் தோல்வியை வெளிப்படுத்தும் வகையில் இருக்கின்றன.

பிரதமரின் ஏழு கட்டளைகள் நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை இருக்கிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

இந்தியாவின் தற்போதைய பொருளாதார நிலைமைப் பற்றியும், பிரதமரின் அறிவிப்புக்கானப் பின்னணி குறித்தும் ஒன்றிய அரசு ஒளிவு மறைவு இன்றி நாட்டு மக்களுக்கு உண்மை நிலையை முன் வைக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக நிர்வாகக் குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம்: 8

மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று சுவேந்து அதிகாரி தலைமையில் ஆட்சி அமைந்திருக்கிறது.

15 ஆண்டுகளாக ஆட்சி பீடத்தில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு , இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப் பாவையாக ஆனது தான் காரணம் என்று மம்தா பானர்ஜி குற்றம் சுமத்திருக்கிறார்.

இந்நிலையில் பாஜக வெற்றி பெற்றவுடன் மேற்குவங்கம் முழுவதும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகங்கள் சூறையாடப்படுகின்றன. முர்ஷிதாபாத் மாவட்டத்தில் புரட்சியாளர் லெனின் சிலை உடைக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் பாஜக நடத்தி வரும் வன்முறைகளுக்கு மறுமலர்ச்சி திமுக கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. மேற்கு வங்கத்தில் அமைதியை நிலை நாட்ட வேண்டிய கடமையும் பொறுப்பும் ஒன்றிய அரசு மற்றும் மேற்குவங்க மாநில பாஜக அரசுக்கு இருக்கிறது என்பதை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 9

கடந்த 2023-ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகே செயல்பட்டு வந்த 500 டாஸ்மாக் மதுக்கடைகள் திமுக அரசால் மூடப்பட்டது .

அதன் பின்னர் தற்போது தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை மூட, தற்போது தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளதை மறுமலர்ச்சி திமுக வரவேற்கிறது.

முழு மதுவிலக்கே எங்கள் இலக்கு என்பதை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே தமிழ்நாட்டில் அமைந்துள்ள புதிய அரசு மதுக்கடைகளை படிப்படியாக மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்திடவும்

மூடப்படும் மதுபான கடைகளில் பணி புரியும் ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கி அவர்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும் மறுமலர்ச்சி திமுக நிர்வாகக் குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம்: 10

2026 மே 23 ஆம் நாள் அன்று கடையநல்லூரில் வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி அறிவிப்புக் கூட்டம், மே 27 ஆம் நாளன்று சீர்காழியில் வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி அறிவிப்புக் கூட்டம் நடத்துவது என்றும், கழகப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட முன்னணியினர் அக்கூட்டங்களில் பங்கேற்பது என்றும்,

2026 ஜூன் 27 ஆம் தேதி அன்று கழகத்தின் 32 ஆவது பொதுக்குழுவை சென்னையில் நடத்துவது என்றும்,

ஜூலை 17 ஆம் நாள் அன்று சங்கொலி 30 ஆம் ஆண்டு நிறைவு விழாவை சென்னையில் நடத்துவது என்றும் கழக நிர்வாகக் குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம்: 11

நாடு முழுவதும் கடந்த மே 3 ஆம் தேதி நீட் தேர்வு முடிவடைந்த நிலையில், ராஜஸ்தான் மற்றும் உத்ரகண்ட் மாநிலங்களில் வினாத் தாள் கசிந்தது சமூக வலைதளங்களில் மூலம் அம்பலமாகி இருக்கிறது. அதிலிருந்த 180 கேள்விகளில் 140 கேள்விகள் அசல் வினாத் தாளுடன் அப்படியே ஒத்துப் போனது. இதனையடுத்து நீட் தேர்வை இரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனால் நாடு முழுவதும் நீட் தேர்வு எழுதிய 23 இலட்சம் மாணவர்களின் உழைப்பு குடும்பத்தினரின் கனவு மோடி அரசால் உருக்குலைந்திருக்கிறது.

இதுபோன்ற நீட் தேர்வு வினாத் தாள் கசிந்ததால் 2024 ஆண்டிலும் நீட் தேர்வு இரத்து செய்யப்பட்டு, மறு தேர்வு நடத்தப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளில் நீட் வினாத்தாள் நான்கு முறை கசிந்தது. தற்போதும் அதே நிலை உருவாகி, மோடி அரசின் மீதான நம்பகத்தன்மை, தேர்வு நடத்தும் முறை ஆகியவை பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

நீட் தேர்வு அறிமுகமானதிலிருந்து தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்துக் கொண்டு வருகிறது. இந்நிலையில், நீட் தேர்வு மோசடிகளை களைவது மட்டும் தீர்வாகாது. மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வையே இரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு மீண்டும் ஒன்றிய அரசுக்கு இதற்காக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக வலியுறுத்துகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share