தவெக தலைவர் விஜய் ஆரம்பத்திலேயே தவறான பாதைக்கு செல்கிறார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளர்.
சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக வெற்றி பெற்றது. இதில் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தரப்பு அதிமுகவை சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
எடப்பாடி தரப்பில் இருந்த 22 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு எதிராக வாக்களித்தனர். சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசு நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தது. அதில் அதிமுக உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று அவையில் நான் பேசினேன்.
ஏற்கனவே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி, என்னை சட்டமன்றக் கட்சிக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அதன் அடிப்படையில் மற்ற பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். கொறடாவாக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டார்.
அவர் மூலம் மின்னஞ்சல், SMS உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு சில முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுகவிற்கு துரோகம் இழைக்கும் விதத்தில் நேற்று அறிவிப்பு வெளியிட்டனர்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று கொறடா அனைத்து உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவித்த பிறகும், அவர்கள் ஆளும் அரசுக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் புகார் அளிக்க உள்ளோம். அதிமுகவுக்கு சில எம்.எல்.ஏ.க்கள் துரோகம் செய்துள்ளனர். கொறடா உத்தரவை மீறி சட்டத்திற்கு புறம்பாக தவெக அரசுக்கு வாக்களித்துள்ளனர்.
6 அமைச்சர்கள் மற்றும் 10 வாரியத் தலைவர்கள் பதவி கொடுப்பதாக தவெக பேரம் பேசியுள்ளது. அதனால் அவர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஜெயலலிதா புகழ் சொல்லி தான், இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றோம். அதிமுகவுக்கு விசுவாசம் இல்லாமல் துரோகம் விளைவிக்கிறார்கள் சில முன்னாள் அமைச்சர்கள்.
தூய்மையான ஆட்சி நடத்துவேன் என்று சொல்லும் முதல்வர் விஜய், ஒரு கட்சியில் கருத்து வேறுபாடும் நிலவும்போது ஒரு தரப்பினரை சந்திப்பது எந்த விதத்தில் நியாயம்?. இதுதான் தூய்மையா? எல்லா இயக்கங்களுக்கும் சோதனைவரும், பிரிவு வரும். ஆனால், எந்த தலைவரும் பிரிந்தவர்களின் இல்லங்களுக்கு சென்றது இல்லை. ஆரம்பத்திலேயே தவறான பாதைக்கு செல்கிறார் தவெக தலைவர் விஜய். இது தவறான முன்னுதாரணம்.
108 இடங்களில் மட்டும் தான் தவெக வென்றது. விஜய் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ததால் எண்ணிக்கை 107 ஆனது. ஒரு எம்.எல்.ஏ. வாக்களிக்க முடியாததால் எண்ணிக்கை 106 ஆனது; விஜய் தேர்தலின்போது சொன்ன நடைமுறைகளை இப்போது பின்பற்றவில்லை. நானாக தனிப்பட்ட முறையில் வேட்பாளர்களை தேர்வு செய்யவில்லை.
தேர்தல் பிரசாரத்தில் நான் திமுகவை தான் தாக்கி பேசினேன். அதிமுக உருவானதே திமுகவை எதிர்த்து தான். தவெக அமைச்சரவையில் இடம்பெற வேண்டுமென்ற ஆசையில் நிர்வாகிகளிடம் தவறான தகவலை சொல்கின்றனர்; நூற்றுக்கு நூறு சதவீதம் திமுகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. பெரும்பான்மை சிறுபான்மை என்பது இப்போது முக்கிய இல்லை. யார் பொதுச்செயலாளர் என்பது தான் இங்கு முக்கியம். கட்சியின் அதிகாரம் என்னிடம் உள்ளது. கொறடாவை நியமிக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்குத்தான் உள்ளது. சட்டப் பேரவையில் விதி, மரபு பின்பற்றப்படவில்லை.” என குற்றம் சாட்டினார்.
