தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை கூடியதும் முதலமைச்சர் விஜய் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு முன்மொழிந்தார்.
இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர் ராஜேஷ் குமார் பேசுகையில், “இன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெறும் வரலாற்றுப் புகழ்மிக்க தருணம் இது. இந்திய அரசியல் சாசனத்தையும், மதச்சார்பின்மையையும், சமூக நீதியையும் பாதுகாக்கும் பொறுப்புணர்வோடு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி இந்த அரசுக்கு தனது ஆதரவை வழங்குகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் மிகத் தெளிவாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று இந்த அவையில் மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
மக்கள்,முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையை ஏற்கச் செய்துள்ளனர். ஆனால் பெரும்பான்மைக்கு பத்து உறுப்பினர்கள் குறைவாக இருந்த நிலையில், ஒரு கேள்வி எழுந்தது: மக்கள் வழங்கிய ஆணையை மதிக்க வேண்டுமா? அல்லது பின்னால் இருந்து சில அரசியல் சக்திகள் தமிழக மக்களின் முடிவை மாற்ற முயற்சிக்க வேண்டுமா?அந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சியின் ஐந்து உறுப்பினர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் தலா இரண்டு உறுப்பினர்களும் ஆதரவளித்து, மதச்சார்பற்ற கூட்டணி பெரும்பான்மையைத் தாண்டியது.
முக்கியமாக, முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் கூறியது போன்று, இந்த ஆதரவு ஐந்து மதச்சார்பற்ற கட்சிகளிடம் இருந்து வந்துள்ளது என்பதை இந்த அவையின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.இந்த ஆதரவு அரசியல் லாபத்திற்கான ஆதரவு அல்ல. இது ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் ஆதரவு. இது தமிழக மக்களின் தீர்ப்பை மதிக்கும் ஆதரவு. தமிழ்நாட்டில் பாஜகவின் மறைமுக ஆட்சியை அனுமதிக்கக் கூடாது என்ற உறுதியின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஆதரவு.
தமிழகம் எப்போதும் மதச்சார்பற்ற அரசியலின் மண். இந்த மண் வெறுப்பு அரசியலை ஏற்றுக்கொண்டதில்லை. மதத்தின் பெயரில் மக்களைப் பிரிக்கும் அரசியலை ஏற்றுக்கொண்டதில்லை. மொழி ஆதிக்கத்தையும், ஒரே கலாச்சார அரசியலையும் தமிழக மக்கள் தொடர்ந்து நிராகரித்து வருகின்றனர். இந்தத் தேர்தலிலும் அதை மக்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர்.மிகப் பெரிய கனவுகளுடன் தமிழகத்தில் காலூன்ற முயன்ற பாஜக இப்போது ஒரே ஒரு உறுப்பினருடன் மட்டுமே இந்த அவையில் உள்ளது. அதுவே தமிழக மக்களின் தீர்ப்பு.“மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. மக்கள்தான் எஜமானர்கள்” என்று பெருந்தலைவர் காமராஜர் கூறியதை இந்த நேரத்தில் நினைவு கூற விரும்புகிறேன். ” என தெரிவித்தார்.
