இது எனக்கு மட்டுமல்ல.. தமிழ்நாட்டு பெண்களின் ஆசை – சௌமியா அன்புமணி

Published On:

| By Pandeeswari Gurusamy

Sowmiya Anbumani

என் பேரக்குழந்தைகள் வளர்ந்து வரும்போது, போதை இல்லாத, மதுப் பழக்கம் இல்லாத தமிழகம் உருவாகியிருக்க வேண்டும். அது என்னுடைய ஆசை மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பெண்களின் ஆசையும் அதுதான் என சௌமியா அன்புமணி தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய்யின் தலைமையிலான தவெக அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பேசுகையில், ” விஜய் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேச வாய்ப்பளித்தமைக்காக தங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

சமூக நீதி, ஜனநாயகம், சமத்துவம் ஆகியவைதான் பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளாகும். இந்தக் கொள்கை நோக்கங்களை எட்டுவதற்காகவே பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. போதை இல்லாத தமிழ்நாடு, சமூக நீதி மற்றும் வளர்ச்சியில் சிறந்த புதிய தமிழகம் படைப்போம் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகளும் நோக்கங்களும் எப்போதும் தமிழ்நாட்டின் நலனையே முன்னிறுத்துபவையாகும். தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சமூகநீதி கணக்கெடுப்பு எனப்படும் சாதிவாரி சர்வே நடத்த வேண்டும். அதன் அடிப்படையில் அனைத்து சமூகங்களுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்.

பெண்களின் பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும் உறுதி செய்ய வேண்டும். முழு மதுவிலக்கை அமல்படுத்தி போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து பாசனத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் நியாயமான விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்வதை உறுதி செய்ய வேண்டும். உழவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும். தரமான, திறன் சார்ந்த கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வழங்க வேண்டும். தனியார் துறை வேலைவாய்ப்புகளில் 80 சதவிகிதத்தை தமிழக இளைஞர்களுக்கு வழங்க சட்டம் இயற்ற வேண்டும். அனைவருக்கும் தரமான மருத்துவ வசதியை இலவசமாக வழங்க வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும்.

ADVERTISEMENT

சதுப்பு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். மணல், கிரானைட், கருங்கல் உள்ளிட்ட கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். தமிழ்மொழியின் வளர்ச்சியையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்க வேண்டும். இவையே பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய நோக்கங்களாகும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான ஆளுங்கட்சி, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகளுடன் ஒத்துப் போகும் வகையில் வாக்குறுதிகளை அளித்தது.

குறிப்பாக, அனைத்து சமூகங்களுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் வழங்க சாதிவாரி சர்வே நடத்துதல், மகளிர் பாதுகாப்பை உறுதி செய்தல், மது வணிகத்தைக் கட்டுப்படுத்துதல், வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான கொள்முதல் விலை, அரசு மற்றும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகளை அதிகரித்தல், தனியார் துறை வேலைவாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75 சதவிகித ஒதுக்கீடு வழங்கும் நிறுவனங்களுக்கு 2.5 சதவிகித GST மானியம் மற்றும் 5 சதவிகித மின்சார மானியம் வழங்குதல், நதிகள் இணைப்பு உள்ளிட்ட பாசனத் திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மணல் கொள்ளையைத் தடுத்தல் ஆகிய வாக்குறுதிகளை அளித்திருந்தது.

ADVERTISEMENT

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையாக, வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், மக்கள் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள 717 மதுக்கடைகளை அடுத்த இரு வாரங்களுக்குள் மூட உத்தரவிட்டிருக்கிறார். இந்த நடவடிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது மற்றும் பாராட்டுகிறது. மது ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் போராடி வருகிறோம். உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தி, தேசிய அளவில் 90,000 மதுக்கடைகளையும், தமிழ்நாட்டில் 3,321 மதுக்கடைகளையும் மூடச் செய்தது பாட்டாளி மக்கள் கட்சிதான். தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கையும் போதைப் பொருள் ஒழிப்பையும் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்தால் அதை பாட்டாளி மக்கள் கட்சி மனமார்ந்து வரவேற்கும். எனக்கு ஒரு ஆசை. என்னுடைய பேரக்குழந்தைகள் வளர்ந்து வரும்போது, போதை இல்லாத, மதுப் பழக்கம் இல்லாத தமிழகம் உருவாகியிருக்க வேண்டும். அது என்னுடைய ஆசை மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பெண்களின் ஆசையும் அதுதான்.

போதைப் பழக்கமும் மதுப் பழக்கமும் நம் இளைஞர்களைச் சீரழித்துக் கொண்டிருக்கின்றன. நம் குழந்தைகள் எப்படி வளரும், ஒழுக்கமாக இருப்பார்களா என்பது இன்று சந்தேகத்திற்குரிய நிலையில் தமிழகம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இது எல்லா தாய்மார்களின் ஆசையும் ஆகும். அதற்கு முதற்கட்டமாக நேற்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டிருக்கிறார். அதை நாங்கள் மனமார்ந்து பாராட்டுகிறோம், வரவேற்கிறோம் மற்றும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நேரத்தில், என்மீது அன்பும் பாசமும் வைத்து என்னை தர்மபுரி தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுத்த தர்மபுரி மக்களுக்கு கோடானுகோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏனெனில், தர்மபுரி மாவட்டத்தில்தான் மது பழக்கமும் மது வணிகமும் அதிகம் உள்ளது. Per capita alcohol consumption அதிகம் உள்ள மாவட்டம் தர்மபுரி ஆகும். அப்படிப்பட்ட மாவட்டத்தில் 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டிருப்பது மிகப் பெரிய நடவடிக்கையாகும். இதைப் பெண்கள் அனைவரும் வரவேற்கிறார்கள். என்னுடைய தர்மபுரி தொகுதியில் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள மூன்று டாஸ்மாக் கடைகளை நேற்று மூடியிருக்கிறார்கள். இதற்கு எங்கள் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் ஒரு மதுக்கடையை மூடினால் அதற்கு அருகில் நான்கைந்து சந்துக் கடைகள் திறக்கப்படுகின்றன. இது தமிழகம் முழுவதும் நடைபெறுவதை நாங்கள் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். எனவே, இதில் கண்காணிப்புடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். ஒரு கடையை மூடினால் பக்கத்தில் புதிய கடைகள் திறக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அப்போதுதான் நம் இளைஞர்களையும், பெண்களையும், தமிழ்ச் சமூகத்தையும் காப்பாற்ற முடியும். இதற்கு தொடர் முயற்சியும் நீடித்த விழிப்புணர்வும் (Sustained Effort) தேவைப்படுகிறது.

அடுத்ததாக, என்னைப் போன்ற பெண்கள் படிப்பதற்கும், கல்லூரிக்குச் செல்வதற்கும், வேலைக்குச் செல்வதற்கும், சட்டமன்றத்தில் பேசுவதற்கும், ஓட்டுரிமை பெறுவதற்கும் கூட எத்தனை நூற்றாண்டுகள் ஆயின! ஆனால் இன்று பெண்கள் அனைத்தையும் மீறி முன்னேறி வருகிறார்கள். என்றாலும், போதைப் பழக்கம் மற்றும் மதுப் பழக்கம் இருக்கும் வரை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. டாஸ்மாக் கடையைத் தாண்டும் போது பெண்கள் தலை குனிந்தபடியே செல்கிறார்கள். ஏனெனில், கண் பார்வை பட்டால் ஏற்படும் விமர்சனங்கள், கேலி, தொல்லைகளுக்கு அஞ்சுகிறார்கள். இந்தப் போதைப் பழக்கம்தான் பெண்களை வீட்டுக்குள் மீண்டும் தள்ளும் நிலையை உருவாக்குகிறது. பெண்கள் பாதுகாப்பு இன்று மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. படிக்க அனுப்ப பயம், ஹாஸ்டல் அனுப்ப பயம், வேலைக்கு அனுப்ப பயம், இரவில் பத்திரமாக வீடு திரும்புவார்களா என பயம் — எல்லாம் பயம்தான். இதைத் தடுப்பதற்காக முதலமைச்சர் அவர்கள் “சிங்கப் பெண்” தனிப்பிரிவை ஏற்படுத்தியிருப்பதற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், இந்தத் துறையைத் தனியாக ஏற்படுத்தி ஒரு DGP தலைமையில் பெரிய குழுவை அமைத்தால் அது பெண்கள் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, பெண்கள் சாதனைக்கும் (Women Empowerment) மிகப் பெரிய நடவடிக்கையாக அமையும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். ஒரு பெண்ணாக, பாட்டி வீட்டுக்குப் பத்திரமாகச் சென்று வர வேண்டும் என்ற அடிப்படை உரிமை கூட இன்று கேள்விக்குறியாக இருப்பதை மனம் குமுறும் நிலையில் தெரிவித்துக் கொள்கிறேன். இறுதியாக, சமூக நீதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயல்களையோ, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளையோ தமிழக அரசு மேற்கொண்டால் அதை பாட்டாளி மக்கள் கட்சி எதிர்க்கும். இந்த அடிப்படையில், தமிழ்நாட்டின் முன்னேற்றத்தையும் தமிழக மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, விஜய் அவர்கள் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பாட்டாளி மக்கள் கட்சி விலகி இருக்க விரும்புகிறது. We are abstaining from voting.” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share