VIDEO: “விஜய்யை நம்பி ஓட்டு போட்டோமே”… நள்ளிரவிலும் நீடித்த செவிலியர்கள் போராட்டத்தால் பதற்றம் – பேச்சுவார்த்தை பெயரில் கைது; குழந்தையை தாக்கியதாக புகார்!

Published On:

| By Mathi

Chennai-Nurses Protest

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது. இதனையடுத்து சுகாதாரத்துறை செயலாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடைநிலை சுகாதாரப் பணியாளர்களாக (Mid-Level Healthcare Providers – MLHP) செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், மாத ஊதியத்தை ரூ.45,000 உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

மேலும் 2023, 2024-ஆம் ஆண்டுகளுக்கான நிலுவை ஊக்கத்தொகையை வழங்க வேண்டும், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், MLHP பணியிடத்தை Community Health Officer (CHO) என பெயர் மாற்றம் செய்து அதற்கான சான்றிதழ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் செவிலியர்கள் முன்வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த செவிலியர்கள் நேற்று (அக்டோபர் 5) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே திரண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை தொடங்கிய போராட்டம் இரவு வரை நீடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர்களது தரப்பில் 5 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

ADVERTISEMENT

அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்வதாக போலீசார் தெரிவித்த நிலையில், பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டதாக செவிலியர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

செல்போன் டார்ச் வெளிச்சத்தில் போராட்டம்

இதனால் போராட்டக களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே போராட்டம் நடைபெற்ற பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆனாலும் செவிலியர்கள் தங்களது செல்போன்களில் உள்ள டார்ச் வெளிச்சத்தைப் பயன்படுத்தி போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

ADVERTISEMENT

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அங்கிருந்து அகற்ற முயன்றபோது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காலை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த சில செவிலியர்கள் மயக்கமடைந்தனர்.

இந்த நிலையில் செவிலியர் சங்க நிர்வாகிகளுடன் சுகாதாரத்துறை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது செவிலியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக பரிசீலித்து முடிவெடுக்க நவம்பர் 3-ஆம் தேதி வரை அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட செவிலியர் சங்க நிர்வாகிகள், நவம்பர் 3 வரை காத்திருக்க முடிவு செய்து தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.

விஜய்யை நம்பி ஓட்டு போட்டோமே..

இந்த போராட்டத்தில் பங்கேற்ற செவிலியர்கள் கூறுகையில், ”எங்களுக்கு இந்த மாதிரி நடக்கும் என்று நினைத்து நாங்கள் இங்கு வரவில்லை. முதல்வர் விஜய்க்கு நாங்கள் எல்லாம் ஓட்டு போட்டோம். அவர் எங்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கையில்தான் இன்று இங்கு வந்தோம். எங்களுடைய கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கையோடு வந்தோம். ஆனால் போலீசார் எங்களிடம் இப்படி நடந்துகொள்வார்கள், எங்களை அடிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

எங்களுடைய தலைவியை பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் செல்வதாகக் கூறி கூட்டிச் சென்று அடைத்து வைத்துள்ளனர். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அதுவரை நாங்கள் இங்கிருந்து நகர மாட்டோம். எங்களுடைய போராட்டம் தொடரும்” என்றனர்.

குழந்தையை போலீசார் அடித்ததாக புகார்

குழந்தையுடன் போராட்டத்தில் பங்கேற்ற புதுக்கோட்டையை சேர்ந்த செவிலியர் கூறுகையில், “மதியம் வரை என் பிள்ளை ‘மாமா, மாமா’ என்று அழைத்துப் பேசிக் கொண்டிருந்தான். அந்தக் குழந்தையை அடிக்க அவர்களுக்கு எப்படி மனது வந்தது? அவர்கள் வீட்டில் குழந்தைகள், பேரன், பேத்திகள் இல்லையா? என் பிள்ளையை அடிப்பதற்கு அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது? எங்களைப் பிடிக்கிறீர்கள்; என் பிள்ளை என்ன செய்தான்? அவனுக்கு ஏதாவது ஆகிவிட்டால் திருப்பிக் கொடுத்துவிட முடியுமா? என் பிள்ளைக்கு நீதி கிடைக்கும் வரை நான் இங்கிருந்து நகர மாட்டேன்.

அடித்ததில் என் பிள்ளையின் கன்னம் சிவந்துவிட்டது. சின்னக் குழந்தையை கைநீட்டி அடிக்கலாமா? அதுவும் ஒரு ஆண் போலீஸ்காரர், பி.சி. ஒருவர் குழந்தையை அடித்திருக்கிறார். குழந்தையை அடிப்பதற்கு யார் அவருக்கு உரிமை கொடுத்தது? எங்களையே அடிப்பதற்கும் அவர்களுக்கு உரிமை கிடையாது.

எனது கணவர் இங்கு இல்லை. யாருடைய ஆதரவும் இல்லாமல் குழந்தையை அழைத்துக்கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து வந்திருக்கிறேன். நாங்கள் அமைதியான முறையில்தான் உட்கார்ந்திருந்தோம். போலீசார் வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்தபோது, அவர்கள் வேகமாக வருகிறார்கள் என்று குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்தேன். அப்போதுதான் என் பிள்ளையை அடித்திருக்கிறார்கள்.

காலையிலிருந்து நாங்கள் யாரிடமாவது சண்டை போட்டோமா? சத்தம் போட்டோமா? எதுவுமே செய்யவில்லை. காலையிலிருந்து சாப்பிடாமல் போராட்டத்தில் இருப்பதே எங்களுக்கு மிகவும் சோர்வாக இருக்கிறது. இந்த நிலையில் ஒரு குழந்தையை அடித்தது தவறுதானே? என் பிள்ளைக்கு நீதி கிடைக்கும் வரை நான் இங்கிருந்து நகர மாட்டேன்” என்றார்.

திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் மீது போலீஸ் புகார்

இந்த செவிலியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர போலீசார் மைக்கில் அறிவிப்பு வெளியிட்டனர். அப்போது பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், “மாலை 5 மணிக்கு போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு கூறினோம். ஆனால் நீங்கள் முடித்துக்கொள்ள மாட்டோம் என்றீர்கள். அதன்பிறகும் உங்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். மதியம் ஒரு மணியிலிருந்தே உள்ளூர் உதவி ஆணையர் உங்களிடம் பேசி வருகிறார்.

தலைமைச் செயலகத்துக்குச் சென்று அதிகாரிகளைச் சந்தித்துப் பேசலாம் என்று கூறினோம். ஆனால் நீங்கள் அதிகாரிகளை இங்கே வரச் சொல்கிறீர்கள். அந்த மாதிரி நடைமுறையை மேற்கொள்ள முடியாது. இப்போது உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள். கொஞ்சம் காத்திருங்கள். பேச்சுவார்த்தை முடிந்த பிறகு சம்பந்தப்பட்டவர்கள் இங்கு வருவார்கள்.

காலையிலிருந்தே உங்களது குறைகளைக் கேட்பதற்காக பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம். ஆனால் நீங்கள் வரமாட்டோம், நாங்கள் இருக்கும் இடத்திற்கே அதிகாரிகள் வர வேண்டும் என்று கூறினீர்கள். கடைசியாக மாலை 6 மணிக்கு மேல் பேச்சுவார்த்தைக்கு வருவதாகக் கூறினீர்கள்.

உங்களுடைய பிரச்சினையை நீங்கள்தான் எடுத்துச் சொல்ல வேண்டும். நீங்கள்தான் உங்களது கோரிக்கைகளை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். உங்களுடைய குறைகளைத் தெரிவிக்க உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. தாராளமாக உங்களது கோரிக்கைகளை முன்வைக்கலாம். பேச்சுவார்த்தைக்காக உங்கள் தரப்பிலிருந்து 7 பேர் வந்தீர்கள். ஆனால் உங்களுடன் முன்னாள் அமைச்சர் ஒருவரையும் (திமுக மனோ தங்கராஜ்) அழைத்து வந்துள்ளீர்கள். அவருக்கும் இந்தப் பேச்சுவார்த்தைக்கும் என்ன சம்பந்தம்?

உங்களுக்கு ஆதரவாக ஆயிரம் பேர் வரலாம். நாங்களும் உங்களுக்காகத்தான் இங்கு வந்திருக்கிறோம். உங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காகத்தான் போலீசார் இருக்கிறோம்.

உங்களுடைய பேச்சுவார்த்தையை நீங்கள்தான் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ‘எங்களுக்கு இது வேண்டும், இது வேண்டாம்; இதைச் செய்து கொடுங்கள்; இதுதான் எங்களுடைய முன்னுரிமை’ என்பதை நீங்கள்தான் அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். ஆனால் குறிப்பிட்ட ஒருவர் வந்தால்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று கூறினால், பேச்சுவார்த்தையை எப்படி நடத்த முடியும்?

இப்போதும் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறார்கள். மீண்டும் சொல்கிறேன், பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் இன்னொருவர் வந்தால்தான் நாங்கள் வருவோம் என்று நீங்கள் கூறுவது எப்படி சரியாகும்? நன்றாக யோசித்துப் பாருங்கள்” என கூறினார்.

பேச்சுவார்த்தை என்ற பெயரில் கைது

செவிலியர் போராட்டத்தின் சட்ட ஆலோசகர் கூறுகையில், “எந்த மாநிலத்திலும் நடைபெறாத ஒரு அராஜகமான செயல் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது. சுமார் 4,000 செவிலியர்கள் காவல்துறையிடம் முறையாக எழுத்துப்பூர்வ அனுமதி பெற்று, காலையிலிருந்து உணவு உண்ணாமல் சென்னை எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 10 முதல் 15 பேர் வரை மயங்கி விழுந்துள்ளனர்.

நாங்கள் அவர்களுடைய சட்ட ஆலோசகர்கள். மூத்த வழக்கறிஞர் பாலனும், நானும் அவர்களுடன் இருந்து சட்டரீதியாக உதவி செய்து வருகிறோம். இரவு 7 மணியளவில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தனர். அதிகாரிகள் இங்கே வந்து பேச வேண்டும் என்று பெரும்பாலான செவிலியர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், ‘அதிகாரிகள் இங்கு வந்து பேசுவது வழக்கம் இல்லை; நாமே அங்கு சென்று பேசலாம்’ என்று நாங்கள் அவர்களை சமாதானப்படுத்தினோம்.

பின்னர் காவல்துறையினருடன் பேசி, 5 பேர் பேச்சுவார்த்தைக்குச் செல்வது என்று முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 5 பேர் தலைமைச் செயலகத்துக்குச் சென்றனர். ஆனால் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றவர்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். உலகத்தில் எங்கேயாவது இப்படியொரு சம்பவம் நடக்குமா? ஈரானும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தைக்குச் சென்றால்கூட, பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்று கைது செய்ய மாட்டார்கள். இது மிகப்பெரிய துரோகம்.

முதல்வர் விஜய் தனது ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறது என்று கூறுகிறார். இங்கே இருப்பவர்களும் பெண்கள்தானே? நமக்கு மருத்துவ சேவை அளிக்கக்கூடிய பெண்கள்தானே? கொரோனா காலத்தில் தங்களது உயிரைப் பணயம் வைத்து நம்மைப் பாதுகாத்தவர்கள் இவர்கள். அவர்கள் இன்று தெருவில் கிடக்கிறார்கள்; மயங்கிக் கிடக்கிறார்கள். பேச்சுவார்த்தை என்று அழைத்துச் சென்று கைது செய்வது என்ன நியாயம்? இதுவரை தமிழகத்தில் இருந்த எந்த அரசும் இப்படிச் செய்ததில்லை. இது உச்சபட்ச அராஜகம்.

காவல்துறையை நம்பி, அரசை நம்பி எங்கள் சங்க நிர்வாகிகளான பெண்களை பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் அவர்களை அழைத்துச் சென்று ஒரு மண்டபத்தில் அடைத்து வைத்திருக்கிறார்கள். இனி எப்படி நம்பி பேச்சுவார்த்தைக்கு அனுப்புவது? என்றார்.

இதுதான் ஜனநாயகமா?- மனோ தங்கராஜ்

செவிலியர் போராட்டம் பற்றி திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், “சென்னையில் நடைபெற்ற தொடர் போராட்டத்தில், மாலையில் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி என்னையும், போராட்டக் குழுவின் 10 நிர்வாகிகளையும் தமிழகக் காவல்துறை அழைத்துச் சென்றது. ஆனால் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தாமல், கைது செய்து அடைத்து வைத்திருக்கிறார்கள்.
இது தான் ஜனநாயகமா?” என்றார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share