அண்ணன் சீர் திட்டம் : ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு – யாருக்கு கிடைக்கும்?

Published On:

| By Kavi

அண்ணன் சீர் திட்டத்துக்கு ரூ.812 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று அண்ணன் சீர் திட்டம். இத்திட்டத்தின் மூலம் திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் (1 பவுன்) மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

அதில், ”தமிழர் மரபில் திருமணத்தின் போது அண்ணன் வழங்கும் ‘சீர்’ என்பது அன்பு, பாசம், பாதுகாப்பு மற்றும் பொறுப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 5 இலட்சம் திருமணங்கள் நடைபெறுகின்றன.

ADVERTISEMENT

திருமணங்களில் மணப்பெண்களுக்கு அரசு அண்ணனாக பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் எப்போதும் அக்கறை கொண்டு துணை நிற்கும் என்ற உறுதியை வெளிப்படுத்தும் விதமாக, புதிய வாழ்க்கையைத் தொடங்கும் மணப்பெண்களுக்கு அன்புப் பரிசாக எட்டு கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப் புடவையும் வழங்கப்பட வேண்டும் என்பது அரசின் தொலைநோக்கு ஆவணத்தின் ஒரு திட்டமாகும்.

2026-27 ஆம் ஆண்டுக்கான திருத்த வரவு செலவு திட்ட மதிப்பீட்டு உரையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ADVERTISEMENT

இவ்வறிவிப்பின் தொடர்ச்சியாக,கடிதத்தில் சமூக நல இயக்குநர். அண்ணன் சீர் திட்டத்தை ஆண்டுதோறும் செயல்படுத்த நிர்வாக அனுமதியும். நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்தினை செயல்படுத்த நிதி ஒதுக்கீடும் வழங்குமாறு அரசைக் கோரியுள்ளார்.

இந்த கருத்துரு நன்கு பரிசீலனை செய்யப்பட்டு, கீழ்க்கண்டவாறு “அண்ணன் சீர்” திட்டத்தை செயல்படுத்த அரசு ஆணை வெளியிடப்படுகிறது.

தமிழ்நாட்டில் ரூ.2.5 இலட்சத்திற்குள் ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு திருமணத்தின் போது 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப்புடவையும் வழங்கும் “அண்ணன் சீர்” திட்டத்தை ஆண்டுதோறும் செயல்படுத்த நிர்வாக அனுமதியும், இதற்கான தொகையாக நடப்பு நிதியாண்டில் முதற்கட்டமாக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் நடைபெறும் திருமணங்களுக்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த, தகுதியுடைய மணப்பெண்களுக்கு 8 கிராம் (22 காரட்) தங்க நாணயமும். ஒரு பட்டுப் புடவையும் வழங்கப்பட உள்ளன.

இத்திட்டத்திற்கான தகுதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தனியே வெளியிடப்படும்.

தமிழ்நாடு திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி சட்டம், 1998 (Tamil Nadu Transparency in Tenders Act, 1998) மற்றும் விதிகள் 2000-ன்படி திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, தகுதியான ஒப்பந்ததாரர் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்க நாணயமும், பட்டுப் புடவையும் கொள்முதல் செய்யப்படும்.

தங்க நாணயத்தின் கொள்முதல் விலை கொள்முதல் ஆணை வழங்கப்படும் நாளன்று காலை IBJA (India Bullion and Jewellers Association) அமைப்பால் நிர்ணயிக்கப்படும் விலையை அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கப்படும்.

இத்திட்டம் அரசாணை வெளியிடப்படும் நாள் முதல் நடைபெறும் திருமணங்களுக்கு பொருந்தும். இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share