சென்னை மாநகராட்சியில் டெங்கு பாதிப்பு 4,500-ஐ கடந்திருக்கும் நிலையில், காய்ச்சல் அறிகுறி உள்ள அனைத்து நபர்களுக்கும் கட்டாயம் பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளதாக, அத்துறையின் முதன்மைச் செயலாளர் தாரேஸ் அகமது கூறியுள்ளார்.
தமிழகத்தில் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
குறிப்பாக சென்னையில் டெங்கு, உன்னி காய்ச்சல், மலேரியா போன்ற உடல்நல பாதிப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சென்னையில் பல்வேறு மண்டலங்களிலும் மாநகராட்சி சார்பில் கொசு ஒழிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
நேற்று (அக்டோபர் 4) தேனாம்பேட்டை மண்டலத்தில் நடைபெற்ற டெங்கு தடுப்பு பணிகளை தாரேஸ் அகமது ஐஏஎஸ் பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘தமிழகத்தில் இதுவரை 20 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நோயை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பதற்கு, காய்ச்சல் உள்ள அனைவருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னையில் 16,254 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 4,592 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 1,293 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தினமும் 100க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
3,703 மாநகராட்சி பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
மாநகராட்சி ஆணையர் சமரன் கூறுகையில், ‘டெங்கு பாதிப்பு படிப்படியாக குறைந்து வர தொடங்கியுள்ளது. தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன’ என்றார்.
மேலும் அவர், “44 நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகளும், ட்ரோன்கள் மூலம் மருந்து தெளிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
அடைப்பு கண்டறியப்பட்ட 1,600 கிலோமீட்டர் மழை நீர் வடிகால்களில் மொத்தம் 1,400 கிலோமீட்டர் தூரம் வரை தூர்வாரப்பட்டுள்ளது. மீதமுள்ள 200 கிலோமீட்டர் பணிகள் இந்த வாரத்திற்குள் நிறைவடையும்.
நெடுஞ்சாலை துறையின் கீழ் உள்ள 250 கிலோ மீட்டர் வடிகால்களை தவிர்த்து சென்னையில் 3000 கிலோமீட்டருக்கும் அதிகமான மழை நீர் வடிகால்கள் உள்ளன. மாமல்லன் நீர்த்தேக்க திட்டத்தின் கீழ் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள பணிகள் அக்டோபர் மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது..
பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று குப்பைகளை அகற்ற தவறிய வணிக நிறுவனங்கள் அமைப்புகள் மற்றும் வீடுகளுக்கு கடந்த மாதத்தில் மட்டும் 7.2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
இன்று விருகம்பாக்கம் கால்வாய், அரும்பாக்கம், திருவொற்றியூர் மண்டலத்துக்குட்பட்ட பக்கிங்ஹாம் கால்வாய் பகுதிகளில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணிகள் சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டன.
