பிரபல மசாலா பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான எவரெஸ்ட் ஃபுட் புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சீரகத் தூளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்சம் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
கோவாவில் உள்ள ரிவர்சைடு ரிசார்ட்ஸ் & ஹாலிடே ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீரகத் தூள் மாதிரியைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர்.
இந்த ஆய்வில் அந்த சீரகத் தூளில் அஸோக்ஸிஸ்ட்ரோபின் (Azoxystrobin), தியாமெதோக்ஸாம் (Thiamethoxam) ஆகிய பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்சங்கள் அரசு நிர்ணயித்த அதிகபட்ச அளவைவிட அதிகமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006-ன் கீழ் அந்த தயாரிப்பு ‘பாதுகாப்பற்றது’ என அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, E080668761 என்ற தொகுதி எண்ணைக் கொண்ட சீரகத் தூள் பாக்கெட்டுகளை சந்தையில் இருந்து உடனடியாகத் திரும்பப்பெற அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இந்த ஆய்வு முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய எவரெஸ்ட் நிறுவனத்துக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, சம்பந்தப்பட்ட சீரகத் தூள் மாதிரி மேல்முறையீட்டு உணவு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு மேற்கொள்ளப்பட்ட மறுபரிசோதனையிலும் சீரகத் தூளில் அஸோக்ஸிஸ்ட்ரோபின் மற்றும் தியாமெதோக்ஸாம் ஆகியவற்றின் எச்சங்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், அந்த தயாரிப்பு பாதுகாப்பற்றது என்ற முந்தைய முடிவே உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, சந்தையில் இருந்து திரும்பப்பெறப்பட்ட பொருட்கள் தொடர்பான முழுமையான பதிவுகளைப் பராமரிக்கவும், திரும்பப்பெறும் நடவடிக்கை குறித்த அறிக்கையை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்கவும் எவரெஸ்ட் நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நடைபெறாமல் இருக்க உரிய சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தயாரிப்புகளைத் திரும்பப்பெறும் நடவடிக்கை முழுமையாக முடிந்த பின்னர் அதுகுறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
