ரஷ்யாவில் பிளேக் நோய் தொடர்பான ஆய்வகத்தில் பணியாற்றிய இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்த சுமார் 200 பேர் மருத்துவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள இர்குட்ஸ்க் பகுதியில், பிளேக் உள்ளிட்ட ஆபத்தான தொற்று நோய்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஆய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த டாரியா ஷிபிலோவா, கடந்த மாதம் கடுமையான நிமோனியா பாதிப்புடன் ஷெலெகோவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அக்டோபர் 2-ந் தேதி டாரியா உயிரிழந்தார்.
ஆய்வகத்தில் உடைந்த டெஸ்ட் டியூப்?
இந்த மரணத்தின் பின்னணியில்தான் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. டாரியா பணியாற்றிய இர்குட்ஸ்க் ஆய்வகத்தில் கடந்த செப்டம்பர் 25-ந் தேதி உயிருள்ள பிளேக் பாக்டீரியா மாதிரியை கையாளும்போது, அது வைக்கப்பட்டிருந்த டெஸ்ட் டியூப் எதிர்பாராதவிதமாக உடைந்ததாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன் மூலம் டாரியா பிளேக் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் டெஸ்ட் டியூப் உடைந்த சம்பவத்தையும், அதன்மூலம் அவருக்கு பிளேக் தொற்று ஏற்பட்டதையும் ரஷ்ய சுகாதாரத்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. அதே நேரத்தில் டாரியாவின் மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தனிமையில் 200 பேர்
இதற்கிடையே டாரியாவுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. மருத்துவ பணியாளர்கள் உட்பட சுமார் 200 பேர் அடையாளம் காணப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
டாரியா சிகிச்சை பெற்ற ஷெலெகோவ் மாவட்ட மருத்துவமனையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இர்குட்ஸ்கில் நடைபெற இருந்த சில பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பிளேக் என்றால் என்ன?
பிளேக் என்பது வைரஸால் ஏற்படும் நோய் அல்ல. Yersinia pestis என்ற பாக்டீரியாவால் ஏற்படும் ஆபத்தான தொற்று நோய்தான் பிளேக்.
பிளேக் நோயில் பல வகைகள் உள்ளன. அதில் நுரையீரலை தாக்கும் Pneumonic Plague மிகவும் ஆபத்தானது. பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து சுவாசத் துளிகள் மூலம் மற்றவர்களுக்கு இந்த வகை பிளேக் பரவ வாய்ப்பு உள்ளது. உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். தற்போது பிளேக் நோய்க்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்க முடியும்.
கொரோனா காலத்தை நினைவுபடுத்தும் சந்தேகம்
2019 இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் எங்கிருந்து மனிதர்களுக்கு பரவியது என்பது தொடர்பான விவாதம் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு இயற்கையாக வைரஸ் பரவியிருக்கலாம் என கூறப்பட்டது. அதேநேரத்தில் வூஹானில் உள்ள ஆய்வகம் ஒன்றிலிருந்து எதிர்பாராதவிதமாக வைரஸ் வெளியேறியிருக்க முடியுமா என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டது. கொரோனா குறித்த இந்த விவாதத்துக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
