2028 மகாமகத்துக்கு தயாராகும் கும்பகோணம்… பயணிகள் கேட்ட ‘அந்த’ ரயில் பாதைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

Published On:

| By Mathi

Kumbakonam Train

ஆடுதுறை- கும்பகோணம்- சுந்தரபெருமாள் கோவில் இடையிலான ஒற்றை ரயில் பாதையை இரட்டை ரயில் பாதையாக மாற்ற ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளார்.

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகம் அடுத்ததாக 2028-ம் ஆண்டு நடைபெற உள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவார்கள் என்பதால், அதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து இப்போதே ஆலோசனைகள் தொடங்கிவிட்டன.

ADVERTISEMENT

மகாமகத்தின்போது சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்து கும்பகோணத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். ஆனால் தஞ்சாவூர்- கும்பகோணம்- மயிலாடுதுறை வழித்தடத்தில் ஒற்றை பாதை பகுதிகள் இருப்பதால், ஒரே நேரத்தில் அதிக ரயில்களை இயக்குவதில் சிக்கல் உள்ளது.

இதனால் 2028 மகாமகத்துக்கு முன்பாக இந்த வழித்தடத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என டெல்டா மாவட்ட ரயில் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

ADVERTISEMENT

முழு வழித்தடத்தையும் இரட்டிப்பாக்க முடியாவிட்டாலும், ரயில்கள் கடந்து செல்வதில் ஏற்படும் காத்திருப்பு நேரத்தை குறைக்கும் வகையில் முக்கிய பகுதிகளிலாவது இரட்டை பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

அதில் ஆடுதுறை- கும்பகோணம்- சுந்தரபெருமாள் கோவில் பகுதி முக்கியமானதாக இருந்தது. தற்போது அந்த பகுதிக்கான இரட்டை பாதை பணிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ADVERTISEMENT

எல்.முருகன் நன்றி

இந்த ஒப்புதலுக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தமிழ்நாட்டின் ரயில்வே உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான தமது கோரிக்கையை ஏற்று, ஆடுதுறை – கும்பகோணம் – சுந்தரபெருமாள் கோவில் இடையிலான ஒற்றை ரயில் பாதையை இரட்டை ரயில் பாதையாக மாற்றும் பணிக்கு ஒப்புதல் அளித்தமைக்காக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share