ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை, போர் குற்றங்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், மனித புதைகுழிகள் உள்ளிட்ட விவகாரங்கள் மீண்டும் ஜெனிவாவில் நடைபெறும் ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் எழுப்பப்பட உள்ளன. இந்த கூட்டத்தில் பங்கேற்க இந்தியாவில் இருந்து 2 தமிழக வழக்கறிஞர்கள் ஜெனிவா செல்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலின் 63-வது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள Palais des Nations வளாகத்தில் செப்டம்பர் 7-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

47 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐநா மனித உரிமைகள் கவுன்சில், உலகம் முழுவதும் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விவாதித்து வருகிறது. குறிப்பிட்ட நாடுகளின் மனித உரிமை நிலவரங்கள், போர் குற்ற குற்றச்சாட்டுகள், காணாமல் ஆக்கப்படுதல், சித்திரவதை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் உள்ளிட்ட விவகாரங்கள் இந்த கூட்டங்களில் விவாதிக்கப்படுகின்றன.
இந்த கூட்டங்களில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுடன் ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம், சிறப்பு அறிக்கையாளர்கள், சர்வதேச விசாரணை அமைப்புகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.
தற்போது நடைபெறும் 63-வது கூட்டத்தொடரில் சூடான், மியான்மர், ஆப்கானிஸ்தான், சிரியா, ஈரான், உக்ரைன், வெனிசுலா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மனித உரிமை நிலவரங்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
மீண்டும் இலங்கை விவகாரம்
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நீதி ஆகியவை கடந்த பல ஆண்டுகளாக ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.
2025-ம் ஆண்டு நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் கூட்டத் தொடரில், இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்பு இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பான எழுத்துப்பூர்வ அறிக்கையை 63-வது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்துக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதன்படி தற்போது நடைபெற்று வரும் 63-வது கூட்டத்தொடரிலும் இலங்கை விவகாரம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட தமிழருக்கான நீதி, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்ந்து சர்வதேச அளவில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

மனித புதைகுழிகள்
இதனிடையே இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கண்டறியப்படும் மனித புதைகுழிகள் தொடர்பான விவகாரமும் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் கண்டறியப்பட்ட மனித புதைகுழிகள் தொடர்பான அகழ்வுப் பணிகளும், அதிலிருந்து மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதும் ஈழத் தமிழர் அமைப்புகளால் சர்வதேச அளவில் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்த பின்னணியில்தான் தற்போது இந்தியாவை சேர்ந்த 2 தமிழக வழக்கறிஞர்களும் ஜெனிவாவில் நடைபெறும் ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.


யார் அந்த 2 தமிழ் வழக்கறிஞர்கள்?
டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ராம் சங்கர் ராஜா மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் முத்து கணேச பாண்டியன் ஆகிய இருவரும் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 63-வது கூட்டத்தொடரில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நெதர்லாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் Global Human Rights Defence என்ற மனித உரிமைகள் அமைப்பின் அதிகாரப்பூர்வ குழுவில் இடம்பெற்று இருவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கடைசி கூட்டத்தில் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை இரண்டு தமிழ் வழக்கறிஞர்கள் பங்கேற்கிறார்கள்.
டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ராம் சங்கர் ராஜா மற்றும் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முத்து கணேச பாண்டியன் ஆகியோர் ஜெனிவாவில் நடைபெறும் 63வது மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
ICJ – International Court of Justice மற்றும் ஐசிசி – International Criminal Court அமைந்துள்ள நெதர்லாந்து நாட்டில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளை கையாளும் Global Human Rights Defense என்ற NGO அமைப்பு செயல்பட்டு வருகிறது.

2015 ஆம் ஆண்டு முதல் சர்வதேச நீதிமன்ற விசாரணைகள் குறித்த ஐ நா சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்ட தொடர்களில் பங்கேற்று பணியாற்றி வருகிறது. இந்த ஆண்டு நடைபெறும் 63வது மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் பங்கேற்க தங்களது நெதர்லாந்து அமைப்பின் சார்பில் இரண்டு தமிழ் வழக்கறிஞர்களை தேர்வு செய்துள்ளது.
மேற்படி கூட்ட தொடர் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் அக்டோபர் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவில் இருந்து தமிழ் வழக்கறிஞர்கள் ராம் சங்கர் ராஜா மற்றும் முத்து கணேச பாண்டியன் ஆகியோர் 6/10 முதல் 9/10 வரை பங்கேற்க உள்ளனர்.
இந்த இரண்டு தமிழ் வழக்கறிஞர்கள் இலங்கையில் நடைபெற்ற இன படுகொலை, போர் குற்றங்கள், பாலியல் கொடுமைகள், பல்வேறு சித்திரவதைகள் மற்றும் தற்போது செம்மணி மற்றும் தமிழர் பகுதிகளில் தோண்ட தோண்ட மனித எலும்புக்கூடுகள், மனித புதைகுழிகள் இருந்து வருவது குறித்தும் பேச உள்ளனர்.
சர்வதேச விசாரணை, நீதிக்கான கோரிக்கை, போர் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் சட்டங்களின் படி தண்டித்தல் ஆகியன குறித்து ஆதாரத்துடன் சமர்ப்பிக்க உள்ளனர்.
ஏற்கனவே 1,60,000 பேர் இன படுகொலையால் கொல்லப்பட்டு உள்ளனர் என்றும் 18,000-த்திற்கும் அதிகமானோர் காணாமல் போனதாகவும் விசாரணை அறிக்கைகள் கூறுகின்றன.
மனித புதைகுழிகள், இனப் படுகொலைகள் போன்ற குற்றங்களில் ஈடுபட்ட இலங்கை ராணுவ அதிகாரிகள் மற்றும் அதிகார தலைவர்களை இலங்கை உள்நாட்டு சட்டத்தின் படி தண்டிப்பது என்பது நடக்காத ஒன்று. எனவே சர்வதேச நீதி விசாரணை மட்டுமே வேண்டும் என்று கோரிக்கை விடுக்க உள்ளனர்.
இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் இலங்கைக்கு எதிராக வாக்கு அளிக்க வேண்டும், நீதி நிலை நிறுத்தப்பட வேண்டும், மனித உரிமை மீறல்கள் செய்த அனைவரும் சட்டத்தின் படி தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பேச உள்ளனர்.
இலங்கை தமிழர்களின் நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயல்பாடுகளை மூத்த தமிழ் வழக்கறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள் பாராட்டி ஊக்குவிக்கின்றன. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
