சென்னை குடிநீரில் நெளியும் புழுக்கள்: பொதுமக்கள் அச்சம்! விரைந்து நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்?

Published On:

| By Kavi

சென்னை ஆலந்தூர் மண்டலத்திற்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் புழுக்கள் மிதந்து வருவதாகவும், அதை குடிப்பதால் உடல்நல பிரச்சினை ஏற்படுவதாகவும் பொது மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

சென்னையில் சமீப நாட்களாக காய்ச்சல் பரவல் அதிகமாக இருந்து வருகிறது. டெங்கு நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், வைரஸ் காய்ச்சலும் வேகமாக பரவுகிறது.

ADVERTISEMENT

வைரஸ் காய்ச்சல் பெரும்பாலும் சுகாதாரமற்ற குடிநீரை குடிப்பதால்தான் ஏற்படுகிறது.

காய்ச்சல் காரணமாக சென்னையில் சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகின்றன. 

ADVERTISEMENT

ஆனால் இந்த காய்ச்சல் பரவுவதை தடுக்க அரசு போதுமான நடவடிக்கை எடுத்து உள்ளதா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. 

சென்னையில் ஆலந்தூர், ஆதம்பாக்கம், பழவந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் வாரியம் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீரில் புழுக்கள் மிதக்கின்றன. 

ADVERTISEMENT

இது தொடர்பாக மெட்ரோ குடிநீர் வாரியத்திடம் பொதுமக்கள் புகார் அளித்திருக்கின்றனர். 

இதைத்தொடர்ந்து மெட்ரோ குடிநீர் நீர்த்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. 

எனினும் தொடர்ந்து குடிநீரில் புழுக்கள் மிதந்து வருகின்றன. 

இது தொடர்பாக கூறும் குடிநீர் வாரிய அதிகாரிகள், மெட்ரோ குடிநீர் நீர்த்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு விட்டன. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும். புழுக்கள் வருவது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றனர். 

பல இடங்களிலும் புழுக்கள் மிதந்து வருவதால் பொதுமக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. 

சாதாரண மக்கள் வாழும் வீடுகளில் மட்டுமின்றி ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் வசித்து வரும் தாய்சா குடியிருப்பிலும் இதே நிலைதான் என்று தகவல்கள் வருகின்றன. 

இந்த சூழலில் புழுக்கள் குடிநீரில் மிதந்து வருவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சென்னை முன்னாள் மேயரும், தமிழ்நாடு பாஜக செயலாளருமான கராத்தே தியாகராஜன் இன்று (அக்டோபர் 3) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், ”சென்னை மாநகராட்சியின் எல்லைக்கு உட்பட்ட வீடுகளுக்கு சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் (மெட்ரோ வாட்டர்) குடிநீர் வழங்கி வருகிறது.

இந்த குடிநீரைத்தான் அனைத்து பொது மக்களும் குடிக்கவும், சமையலுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டு வரும் குடிநீரில் சிவப்பு புழுக்கள் நெளிகின்றன.

இந்த குடிநீரை பயன்படுத்தும் மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.இது குறித்து சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகத்தின் கவனத்துக்கு பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


ஆனால், சம்மந்தப்பட்ட மெட்ரோ வாட்டர் நிர்வாகத்தினர்,”குடிநீரில் சிவப்பு புழுக்கள் கலந்து வருவது எங்களுக்கும் தெரியும். இந்த புழுக்கள் எப்படி வருகிறது? எதனால் வருகிறது? என நாங்கள் ஆராய்ந்து விட்டோம். எதனால் இப்படி புழுக்கள் வருகிறது என எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. புழுக்கள் கலந்து வருவதை தடுக்கவும் முடியவில்லை.

இதற்கு ஒரே வழி, உங்கள் வீடுகளில் உள்ள மெட்ரோ வாட்டர் வந்து விழும் தொட்டியில் (sump) குழாயின் முனையில் துணியை கட்டி (Filter) விடுங்கள்” என்று யோசனை சொல்கிறார்கள்.
இதனைக் கேட்டு பொது மக்கள் அதிர்ச்சியடைகிறார்கள்.

சென்னையில் பணக்கார வீடுகளில் sump இருக்கும்; அவர்களால் filter கட்டிவிட முடியும். ஆனால், வட சென்னை உள்ளிட்ட பகுதிகளில் சாதாரண மக்களின் வீடுகளில் sump இருப்பதில்லை. அவர்கள் குழாயில் இருந்து அடித்து தான் குடிநீர் எடுக்கின்றனர். அவர்கள் எப்படி Filter கட்ட முடியும்? என்ற கேள்வி எழுகிறது. இந்த சிவப்பு புழுக்கள் கலந்து குடிநீர் அசுத்தமாக வருவதை, தடுக்கும் வகையில் தீர்வு காண வேண்டியதும், அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அதிகாரிகளின் பொறுப்பும் கடமையுமாகும்.

முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கிறது நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சித் துறை. முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் இத்துறையிலேயே பொது மக்களின் நலனை பாதிக்கச் செய்யும் ஆரோக்கியமற்ற பிரச்சனைகள் இருப்பது சரியாகாது.

ஏற்கனவே, சென்னையில் டெங்கு காய்ச்சல், உன்னி காய்ச்சல் பொது மக்களை தாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் மெட்ரோ வாட்டரில் சிவப்பு புழுக்கள் கலந்து வருவதும், அதனை தடுக்க மெட்ரோ வாட்டர் நிர்வாகம் தூரித நடவடிக்கை எடுக்க வேண்டும் பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் குடிநீர், சுகாதாரமாகவும் சுத்தமாகவும் இருக்கும் வகையில், சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துறையும், தமிழக அரசின் பொது சுகாதாரத் துறையும் இணைந்து இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். இல்லையேல், சென்னை மக்களை கொடிய நோயான காலரா நோய் தாக்கும் அபாயம் இருக்கிறது.

அதனால், முதலமைச்சர் ஜோசப் விஜய் , சம்மந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்து, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

குடிநீரில் புழுக்கள் இல்லாமல் சுத்தமாக வருவதை குடிநீர் வாரியம் விரைந்து உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share