’Apple’ நிறுவனத்தின் பெயரில் அமெரிக்கர்களுக்கு ‘அல்வா’… ஜெய்ப்பூரில் சிக்கிய போலி கால் சென்டர்: 14 பேர் கைது!

Published On:

| By Mathi

Apple Crime

Apple நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி அமெரிக்கர்களிடம் நூதன முறையில் பண மோசடி செய்து வந்த போலி கால் சென்டரை ஜெய்ப்பூர் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அந்த போலி நிறுவனத்தில் பணிபுரிந்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சிர்சி சாலையில் மங்களம் கிராண்ட் ரெசிடென்சி என்ற அடுக்குமாடி குடியிருப்பில் கால் சென்டர் செயல்பட்டு வந்துள்ளது. இந்த கால் சென்டரில் இருந்து அமெரிக்கர்களின் செல்போன் எண்களுக்கு Apple நிறுவனத்தின் பெயரில் போலியான எஸ்எம்எஸ்-கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அதில், “Apple நிறுவனத்தின் பொருட்கள் வாங்குவதற்காக உங்கள் கணக்கில் குறிப்பிட்ட தொகைக்கு முன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்பது போன்ற தகவல்களை அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து தாங்கள் எந்த பொருளையும் வாங்காத நிலையில் பணம் செலுத்த வேண்டுமா என அதிர்ச்சி அடைந்த அமெரிக்கர்கள், அந்த எஸ்.எம்.எஸ்-ல் கொடுக்கப்பட்டிருந்த எண்ணை தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது எதிர்முனையில் பேசும் கும்பல், தங்களை Apple நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை ஊழியர்கள் என அறிமுகப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

மேலும், “உங்கள் பெயரில் வந்துள்ள கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது டெக்னிக்கல் உதவி வழங்க வேண்டும்” என கூறி 399 டாலர், 499 டாலர், 699 டாலர் என பணத்தை செலுத்த வைத்துள்ளனர். இந்த கால் சென்டர் தொடர்பாக சந்தேகம் எழுந்தது. மேலும் ஜெய்ப்பூர் போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஜெய்ப்பூர் மேற்கு மாவட்ட சிறப்பு படையினர் மற்றும் ராஜஸ்தான் இணைய குற்ற தடுப்பு மைய அதிகாரிகள் இணைந்து சிர்சி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு செயல்பட்டு வந்தது, “போலி கால் சென்டர்” என கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த 14 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 13 லேப்டாப்கள், 24 செல்போன்கள் மற்றும் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட பல்வேறு மின்னணு சாதனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share