VIDEO: பிரான்ஸில் பற்றி எரியும் போராட்டம்… அதிகரிக்கும் தீ வைப்பு- 5,000 பேர் கைது- ஏன்?

Published On:

| By Mathi

France protest

பிரான்ஸ் முழுவதும் பள்ளி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பாரிஸ் புறநகரில் சிறிய அளவில் தொடங்கிய போராட்டம் தற்போது நாடு முழுவதும் பரவி, போலீசாருடனான மோதல், தீ வைப்பு சம்பவங்கள் என வன்முறையாக மாறியுள்ளது. இந்த போராட்டங்கள் தொடர்பாக 5,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்கள் பற்றாக்குறை, மாற்று ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது, ஒரே வகுப்பில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள், போதுமான அடிப்படை வசதிகள் இல்லாதது உள்ளிட்டவைகளை முன்வைத்து பாரிஸ் புறநகர் பகுதிகளில் உள்ள உயர்நிலை பள்ளி மாணவர்களிடையே கடந்த வாரம் போராட்டம் தொடங்கியது.

ADVERTISEMENT

இதன் பின்னர் பாரிஸ் நகருக்குள்ளும் போராட்டம் பரவியது. தொடர்ந்து ஸ்ட்ராஸ்பர்க், மார்செய், ரென்னெஸ், நான்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் போராட்ட தீ பரவியது. மாணவர்களுக்கு ஆதரவாக ஆசிரியர்கள், பெற்றோர்களும் சில இடங்களில் போராட்டத்தில் பங்கேற்றனர்.

ஒரு கட்டத்தில் போராட்டத்தை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் பயன்படுத்தினர். மார்செய் நகரில் போலீசாரை நோக்கி பட்டாசுகள் வீசப்பட்டன. ரென்னெஸ் உள்ளிட்ட நகரங்களில் குப்பை தொட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

பான்டின் பகுதியில் தடுப்புகள் உள்ளிட்ட பொருட்களுக்கு தீ வைத்த சிலர் போலீசாரை நோக்கி பட்டாசுகளை வீசியதாகவும் கூறப்படுகிறது.

நான்ட்ஸ் நகரில் உள்ள பள்ளி ஒன்றின் நுழைவுப் பகுதி தீயில் சேதமடைந்தது. பல இடங்களில் பள்ளி கட்டிடங்கள் மற்றும் பொது சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டன.

ADVERTISEMENT

அதேநேரத்தில் மாணவர்களின் போராட்டத்தில் வெளியில் இருந்து சிலர் புகுந்து வன்முறையில் ஈடுபடுவதாகவும் பிரான்ஸ் அரசு குற்றம்சாட்டியுள்ளது. போராட்டம் தீவிரமடைந்த நிலையில் தற்போதுவரை 5,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாலஸ்தீன கொடிகள்- முழக்கங்கள்

வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்கள் அதிகம் வசிக்கும் பாரிஸ் புறநகர் பகுதிகளில் இந்த போராட்டம் தீவிரமாக நடைபெறுகிறது. இப்போராட்டத்தின் போது சில இடங்களில் பாலஸ்தீன கொடிகளும் காணப்பட்டுள்ளன; பாலஸ்தீனத்துக்கு ஆதரவான முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

மேலும் இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் அல்லாதவர்களும் புகுந்துள்ளதாக பள்ளி நிர்வாகங்கள் குற்றம்சாட்டியுள்ளன. மாணவர் இயக்கத்தை வன்முறை குழுக்கள் கைப்பற்றியுள்ளதாக பிரான்ஸ் கல்வி அமைச்சரும் குற்றம்சாட்டியுள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share