சூலூர் அருகே குடிநீர் விநியோகம் சீராக இல்லாததைக் கண்டித்து, பொதுமக்கள் காலிக்குடங்களுடன் பல்லடம் – கொச்சின் நெடுஞ்சாலையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக மறியலில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோவை மாவட்டம், சூலூரை அடுத்த கள்ளப்பாளையம் கிராமத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் சரிவர வழங்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கும் குடிநீருக்கும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், அதிகாரிகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்து இன்று காலை பல்லடம் – கொச்சின் நெடுஞ்சாலையில் காலிக்குடங்களை வரிசையாக அடுக்கி வைத்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மறியல் போராட்டத்தால், நெடுஞ்சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் சத்யபாமாவிற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் வகையில் ரோடு ஷோவில் பங்கேற்க கோவை வர உள்ளார். கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் செல்லத் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் பொதுமக்கள் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உளளது.
