திருச்சியில் இருந்து திருப்பதிக்கு பகல் நேர ரயில் சேவை எப்போது தொடங்கும்?

Published On:

| By Mathi

Trichy Tirupati Train

திருச்சியில் இருந்து திருப்பதிக்கு பகல் நேர ரயில் சேவையை விரைவில் தொடங்க வேண்டும் என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக துரை வைகோ கூறியுள்ளதாவது: திருச்சி நாடாளுமன்றத் தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான திருச்சி – திருப்பதி இடையேயான நேரடி பகல் நேர இரயில் சேவையை பெற்றுத்தர வேண்டும் என ஒன்றிய இரயில்வே அமைச்சகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். இதன் தொடர்ச்சியாக, இக்கோரிக்கைக்கு ஒன்றிய இரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்திருப்பதை வரவேற்கிறேன்.

ADVERTISEMENT

திருச்சியிலிருந்து திருப்பதிக்கு நேரடி பகல் நேர இரயில் சேவை வேண்டும் என்பது திருச்சி மட்டுமின்றி, மத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாகும். இதுதொடர்பாக, மாண்புமிகு ஒன்றிய இரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களையும், இரயில்வே உயர் அதிகாரிகளையும் நேரில் சந்தித்து, பல்வேறு நிலைகளில் தொடர்ந்து கோரிக்கை கடிதங்கள் வழங்கி வலியுறுத்தியிருந்தேன்.

இதன் தொடர்ச்சியாக, குண்டூர் – திருப்பதி இடையே ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் 17261/17262 இரயில்களை திருச்சிராப்பள்ளி வரை நீட்டிப்பதற்கான அறிவிப்பு 08.05.2026 அன்று வெளியிடப்பட்டது. இதன் மூலம் திருச்சிராப்பள்ளி – திருப்பதி – குண்டூர் இடையே நேரடி பகல் நேர இரயில் இணைப்பு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT

ஆனால், இந்த அறிவிப்பு வெளியாகி ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், நீட்டிக்கப்பட்ட இரயில் சேவை எந்தத் தேதியில் தொடங்கும், அதன் விரிவான இயக்க அட்டவணை என்ன என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

எனவே, 17261/17262 இரயில்களின் திருச்சிராப்பள்ளி – திருப்பதி – குண்டூர் நீட்டிக்கப்பட்ட சேவை தொடங்கும் தேதி, புறப்படும் மற்றும் சென்றடையும் நேரங்கள், வழித்தடத்தில் அமையும் நிறுத்தங்கள் உள்ளிட்ட முழுமையான இயக்க அட்டவணையை உடனடியாக வெளியிட வேண்டும் என தெற்கு இரயில்வே பொது மேலாளர் மற்றும் தெற்கு மத்திய இரயில்வே பொது மேலாளர் ஆகியோருக்கு கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளேன்.

ADVERTISEMENT

இந்த இரயில் சேவை நடைமுறைக்கு வருவதன் மூலம் திருப்பதி செல்லும் பக்தர்கள், மாணவர்கள், வணிகர்கள் மட்டுமின்றி, திருச்சி உள்ளிட்ட மத்திய தமிழ்நாடு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் பெரிதும் பயனடைவார்கள். இவ்வாறு துரை வைகோ தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share