வெளிமாநிலத்தை சேர்ந்த பெண்களுக்கு தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் குழந்தை பிறக்கும் பட்சத்தில் அவர்களது குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படாது என பொது சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் விஜய் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய், செப்டம்பர் 28-ஆம் தேதி மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 22-ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் 1 கிராம் எடையில், ‘ஹால்மார்க்’ முத்திரை பதித்த 22 கேரட் தங்க மோதிரம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசலைச் சேர்ந்தவர் உமாமகேஸ்வரி. இவருக்கு கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த நபருடன் திருமணமாகி உள்ளது.
தனது இரண்டாவது பிரசவத்திற்காகக் கடந்த 6 மாதங்களாக காரைக்குடியில் உள்ள தாய் வீட்டில் இவர் தங்கியிருந்துள்ளார். அப்போது, அருகில் இருந்த முத்துப்பட்டிணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி உமாமகேஸ்வரிக்குக் காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
டோக்கன் வழங்கியும் மோதிரம் மறுக்கப்பட்டது ஏன்?
பிரசவம் முடிந்து, தமிழக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் கீழ் உமாமகேஸ்வரியின் குழந்தைக்குத் தங்க மோதிரம் பெறுவதற்காகக் கடந்த 1-ஆம் தேதி வழக்கம் போல் டோக்கன் வழங்கப்பட்டது.
ஆனால், அவருக்கு மோதிரம் வழங்கப்படவில்லை. இது குறித்து அவர் கேட்டபோது, உமாமகேஸ்வரி சமர்ப்பித்த முகவரி சரிபார்க்கப்பட்டது. அப்பேது ஆதார் அட்டையில் ‘மைசூர்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்ததால், கணினியில் அவரது விவரங்களைப் பதிவு செய்ய இயலவில்லை என்றும், இதன் காரணமாகவே அவருக்கு மோதிரம் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
பொது சுகாதாரத் துறை – விளக்கம்:
இச்சம்பவம் குறித்துப் பொது சுகாதாரத் துறை சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், “உமாமகேஸ்வரிக்கு பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய காலங்களில் தேவையான அனைத்து மருத்துவப் பராமரிப்புகளும் உரிய முறையில் எந்த வித கட்டணமும் இல்லாமல் வழங்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து செப்டம்பர் 22-ஆம் தேதி அவர் நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.
உமாமகேஸ்வரியின் ஆவணங்களின் அடிப்படையில் அவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவருகிறது. அவர் கர்நாடக மாநிலத்தில் நிரந்தரமாக வசித்து வருவதால், தமிழக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் விதிகளின்படி இச்சலுகையைப் பெற இயலாது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
