வரி என்ற பெயரில் அதிகாரிகள் மாமூல் வாங்குவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் ஜெயபாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் 5,400 ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து சுமார் 1000 பேருந்துகள் வந்து செல்கின்றன.
இந்த பேருந்துகளில் சாதாரண நாட்களை விட, வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், பண்டிகை காலங்களில் அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதாவது சாதாரண நாட்களில் ரூ.500 அல்லது ரூ.600 வசூலிக்கப்பட்டால் பண்டிகை காலங்களில் ஒரு டிக்கெட்டின் விலை இரண்டு மடங்கு அதிகரிக்கிறது.
கடந்த விநாயகர் சதுர்த்தியின் போது விடுமுறையை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணங்கள் வசூலித்த நிலையில், கூடுதல் கட்டணம் வசூலித்தாக 639 பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களிடமிருந்து 30.77 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.
தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் அடுத்தடுத்து விடுமுறை மற்றும் பண்டிகை நாட்கள் வருகின்றன.
இதன் காரணமாக போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, தீவிர வாகன தணிக்கை நடந்து வருகிறது.
கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 2,247 ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டன. அப்போது வரி மற்றும் இணக்க கட்டணமாக மொத்தம் 44.47 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வரி சான்று மற்றும் தகுதி சான்று இல்லாத எட்டு ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டன.
இந்த தீவிர வாகன தணிக்கை வரும் அக்டோபர் 21ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வரி என்ற பெயரில் அதிகாரிகள் லஞ்ச வேட்டையில் ஈடுபடுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் பாண்டியன் நேற்று (அக்டோபர் 4) கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், அதிகாரிகள் ஒவ்வொரு டோல்கேட்டிலும் வழிப்பறிக் கொள்ளை மாதிரி வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் ஒவ்வொரு வண்டியும் மூன்று மணி நேரம் காலதாமதமாக போய் சேருகிறது. அதனால் பயணிகளையும் தாமதமாக இறக்கி விட வேண்டிய நிலை உள்ளது.
இதனால் ஆம்னி பேருந்து ஓனர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது.
இரவில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. ஒரே பிரச்சினை தான்.
பல கோடி ரூபாய் முதலீடு செய்து, அரசாங்கத்துக்கு துணையாக, ஒரு பகுதியாக எந்தவித பிரதிபலனும் பார்க்காமல் இவ்வளவு காலமும் நாங்கள் வாகனத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறோம்.
ஆம்னி பேருந்துகளுக்கு ஒரு கட்டணத்தை அரசு நிர்ணயித்தாலும் சரி… இல்லை அதிகாரிகளோ அல்லது பத்திரிகையாளர்கள் நீங்களோ நிர்ணயித்தாலும் சரி…. ஒரு கிலோ மீட்டருக்கு இவ்வளவு தான் கட்டணம் என்று நீங்கள் முடிவு செய்யுங்கள்.
டோல்கேட்டுக்கு எவ்வளவு ஆகிறது, டீசல் எவ்வளவு ஆகிறது, எவ்வளவு வரி கட்டுகிறோம், வண்டியின் செலவு என்ன இதையெல்லாம் நாங்கள் கோடிட்டு கொடுத்திருக்கிறோம். இதை ஆய்வு செய்து நீங்கள் ஒரு கட்டணத்தை சொல்லுங்கள். அந்த ரேட்டுக்கு நாங்கள் ஓட்டுவதற்கு தயாராக இருக்கிறோம்.
ஆம்னி பேருந்துகள் எந்தவித லாபத்திலேயும் ஓடவில்லை. ஏற்கனவே பல நஷ்டத்தில் இயங்குகிறது. எனவே இப்படி திடீர் திடீரென செக்கிங் என்ற பெயரில் சோதனை செய்து வசூலிக்கிறார்கள்.
ஆனால் அதிக டிக்கெட் கட்டணம் வசூலித்ததாக கூறி இதுவரை எந்த அதிகாரியும் ஆம்னி பேருந்துகளிடமிருந்து முறையான அபராத தொகையை பெறவில்லை. அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி சோதனை என்ற பெயரில் பேருந்து உரிமையாளர்களிடமிருந்து மாமூல் வசூலித்து கொண்டிருக்கின்றனர். வழிபறி செய்கிறார்கள்.
ஒரு வாகனத்துக்கு வாரம் 40,000 என மாதத்துக்கு ஒரு லட்சம் வரை வரி வசூலிக்கின்றனர்.
மாதத்திற்கு 10 கோடிக்கும் அதிகமாக அரசுக்கு வரி செலுத்தும் சூழ்நிலையில் ஆம்னி பேருந்துகளுக்கு மூன்று முறை வரி வசூலிக்க கூடாது என அமைச்சரிடம் முறையிட்டோம். இதற்கு அவர் அதிகாரிகள் எங்கள் பேச்சைக் கேட்பதில்லை இடைத்தேர்தலுக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என கூறுகிறார். இந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்” என்று வலியுறுத்தினார்
