2026-ம் ஆண்டு நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒளியால் மூளை செல்களை கட்டுப்படுத்துவது தொடர்பான கண்டுபிடிப்புக்காக 3 விஞ்ஞானிகளுக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானியும் தொழிலதிபருமான ஆல்பிரட் நோபலின் உயிலின் அடிப்படையில் இந்த பரிசு உருவாக்கப்பட்டது. 1901-ம் ஆண்டு முதல் இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 1969-ம் ஆண்டு முதல் பொருளாதாரத்துக்கான ஆல்பிரட் நோபல் நினைவுப் பரிசும் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் நோபல் பரிசு பெறுவோர் விவரங்கள் அறிவிக்கப்படும். ஆல்பிரட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10-ல் பரிசுகள் வழங்கப்படும்.
அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயின் ஒஸ்லோவில் வழங்கப்படுகிறது; மற்ற பரிசுகள் ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படுகின்றன.
நோபல் பரிசுடன் பதக்கம், சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. 2026-ம் ஆண்டுக்கான பரிசுத் தொகை 12 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனா -அதாவது நமது இந்திய மதிப்பில் சுமார் ரூ.11 முதல் ரூ.12 கோடி.



மருத்துவத்துக்கான நோபல்
நடப்பாண்டுக்கான நோபல் பரிசு விவரங்கள் இன்று (அக்டோபர் 5) முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இன்று மருத்துவத்துக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- அமெரிக்க விஞ்ஞானி கார்ல் டெய்செரோத் (Karl Deisseroth)
- ஜெர்மனியைச் சேர்ந்த பீட்டர் ஹெகெமன் (Peter Hegemann)
- ஜெர்மனியைச் சேர்ந்த ஜார்ஜ் நாகெல் (Georg Nagel)
ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு 2026-ம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு கூட்டாக வழங்கப்படுவதாக ஸ்வீடனின் கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டில் உள்ள நோபல் பரிசுக்கான தேர்வு குழு இன்று அறிவித்தது.

என்ன கண்டுபிடிப்பு?
ஒளியை பயன்படுத்தி மூளையில் உள்ள குறிப்பிட்ட நரம்பு செல்களை இயக்கவும், அவற்றின் செயல்பாட்டை நிறுத்தவும் உதவும் தொழில்நுட்பம்தான் ஆப்டோஜெனெடிக்ஸ் (Optogenetics).
நமது மூளையில் உள்ள நரம்பு செல்கள் சமிக்ஞைகளை அனுப்புவதன் மூலம் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்கின்றன. நாம் நடப்பது, பேசுவது, நினைவுகளை சேமிப்பது, வலியை உணர்வது, பயப்படுவது, மகிழ்ச்சியடைவது என பல செயல்களிலும் இந்த நரம்பு செல்களின் செயல்பாடு முக்கியமானது. ஆனால் மூளையில் எந்த குறிப்பிட்ட நரம்பு செல்கள் எந்த செயலுக்கு காரணமாக இருக்கின்றன என்பதை துல்லியமாக கண்டறிவது நீண்ட காலமாக விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலாக இருந்து வந்தது.
இந்த நிலையைத்தான் ஆப்டோஜெனெடிக்ஸ் மாற்றியது. குறிப்பிட்ட நரம்பு செல்களை மட்டும் ஒளிக்கு உணர்திறன் கொண்டதாக மாற்றிவிட்டு, பின்னர் அவற்றின் மீது ஒளியை செலுத்துவதன் மூலம் அந்த செல்களை மட்டும் இயக்கவோ அல்லது அவற்றின் செயல்பாட்டை நிறுத்தவோ முடியும். இதனால் உயிருடன் இருக்கும் மூளையிலேயே குறிப்பிட்ட நரம்பு செல்களின் செயல்பாட்டை ஆய்வு செய்ய முடிகிறது.
இந்த மிகப்பெரிய கண்டுபிடிப்பின் தொடக்கம் மனித மூளையில் இல்லை. பாசியில் இருந்துதான் தொடங்கியது.
பீட்டர் ஹெகெமன் மற்றும் ஜார்ஜ் நாகெல் ஆகியோர் பாசிகள் எப்படி ஒளியை உணர்ந்து, ஒளி இருக்கும் திசையை நோக்கி நகர்கின்றன என்பதை ஆய்வு செய்தனர். அப்போது பாசிகளில் உள்ள Channelrhodopsin என்ற புரதம், ஒளியை உணர்ந்து செல்களை செயல்பட வைக்கிறது என்பதை கண்டறிந்தனர்.
இந்த Channelrhodopsin எப்படி செல்களை செயல்பட வைக்கிறது?
முதலில் அயனி என்பதை பற்றி தெரிய வேண்டும். அயனிகள் என்பவை மின்சுமை கொண்ட மிகச் சிறிய துகள்கள். இவற்றின் இயக்கம் நரம்பு செல்கள் செயல்படுவதற்கு முக்கியமானது.
Channelrhodopsin என்பது ஒளியால் செயல்படும் ஒரு அயனி சேனல். அயனி சேனல்கள் என்பது செல்களின் சவ்வில் இருக்கும் மிகச் சிறிய கதவுகள் போன்றவை. ஒளி பட்டதும் இந்த கதவு திறக்கிறது. அதன் வழியாக மின்சுமை கொண்ட மிகச் சிறிய துகள்களான அயனிகள் செல்லுக்குள் செல்கின்றன. இதனால் அந்த செல் செயல்படத் தொடங்குகிறது.
அடுத்து, இந்த Channelrhodopsin புரதத்தை மூளையின் நரம்பு செல்களிலும் பயன்படுத்த முடியுமா? என்ற முயற்சி தொடங்கியது. நரம்பு செல்களில் இந்த புரதத்தை உருவாக்கச் செய்து, அதன் மீது ஒளியை செலுத்தியபோது அந்த நரம்பு செல்களை இயக்க முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தான் கார்ல் டெய்செரோத் உள்ளிட்ட விஞ்ஞானிகள் மேலும் மேம்படுத்தினர். இதன் மூலம் மூளையில் குறிப்பிட்ட நரம்பு செல்களை மட்டும் ஒளியால் இயக்கவும், அவற்றின் செயல்பாட்டை நிறுத்தவும் முடிந்தது. இந்த முறைக்குத்தான் Optogenetics (ஆப்டோஜெனெடிக்ஸ்) என்று பெயர்.
இதன் மூலம் மூளையின் எந்த நரம்பு செல்கள் எந்த வேலையை செய்கின்றன என்பதை விஞ்ஞானிகள் துல்லியமாக ஆராய முடிந்தது. உதாரணமாக, நினைவாற்றல், பயம், தூக்கம், வலி, உடல் இயக்கம் போன்றவற்றுடன் தொடர்புடைய நரம்பு செல்களை தனித்தனியாக ஒளியால் இயக்கி, அதனால் என்ன மாற்றம் ஏற்படுகிறது என்பதை ஆய்வு செய்ய முடிந்தது. இதனால் மூளை எப்படி செயல்படுகிறது என்பதை புரிந்துகொள்வதற்கான புதிய கதவை Optogenetics திறந்தது.
இந்தக் கண்டுபிடிப்புக்காகத்தான் 2026-ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு கார்ல் டெய்செரோத், பீட்டர் ஹெகெமன், ஜார்ஜ் நாகெல் ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பால் என்ன பயன்?
இதன் மூலம் நினைவாற்றல், பயம், தூக்கம், வலி போன்ற செயல்களை மூளை எப்படி கட்டுப்படுத்துகிறது என்பதை மேலும் துல்லியமாக புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் பார்கின்சன், மனச்சோர்வு, வலிப்பு உள்ளிட்ட மூளை மற்றும் நரம்பு மண்டலம் தொடர்பான பாதிப்புகள் எப்படி ஏற்படுகின்றன என்பதை ஆராயவும், எதிர்காலத்தில் புதிய சிகிச்சை முறைகளை உருவாக்குவதற்கான ஆய்வுகளுக்கும் இந்த தொழில்நுட்பம் உதவுகிறது.
