புதிய தலைமைச் செயலகத்தை இங்கே கட்டாதே, அங்கே கட்டாதே என்று அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை பட்டினப்பாக்கத்தில் 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
அதன்படி தமிழக வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசியல் கட்சிகளும், மீனவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட தடை விதிக்க வேண்டும் என்று கோடம்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் வேந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவர் தனது மனுவில், ‘பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட அரசு முடிவு எடத்துள்ளது. நிதி நெருக்கடியில் உள்ளதாக கூறும் தமிழக வெற்றிக்கழக அரசு, 1200 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளது.
எனவே புதிய கட்டிடத்திற்கு பதிலாக ஜார்ஜ் கோட்டையில் தற்போது இயங்கி வரும் தலைமைச் செயலக கட்டிடத்தை புதுப்பித்து பயன்படுத்தினால் இவ்வளவு பெரிய தொகை செலவாகாது.
ஜார்ஜ் கோட்டையில் உள்ள கட்டிடம் நல்ல நிலையில் தான் உள்ளது. உயர்நீதிமன்றம், பேருந்து நிலையம், அரசு பொது மருத்துவமனை எல்லாம் இவற்றின் அருகில் உள்ளன. தலைமைச் செயலகம் இடமாற்றம் செய்யப்பட்டால் பொதுமக்கள் வந்து செல்வது கடினமாகிவிடும்.
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் ஏழை எளிய மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம் பாதிக்கப்படும்.
எனவே புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும். இது தொடர்பாக கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர், தமிழக வீட்டு வசதி வாரிய தலைவர் ஆகியோருக்கு அளித்த மனு மீது இதுவரை எந்த பதிலும் இல்லை.
எனவே பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை கைவிடும் படி தமிழக வெற்றிக்கழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கில் தீர்வு எட்டும் வரை தலைமைச் செயலக கட்டுமான பணிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், எந்த இடத்தில் கட்டிடம் கட்ட வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட முடியாது. இங்குதான் கட்ட வேண்டும் அங்கு தான் கட்ட வேண்டும் என்று சொல்ல முடியாது.
வழக்குக்கான முக்கிய காரணங்களை கூட இந்த மனுவில் தெரிவிக்கவில்லை என்றால் எப்படி நீதிமன்றம் வழக்கை பரிசீலினை செய்ய முடியும்.
இதே கோரிக்கையுடன் ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கை அபராதத்துடன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது.
புதிய நாடாளுமன்றம் கட்டுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2011 ஆம் ஆண்டு புதிய தலைமைச் செயலகம் கட்டுவதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
அரசின் கொள்கை முடிவுகளில் எப்படி தலையிட முடியும். இந்த வழக்கு விளம்பரத்துக்காக தொடரப்பட்டதாக நீதிமன்றம் கருதுகிறது. எனவே அபராதத்துடன் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய போகிறோம் என்று எச்சரித்தனர்.
இதைத்தொடர்ந்து மனுதாரர் வழக்கை திரும்ப பெறுவதாக தெரிவித்ததால், அபராதம் விதிக்காமல் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
.
