சிறுமிகளை பாலியல் ரீதியாக சீரழித்ததாக கைது செய்யப்பட்ட ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி மீதான போக்சோ வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட அறிக்கை: சென்னை பெருநகர காவல் விபச்சார தடுப்பு பிரிவில் பெறப்பட்ட Pendrive-ல் ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி என்பவர் சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோரது வீட்டின் படுக்கையறையில் சிறுமி ஒருவருடன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக Pendrive-ல் பதிவாகியிருந்த வீடியோவில் வீரமணி பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்ததின் அடிப்படையில், சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு, விபச்சார தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் கைது செய்யப்பட்டும் இவ்வழக்கில் வீரமணி சிறுமியிடம் ஆபாசமாக இருப்பது போன்ற மேலும் ஒரு வீடியோவை வைத்திருந்து தொடர்பாக அதைப்பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காத குற்றத்திற்காக கணேசன் என்பவரும் கைது செய்யப்பட்டு, மேற்படி நால்வரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
காவல்துறை இயக்குநர்/படைத்தலைவர் (DGP/HoPF), தமிழ்நாடு அவர்களின் உத்தரவின் பேரில் மேற்படி போக்சோ வழக்குகளில் விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (Special Investigation Team) அமைக்கப்பட்டு தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏற்கனவே ஜெம் வீரமணி மீது நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மேலும் ஒரு வழக்கு 02.10.2026 பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் உள்ளது.
மேற்படி 5 வழக்குகளில் புலன் விசாரணை மேற்கொண்டதில், ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணியின் பாலியல் துன்புறுத்தல்களுக்கு சிறுமிகளை அழைத்து வந்து உடந்தையாக இருந்த குற்றத்திற்காக, ஜெம் கிரானைட் வீரமணியின் ஓட்டுநர்கள்
1.வாசர்
2.பார்த்திபன்
3. பாபு ஆகியோர் அடையாளம் காணப்பட்டு 05.10.2026 அன்று கைது செய்யப்பட்டனர்.
மேற்கண்ட 5 வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணியின் பாலியல் துன்புறுத்தல் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஓட்டுநர்கள் Gem Granite அதிபர் வீரமணியிடம் வாசர் என்பவர் 23 வருடங்களாகவும், பாபு என்பவர் 8 வருடங்களாகவும் மற்றும் பார்த்திபன் என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளனர்.
ஜெம் வீரமணியின் குற்ற செயல்களுக்கு துணை போனது பற்றியும், அது தொடர்பாக அவர்களுடைய வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டு, 8 செல்போன்கள் மற்றும் 55 ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இவ்வழக்கில் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு சென்னை பெருநகர காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
