கடந்த 3 மாதங்களாக நடந்த ஏமாற்றம், மக்களின் பெரிய மாற்றமாக அமையும் – திமுக வேட்பாளர் சுகன்யா

Published On:

| By Pandeeswari Gurusamy

தாராபுரம் தொகுதியில் கடந்த மூன்று மாதங்களாக நடந்த ஏமாற்றம், மக்களின் பெரிய மாற்றமாக அமையும் என திமுக வேட்பாளர் சுகன்யா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கான வாக்குபதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

தாராபுரம் தொகுதிக்குட்பட்ட தளவாய்ப்பட்டினம் அரசுப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில், திமுக வேட்பாளர் சுகன்யா இன்று காலை 7 மணிக்குத் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

தளவாய்ப்பட்டினம் கிராமத்தில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக வேட்பாளர் சுகன்யா, “திமுக வேட்பாளரான நான் முதல் வாக்கைப் பதிவு செய்து, வாக்குப்பதிவை வெற்றிகரமாகத் தொடங்கி வைத்துள்ளேன். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு சீராக நடைபெற்று வருகிறது. வெற்றி கண்டிப்பாக திமுகவிற்குத்தான். கடந்த மூன்று மாதங்களாக மக்கள் சந்தித்த ஏமாற்றம், இந்தத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றமாக மாறும்.

ADVERTISEMENT

திமுக தலைவர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகள் வந்து கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இதனால் எங்களின் வெற்றி நிச்சயமாகிவிட்டது.

கடந்த மூன்று மாத காலத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமா தொகுதி மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்பது, முந்தைய திராவிட மாடல் ஆட்சியின் 100 நாள் திட்டங்களையும் தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரியும்.

ADVERTISEMENT

சத்யபாமாவை மக்கள் புறக்கணித்து வருவதைச் சமூக வலைதளங்களில் பார்த்திருப்பீர்கள். தமிழக வெற்றிக் கழகத்தினர் வெறும் ‘ரோடு ஷோ’ மட்டுமே நடத்தினார்கள்; மக்களிடம் இறங்கிப் பேச முடியவில்லை. எனக்கு அனைத்து அம்சங்களுமே சாதகமாக இருக்கின்றன. மக்கள் மீண்டும் திராவிட மாடல் ஆட்சியைத்தான் விரும்புகிறார்கள், அதுவே எங்களுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும்” எனக் கூறினார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share