தேர்தல் ஆணையத்தை நோக்கி ’இந்தியா கூட்டணி’ முற்றுகை பேரணி- ராகுல் காந்தி, பிரியங்கா, அகிலேஷ் உள்ளிட்டோர் கைது!

Published On:

| By Mathi

EC-Delhi March India Bloc

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சிகள் இன்று (அக்டோபர் 6) தேர்தல் ஆணையத்தை முற்றுகையிடும் பேரணியை நடத்தின. இந்த பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது.

ADVERTISEMENT

இதனையடுத்து இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் மகர் துவார் பகுதியில் திரண்டனர். அங்கிருந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமையகமான நிர்வாசன் சதன் நோக்கி பேரணியாக சென்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பேரணியில் பங்கேற்றனர். ஆனால் போலீசார் இந்த பேரணியை தடுத்து நிறுத்தியதால் டெல்லி நிதி ஆயோக் அலுவலகம் முன்பாக சாலையில் அமர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக கோரி முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த பேரணியை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகம் மற்றும் இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், டெல்லி போலீசார் மற்றும் மத்திய ஆயுதப் படையினர் என சுமார் 4 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

மேலும் நாடாளுமன்ற சாலை, படேல் சவுக் உள்ளிட்ட மத்திய டெல்லியின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் பேரணியை முன்னிட்டு தேர்தல் ஆணைய அலுவலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் டெல்லியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share