கேரளா மாஜி முதல்வர் பினராயி விஜயன் வழக்கு- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published On:

| By Mathi

Pinarayi Vijayan-Supreme Court

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா, மருமகன் முகமது ரியாஸ் ஆகியோர் தொடர்பான ஊழல் முறைகேடு வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இன்று (அக்டோபர் 21-ந் தேதி) 7 நாட்கள் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டைல் லிமிடெட் (CMRL) நிறுவனம், பினராயி விஜயனின் மகள் வீணாவுடன் தொடர்புடைய எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துக்கு 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை ரூ.1.72 கோடி, எந்த சேவையும் வழங்கப்படாமல் இந்தப் பணம் செலுத்தப்பட்டது என்பது அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு.

ADVERTISEMENT

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு ஏன்?

இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் பினராயி விஜயன், வீணா, முகமது ரியாஸ் ஆகியோர் தொடர்பாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய கேரள உயர்நீதிமன்றத் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்ய பினராயி விஜயன் உள்ளிட்டோர் அனுமதி கோரினர். ஆனால், அக்டோபர் 15-ந் தேதி அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து பினராயி விஜயன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர்.

ADVERTISEMENT

உச்சநீதிமன்ற உத்தரவு என்ன?

இந்த மனுவை நீதிபதிகள் ஜாய்மால்ய பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு இன்று விசாரித்தது. அப்போது, வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்ட தனி நீதிபதி, பினராயி விஜயன் உள்ளிட்டோருக்கு எதிராகக் குற்றம் நடைபெற்றிருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ள நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு உரிமை இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், பினராயி விஜயன் உள்ளிட்டோரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்காததையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இதையடுத்து, மேல்முறையீடு செய்ய அனுமதி மறுத்த கேரள உயர்நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

ADVERTISEMENT

பினராயி விஜயன், வீணா, முகமது ரியாஸ் ஆகியோர் உயர்நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம், அதற்காக இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை மீதான விசாரணைக்கு 7 நாட்கள் இடைக்காலத் தடை விதித்தது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share