உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைப்பு- வெற்றி பெற முடியாது என்ற அச்சமா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

Published On:

| By Mathi

KA Sengottaiyan-Local Body Election

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பது, தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற அச்சத்தால்தானா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2019-ம் ஆண்டு 28 மாவட்டங்களிலும், 2021-ம் ஆண்டு புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களிலும் நடைபெற்றது.

ADVERTISEMENT

2019-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் 5 ஆண்டு பதவிக்காலம் 2025-ம் ஆண்டு ஜனவரி 5-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து அந்த உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகப் பொறுப்புகள் தனி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதேபோல 2021-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் அக்டோபர் 19-ந் தேதியுடன் முடிவடைந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அக்டோபர் 19-ந் தேதி வெளியிட்ட அரசாணை எண் 166-ன்படி, ஏற்கெனவே தனி அலுவலர்கள் நிர்வாகத்தில் உள்ள 28 மாவட்டங்களில் அவர்களது பதவிக்காலம் 2027 ஏப்ரல் 19-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பதவிக்காலம் முடிவடைந்த 9 மாவட்டங்களிலும் அதே தேதி வரை தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் 37 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் மேலும் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலமும் 2027 மார்ச் மாதத்தில் முடிவடைய உள்ளதால், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்துவதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் புதுக்கோட்டையில் நேற்று (அக்டோபர் 21) வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர். இதற்கு அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பதில்: பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பல்வேறு தொகுதிகளில் மாற்றங்களை உருவாக்க வேண்டும். பெண்கள், பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை மாற்றியமைக்க வேண்டும். தொகுதிகளைச் சீரமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற அச்சத்தால் தள்ளி வைக்கப்படவில்லை. நம்முடைய தமிழக முதல்வர் விஜய்க்கு என்றைக்கும் அச்சம் இல்லை. அவர் எங்கே சென்றாலும் மக்கள் வெள்ளத்தில்தான் செல்கிறார். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share