’எல். முருகன் ராஜினாமா’ ராஜ்யசபா சீட் யாருக்கு? முட்டி மோதும் தமிழகம் + ம.பி. பாஜக ‘தலைகள்’!

Published On:

| By Mathi

MP RS Seat- Candidates

மத்திய இணை அமைச்சராக இருந்த எல்.முருகன் ராஜினாமா செய்ததால் மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை (ராஜ்யசபா) எம்.பி. இடத்துக்கு நவம்பர் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த எம்.பி. சீட்டைப் பெற்று மத்திய அமைச்சராவதற்கு பாஜகவின் பல ‘தலை’கள் முட்டி மோதுகின்றன.

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எல்.முருகனின் பதவிக்காலம் 2030-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந் தேதி வரை இருந்தது. ஆனால் திடீரென எல்.முருகன் தமது மத்திய அமைச்சர் பதவி மற்றும் ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

ADVERTISEMENT

எல்.முருகனின் இந்த ராஜினாமாவின் பின்னணி குறித்து மின்னம்பலத்தில் ஏற்கெனவே நாம் விரிவாக எழுதியிருந்தோம்.

இந்த நிலையில், எல்.முருகன் ராஜினாமா செய்த எம்.பி. இடத்துக்கு நவம்பர் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று (அக்டோபர் 22-ந் தேதி) அறிவித்துள்ளது. அக்டோபர் 26-ந் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நவம்பர் 2-ந் தேதி முடிவடைகிறது. நவம்பர் 3-ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. நவம்பர் 5-ந் தேதி வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள்.

ADVERTISEMENT

நவம்பர் 12-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்றைய தினமே மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இதையடுத்து இந்த ராஜ்யசபா எம்.பி. சீட் இடைத்தேர்தல் வேட்பாளர் யார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எல்.முருகன் பதவி விலகிய உடனேயே இந்த ராஜ்யசபா சீட்டுக்கான போட்டி தமிழக பாஜகவில் தொடங்கிவிட்டது என நாம் எழுதி இருந்தோம். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் களமிறங்கி இருப்பதாகவும் பதிவு செய்திருந்தோம்.

ADVERTISEMENT

ஆனால் மத்திய பிரதேசத்தில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த இன்னொரு தலைவரை மாநிலங்களவைக்கு அனுப்புவதா? அல்லது அந்த மாநில பாஜக தலைவர்களில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்குவதா? என்பதுதான் இப்போது பாஜக மேலிடத்தின் முன்பு உள்ள கேள்வி.

இந்த நிலையில் எல்.முருகன் ராஜினாமா செய்த ராஜ்யசபா சீட் யாருக்கு கிடைக்கும் என நாம் டெல்லி பாஜக வட்டாரங்களில் விசாரித்த போது, “தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருவரை மீண்டும் அந்த எம்.பி. இடத்துக்கு தேர்வு செய்வது குறித்து மேலிடத் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த கேட்டகிரியில் பாஜகவின் தேசிய மகளிரணி தலைவியாக இருந்த வானதி சீனிவாசன் பெயர் அடிபடுகிறது.

அதே நேரத்தில் ம.பி. பாஜக தலைவர்கள் பலரும் எப்படியாவது எம்.பி. சீட்டை பெற்றுவிடுவது என முயற்சிக்கின்றனர். மத்திய பிரதேச முன்னாள் அமைச்சர் அரவிந்த் பதோரியா, மத்திய பிரதேச முன்னாள் உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, மாநில பாஜக பொதுச்செயலாளர் ராகுல் கோத்தாரி, பாஜக தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளர் ஆஷிஷ் அகர்வால், மாநில பாஜக முன்னாள் துணைத் தலைவர் வினோத் கோட்டியா, மாநில துணைத் தலைவர் ஷைலேந்திர பருவா, முன்னாள் அமைச்சர் ரஞ்சனா பாகேல் ஆகியோரும் முட்டி மோதுகின்றனர்.

ம.பி. சட்டசபைக்கு 2028-ம் ஆண்டுதான் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. அதனால் தற்போதைய இடைத்தேர்தலில் வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு, இனிவரும் ராஜ்யசபா தேர்தல்களில் ம.பி. மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்ற யோசனையும் பாஜக மேலிடத்தின் பரிசீலனையில் இருக்கின்றது” என்கின்றனர்.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share