மணிப்பூரில் மீண்டும் வெடித்த போராட்டம்.. பெண்கள் பிரம்மாண்ட தீப்பந்தப் பேரணி!

Published On:

| By Mathi

Manipur-Protest

மணிப்பூரில் 3 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, மெய்ரா பைபி பெண்கள் அமைப்பினர் நேற்று (அக்டோபர் 21-ந் தேதி) இரவு பிரம்மாண்ட தீப்பந்தப் பேரணி நடத்தினர்.

மணிப்பூரின் சுனுரோக் மலைப்பகுதியில் அக்டோபர் 19-ந் தேதி விறகு சேகரிக்கச் சென்ற மைத்தேயி இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் மீது ஆயுதமேந்திய நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் மைத்தேயி இனக்குழுவினரை கொந்தளிக்க வைத்துள்ளன.

ADVERTISEMENT

இந்தத் தாக்குதலைக் கண்டித்து மணிப்பூரில் மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள 5 மாவட்டங்களில் 48 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. கடைகள், சந்தைகள் மூடப்பட்டதுடன் அனைத்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், இம்பாலில் கெய்கோல் பகுதியில் இருந்து தேசிய நெடுஞ்சாலை எண் 2 வழியாக லுவாங்சங்பாம் விளையாட்டு வளாகம் நோக்கி மெய்ரா பைபி பெண்கள் அமைப்பினர் தீப்பந்தங்களை ஏந்தியபடி பேரணியாக சென்றனர்.

ADVERTISEMENT

படுகொலை செய்யப்பட்ட 3 பேருக்கும் நீதி வழங்க வேண்டும், பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்கத் தவறிய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

முன்னதாக, மணிப்பூர் முதல்வர் யும்னம் கேம்சந்த் சிங், துணை முதல்வர் நெம்சா கிப்கென், உள்துறை அமைச்சர் கோவிந்தாஸ் கொந்தோஜம் ஆகியோரின் உருவபொம்மைகளையும் போராட்டக்காரர்கள் எரித்தனர்.

ADVERTISEMENT

மேலும், இம்பாலில் முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்ற விளையாட்டு வளாகம் அருகே போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனர். இதில் 3 பெண்கள் காயமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share