எல்.முருகன் ராஜினாமா செய்த மாநிலங்களவை இடத்துக்கு நவ. 12-ல் இடைத்தேர்தல்

Published On:

| By Mathi

L Murgan- RS Seat

மத்திய இணை அமைச்சர் பதவியையும் மாநிலங்களவை எம்.பி. பதவியையும் எல்.முருகன் ராஜினாமா செய்த நிலையில், மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள அந்த மாநிலங்களவை இடத்துக்கு நவம்பர் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று (அக்டோபர் 22-ந் தேதி) அறிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட எல்.முருகனின் பதவிக்காலம் 2030-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந் தேதி வரை இருந்தது. ஆனால் தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் கட்சிப் பணிகளில் முழுநேரமாக ஈடுபடப் போவதாகக் கூறி, அக்டோபர் 13-ந் தேதி பிரதமர் மோடிக்கு 5 பக்க ராஜினாமா கடிதத்தை எல்.முருகன் அனுப்பியிருந்தார்.

ADVERTISEMENT

2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்க விரும்புவதாகவும், அதற்காக மத்திய அமைச்சர் பதவி மற்றும் மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து விலகுவதாகவும் எல்.முருகன் தெரிவித்திருந்தார்.

ஆனால் எல்.முருகனின் இந்தத் திடீர் ராஜினாமாவின் பின்னணியில் என்ன நடந்தது? பிரதமர் மோடியின் அதிருப்தியால்தான் அவர் பதவி விலகினாரா? என்பது குறித்து அக்டோபர் 14-ந் தேதி நமது மின்னம்பலத்தில், “எல்.முருகன் பதவிக்கு ‘வேட்டு’ ஏன்? மோடியை சீறவைத்த ‘அந்த’ சீரியஸ் சம்பவம் என்ன? ராஜினாமாவின் பகீர் பின்னணி!” என்ற தலைப்பில் விரிவாக எழுதியிருந்தோம்.

ADVERTISEMENT

அதில் எல்.முருகன் தொடர்பாக பிரதமர் அலுவலகத்துக்குச் சென்ற புகார்கள், பிரதமர் மோடியின் சென்னை வருகையின்போது நடந்த சம்பவங்கள் உள்ளிட்டவை குறித்து டெல்லி பாஜக வட்டாரங்கள் தெரிவித்த தகவல்களைப் பதிவு செய்திருந்தோம்.

இதனிடையே எல்.முருகனின் மத்திய அமைச்சர் பதவி ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அக்டோபர் 15-ந் தேதி ஏற்றுக்கொண்டதாக குடியரசுத் தலைவர் செயலகம் அறிவித்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், எல்.முருகன் ராஜினாமா செய்ததால் மத்திய பிரதேசத்தில் காலியான மாநிலங்களவை இடத்துக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதன்படி அக்டோபர் 26-ந் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. நவம்பர் 2-ந் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள். நவம்பர் 3-ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். நவம்பர் 5-ந் தேதி வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளாகும்.

நவம்பர் 12-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்றைய தினமே மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும். நவம்பர் 16-ந் தேதிக்குள் தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் முடிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் புதிய மாநிலங்களவை உறுப்பினரின் பதவிக்காலம் 2030-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந் தேதி வரை இருக்கும்.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share