சென்னையில் உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில், தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோரிக்கை மனுக்களை முதல்வர் நேரடியாகப் பெறுவதற்கு சந்திப்பு நேரம் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக அவர்கள் மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டிடத்தின் கிழக்குப் பகுதி வாயிலில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
விசில் ஊதுதல், துடைப்பத்தால் தூய்மைப்படுத்துதல், மெழுகுவர்த்தி ஏந்துதல் போன்ற நூதன முறையில் போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்கள், ஞாயிற்றுக்கிழமை மாலை கருப்பு உடையில் வாயில் கருப்புத் துணி கட்டியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், ராஜ்மோகன் உள்ளிட்டோர் தூய்மைப் பணியாளர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், “முதலமைச்சர் உங்களைச் சந்தித்து உங்களின் குறைகள் என்னவென்று கேட்க எங்களை அனுப்பி வைத்துள்ளார். எப்போதும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களிடம் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வரும்போது யாருக்கும் சிரித்த முகம் இருக்காது; ஆனால், இங்கு நாங்கள் வரும்போதே எங்களைச் சிரித்த முகத்துடன் சந்தோஷமாக வரவேற்றீர்கள். ஏனென்றால், தமிழக முதல்வர் உங்களுக்கு எல்லாமே செய்வார் என்ற நம்பிக்கை உங்கள் முகத்தில் எந்த அளவிற்கு மகிழ்ச்சியைக் காட்டுகிறது என்பதை நாங்கள் பார்த்தோம்.
நீங்கள் எல்லோரும் இவ்வளவு நாளாக இருந்துவிட்டீர்கள், எல்லோரையும் பார்த்து விட்டீர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்து 116 நாள்தான் ஆகிறது; ஆனால், உங்கள் எல்லோருக்கும் ஒரு சூத்திரம் தெரிந்துள்ளது. ஏதாவது ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று செய்தால் மற்ற ஆட்சிகளில் என்ன ஏது என்று கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால், ‘தளபதி முதலமைச்சர் செய்யக்கூடியவர்’ என்ற சூத்திரம் உங்கள் எல்லோருக்கும் தெரிந்துள்ளது. அதனால், பல ஆண்டுகளாகப் போராட்டம் செய்தும் யாரும் என்ன ஏது என்று கேட்காமல் தரதரவென்று இழுத்துச் சென்று வேனில் ஏற்றுவதையெல்லாம் செய்தார்கள். ஆனால், நாங்கள் அப்படி இல்லை; எங்கள் முதலமைச்சர் எங்களை அப்படி வளர்க்கவில்லை. ஏழை எளிய மக்களுடன் இருக்கும் ஒரு மக்கள் முதல்வர் நமது முதலமைச்சர்.
அதனால் நீங்கள் எல்லோரும் கேட்கிறீர்கள்; உங்கள் கோரிக்கைகள் நியாயமானவை, நாங்கள் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், பழைய ஆட்கள் கஜானாவையே காலி செய்துவிட்டுப் போய்விட்டார்கள். கஜானா காலியாகத்தான் இருக்கிறது, அதில் ஒன்றும் இல்லை. இருந்தாலும், அந்த கஜானாவை ஒழுங்காகப் பராமரிப்போம். மக்களின் வரிப்பணத்தில் ஒரு ரூபாயைக்கூட நாங்கள் யாரும் தொடாமல் அதைப் பத்திரமாக வைத்து, உங்களுக்கு என்ன தேவையோ உங்களது கோரிக்கைகளை உங்கள் தோழர்களுடன் கலந்து பேசி எதை உடனடியாகச் செய்ய முடியுமோ அதை முதல்வர் செய்து தருவார் என்ற நம்பிக்கையை நாங்கள் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறோம்.
உங்களைப் பார்க்கும்போது எங்களுக்குச் சங்கடமாக இருக்கிறது. உங்களது சிரிப்புடன் எங்களை வரவேற்றீர்கள்; அந்தச் சிரிப்பு கடைசி காலம் வரை உங்களுக்கு இருக்கும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. நீங்கள் எல்லோரும் சந்தோஷத்தோடு இருக்க வேண்டும், அதற்கு எப்போதும் முதல்வர் உங்களுடன் இருப்பார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். நாம் எல்லோரும் கலந்து பேசி நல்ல முடிவை எடுப்போம்” என்றார்.
