பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில், ‘தயவுசெய்து அரசியல் பேச வேண்டாம்’ என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற தனது 88-வது பிறந்தநாள் விழாவில் பேசிய மருத்துவர் ராமதாஸ், “இன்று முதல் அரசியல் துறவறம் பூணுகிறேன். அரசியல் துறவறம் என்னும் சொல், நான் அரசியலைப் பேச மாட்டேன்; அரசியலுக்கு வழிகாட்ட மாட்டேன் என்பதைக் குறிக்கும்” என்று தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தற்போது மருத்துவர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள், தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோரை மருத்துவர் ராமதாஸ் சந்தித்து உரையாடி வருகிறார். இந்நிலையில், தைலாபுரம் இல்ல நுழைவு வாயிலில் அறிவிப்புப் பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில், “நாள்தோறும் காலை 10 மணி முதல் முற்பகல் 12 மணி வரை மருத்துவர் ராமதாஸை சந்திக்கலாம். அவர் அரசியல் துறவறம் மேற்கொண்டுள்ளதால், சந்திக்க வரும் பார்வையாளர்கள் தயவுசெய்து அரசியல் பேச வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் தளத்தில் முதுபெரும் தலைவராக உள்ள மருத்துவர் ராமதாஸின் இல்ல வாயிலில் இது போன்ற கட் அவுட் வைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. முன்னதாக, ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், அன்புமணி தனது பெயருக்குப் பின்னர் ‘ராமதாஸ்’ என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று ராமதாஸ் அறிவித்திருந்தார். சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர், அன்புமணி ராமதாஸுடனான பிரச்சினை முடிவுக்கு வந்த நிலையில், ராமதாஸ் அரசியல் துறவறம் பூண்டுள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
