மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா ஆகியோர் கலந்து கொண்ட ஒரு தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த இரண்டு பெண் பத்திரிகையாளர்களை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி சாகேட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றின் புதிய பிரிவு திறப்பு விழாவில் நேற்று முதல்வர் ரேகா குப்தா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது டெல்லியில் பிரபலமான 4pm நியூஸ் நெட்வொர்க் யூடியூப் சேனலுக்காக பணியாற்றிய ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர்கள் ஷாகின் கான் மற்றும் நஃபீஸா கான் இருவரும் முதல்வர் ரேகா குப்தாவிடம் சில கேள்விகளை எழுப்பியதாக தகவல்கள் வருகின்றன.
இந்த சூழலில் அங்கு பணியில் இருந்த டெல்லி போலீசார் அந்த இரு பெண் பத்திரிகையாளர்களையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றி காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து சாகேட் காவல் நிலையத்தில் வைத்து இரு பெண் பத்திரிகையாளர்களையும் பெண் போலீசார் உள்பட காவல்துறையினர் தாக்கியதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த பத்திரிக்கையாளர்களில் ஒருவர் வேதனையுடன் செய்தியளிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
இரு பெண் பத்திரிக்கையாளர்களுக்கும் உடலில் சிராய்ப்பு இருப்பதையும் வீடியோவில் காணமுடிகிறது.
மேலும் ஒருவர் தரையில் சுயநினைவின்றி கிடக்கும் வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது.
இது தொடர்பாக 4pm நியூஸ் நெட்வொர்க்கின் தலைமை ஆசிரியர் சஞ்சய் சர்மா கூறுகையில், “சமீப நாட்களாக டெல்லி அரசு மற்றும் முதல்வர் ரேகா குப்தா தொடர்பான விஷயங்கள் குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்பி செய்திகளை வெளியிட்டு வருகிறோம். இத்தகைய சூழலில் இந்த நடவடிக்கைக்கும் அந்த செய்திகளுக்கும் கேள்விகளுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று சிந்திப்பது இயல்பானது தான்” என்ற பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சரிடம் கேள்வி கேட்பது குற்றமா? ஒரு பத்திரிக்கையாளரின் கேள்வி எப்போது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இவ்வளவு ஆபத்தானாக மாறியது. பத்திரிகையாளர்களின் பெயரில் ‘கான்’ இருப்பது அவர்களை தாக்குவதற்கான காரணமாக அமையுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த சூழலில் இந்திய பத்திரிக்கையாளர் சங்கம், இந்திய மகளிர் பத்திரிக்கையாளர் படை, டெல்லி பத்திரிகையாளர் சங்கம் மற்றும் கேரள உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் ஆகியவை செப்டம்பர் 3ஆம் தேதி நிகழ்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளன.

இரண்டு பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நியாயமான விசாரணையை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி காவல் ஆணையர் அனுரா குமாரிடம் பத்திரிகை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
