விஜய் பிரச்சார விவகாரம்: உண்மையை சொல்லட்டுமா?’ பேரவையில் கொந்தளித்த உதயநிதி

Published On:

| By Pandeeswari Gurusamy

திமுக ஆட்சியில் பிரச்சாரத்திற்கு அனுமதி அளித்திருந்தால் 234 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றிருக்கும் என அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் இன்று முதல்வர் விஜய் துறைசார்ந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பதில்லை என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், “எப்போது பேச வேண்டும், யாரிடம் பேச வேண்டும் என்பதை எல்லாம் அவர் பேசுவார். நீங்கள் இரண்டு, இரண்டரை ஆண்டுகள் பேசியதால்தான் இன்று தவெக ஆட்சியில் முதல்வர் சீட்டில் விஜய் இருக்கிறார். உண்மையில் எங்களது எதிர்க்கட்சித் தலைவரைக் கேட்டுக்கொள்வதெல்லாம், உங்கள் ஆட்சியில் எங்களுக்கு எவ்வளவு தொல்லை கொடுத்தீர்கள் என்பது தெரியும், குறிப்பாக எனக்கு நன்றாகவே தெரியும்” என்றார். இதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆனந்த், “சாயந்திரம் 4 மணிக்குக் கூட்டமென்றால் காலை 11 அல்லது 12 மணிக்குத்தான் உத்தரவு கொடுப்பீர்கள். அதற்கு 37 நிபந்தனைகள் போட்டு, என்னென்ன சட்டங்கள் இருக்கிறதோ அத்தனையும் போடுவீர்கள். கடலூர் மாவட்டத்தில் தலைவர் பிரச்சாரத்திற்குப் போகிறார் என்றவுடன் காலையில் அனுமதி கொடுத்துவிட்டு, மதியம் கேன்சல் செய்வீர்கள். இரண்டு முறை கடலூரில் பெர்மிஷன் கொடுத்துவிட்டு, ‘மதியம் பெர்மிஷன் இல்லை’ என்றீர்கள். இப்படியாக எல்லா இடங்களிலும் செய்தீர்கள்.

உங்களது நல்ல நேரம், எல்லா இடங்களிலும் பர்மிஷன் கொடுத்திருந்தீர்கள் என்றால், 234 தொகுதிகளிலும் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெற்றிருப்போம். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை; அந்தப் புத்திசாலித்தனமாக நீங்கள் எல்லாமே செய்துவிட்டீர்கள். நான் பொதுச்செயலாளர் என்பதால், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் எஸ்பி மற்றும் டிஎஸ்பியிடமும் நான் எப்படிப் போனேன், வந்தேன் என்பது எனக்குத்தான் தெரியும்” என்றார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தேர்தலுக்கு முன்பாக நாங்கள் அவர்களைப் பற்றி பேசித்தான் அவர்கள் இந்த நிலைமைக்கு வந்துவிட்டார்கள் என்கிறார்கள். உண்மையைச் சொல்லட்டுமா? நானாக இருக்கட்டும், எங்களது கழகத் தலைவராக இருக்கட்டும், முன்னணி தலைவர்களாக இருக்கட்டும், யாருமே அவர்களைப் பற்றி பேசாததால்தான் அவர்கள் இந்த இடத்திற்கு வந்துவிட்டார்கள். நாங்கள் ஒரு வார்த்தை கூட அவர்களைப் பற்றி பேசவே இல்லை; பேசியதற்கான ஆதாரங்கள் இருந்தால் காட்டுங்கள்.

‘இவர்களது தலைவருக்கு நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை’ என்கிறார்கள். அதற்குள் நான் சென்றால் தவறாகப் போய்விடும், நிறைய விஷயங்கள் பேச வேண்டி வரும் என்பதால் நான் பேச விரும்பவில்லை. எங்கெல்லாம் சட்டப்பூர்வமாக அனுமதி கொடுக்க முடிந்ததோ அங்கெல்லாம் கொடுத்திருக்கிறோம். தேர்தல் விதிமுறைகள் வந்தவுடன் இதை தேர்தல் ஆணையம்தான் எடுத்துக்கொள்ளும்; அது அரசு எடுக்கும் முடிவு கிடையாது.

ADVERTISEMENT

மேலும், அவர்களது தலைவர் சில மாவட்டங்களுக்குச் சென்றார். குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தார்; அங்கெல்லாம் ஒரு தொகுதியில் கூட அவர்கள் ஜெயிக்கவில்லை. இன்னும் மெஜாரிட்டி இல்லாத ஒரு அரசுதான் நடந்து கொண்டிருக்கிறது. பெரும்பான்மை என்பது அவர்களுக்கு கிடையாது; எங்களுடைய தயவுடன்தான் அவர்களுடைய ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share