‘பாலியல் வன்கொடுமை’ நடந்தால் பெண்களுக்கு மட்டும்தான் கற்பு பறிபோகுமா? ஆண்களுக்கு இல்லையா என சிபிஎம் எம்எல்ஏ லதா கேள்வி எழுப்பினார்.
சட்டமன்றத்தில் இன்று (செப்டம்பர் 3) காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய சிபிஎம் எம்எல்ஏ லதா, “முன்னாள் முதல்வர் பேசும்போது கூறிய ‘கற்பழிப்பு’ என்ற ஒரு வார்த்தை கடந்துபோய் கிட்டத்தட்ட ஒரு 30 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அதற்கெல்லாம் புதிய வார்த்தைகள் வந்துவிட்டது. இந்த அவையிலேயே இரண்டு வாரத்துக்கு முன்பு நம்மளுடைய பொதுப்பணித்துறை அமைச்சர் கூட அந்த வார்த்தையை பயன்படுத்தினார். அதாவது ‘பாலியல் வன்கொடுமை’ என்ற வார்த்தையை பயன்படுத்தலாம். இன்னொரு விஷயம் அந்த சம்பவம் நடந்தது என்றால், பெண்ணுக்கு மட்டும்தான் அந்த கற்பு பறிபோகுதா? ஆணுக்கு இல்லையா? அதனால் இந்த மாதிரியான வார்த்தைகளை தயவுசெய்து இது மாதிரியான ஒரு பேரவையில் பயன்படுத்தக்கூடாது என்று நான் கேட்டு கொள்கிறேன்.” என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய துணை சபாநாயகர், “எந்த உள்நோக்கத்தோடு யாரும் சொல்வது இல்லை. என்றர்.
அப்போது குறுக்கிட்டு பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “அப்படி வார்த்தையை நான் பயன்படுத்தலையே! பாலியல் சீண்டல், பாலியல் துன்புறுத்தல் என்றுதான் சொல்லியிருக்கிறேன். ஏதோ தவறுதலாக வந்திருக்கலாம். அப்படி இருந்தால் அதை அவை குறிப்பில் இருந்து நீக்கி விடலாம்.,
இதைத்தொடர்ந்து பேசிய துணை சபாநாயகர், ” நீங்கள் சொன்ன காரணம் ரொம்ப நியாயமானது. கற்பு என்பது இருபாலருக்கும் பொதுவானது. அது ஏதோ பெண்களுக்கு மட்டும் உரியது என்பது போல அது அர்த்தமாகிவிடுகிறது. நாமும் இங்கு வேணும் என்று பதிவு செய்யவில்லை. அரை நூற்றாண்டு காலமாக அப்படி பேசி பழகிவிட்டது. இனி வரும் காலங்களில் அந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்.” என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ” நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் சகோதரி அவர்களுடைய வார்த்தை நியாயமானது. இனி அவையில் இனிமேல் பாலியல் வன்கொடுமை என்பதை நாம் பதிவு செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கிறது. அதற்கான வருத்தத்தை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.
