சட்டப்பேரவையில் இருந்து முதல்வர் கிளம்பிய நிலையில், “இப்போது ஓடிப் போனது யார்” என்று உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (செப்டம்பர் 3) காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது சட்டம் ஒழுங்கு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக்கழக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.
”மக்கள் பிரச்சினைகளை சார்ந்து நான் எழுப்பும் கேள்விகளுக்கு திசை திருப்புதலும் பழி போடுகின்ற தந்திரங்களும் இல்லாமல் முதல்வர் விஜய் உரிய பதிலை அளிக்க வேண்டும்” என்று கூறினார்.
இந்த நிலையில் எழுந்து பேசிய முதல்வர் விஜய், “உறுப்பினர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான விளக்கத்தை நான் வரும் திங்கள்கிழமை தருகிறேன். நான் இங்கு இல்லை என்றால் கூட என்னென்ன கேள்வி கேட்கிறார்கள் என்ற தகவல் எல்லாம் எனக்கு வந்துவிடும். அன்றைய தினம் நான் தெளிவான பதிலை சொல்கிறேன். அவர்களிடம் ஒரு பிராமிஸ் கேட்கிறேன். யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது” என்று கூறிவிட்டு சட்டப்பேரவையில் இருந்து கிளம்பினார்.
இந்த நிலையில் உடனடியாக எழுந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “கடைசியாக யார் ஓடிப்போனது என்று எல்லோரும் பார்த்திருப்பார்கள். முதலமைச்சர் இந்த பதிலை ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக சொல்லி இருக்க வேண்டும். அப்போது எந்த பிரச்சனையும் வந்திருக்காது. இதனால்தான் நான் முன்னதாகவே தயாராகிக் கொண்டு வாருங்கள் என்று சொன்னேன்” என கூறினார்.
இதனால் தமிழக வெற்றி கழக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், ”இது காவல்துறை மீதான மானிய கோரிக்கை. யார் பதில் சொல்ல வேண்டுமோ அவர் பதில் சொல்வதில்லை. மற்ற அமைச்சர்கள் எல்லாம் பதில் சொல்கிறார்கள். முதல்வர் எந்த நேரத்திலும் பதில் சொல்வார் என்று நீங்கள் (சபாநாயகர்) சொன்னீர்கள். அதனால் தான் கேட்கிறேன்” என்றார்.
இதற்கு சபாநாயகர், ”திங்கள் கிழமை பதிலுரை இருக்கிறது. இன்னும் 13 உறுப்பினர்கள் பேச வேண்டும். எல்லோரும் பேசுவதை கவனமாக கேட்டுக் கொண்டு, திங்கள் கிழமை நிச்சயமாக அவர் பதிலளிப்பார். அதேபோன்று கூட்டுப் பொறுப்பு அடிப்படையில் முதல்வருக்கு பதிலாக அமைச்சர்களும் பதிலளிக்கலாம்” என குறிப்பிட்டார்.
