திமுக ஆட்சியில் தமிழ்நாடு ‘டாப் கியரில் சென்று கொண்டிருந்த நிலையில் தவெக ஆட்சியில் இந்த 116 நாட்களில் தமிழ்நாடு ‘ரிவர்ஸ் கியர்’-ல் போய்க்கொண்டிருக்கிறது என உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளர்.
சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. சட்டமன்றத்தில் இன்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டம்-ஒழுங்கு குறித்துப் பேச எனக்கு வாய்ப்பு அளித்துள்ளீர்கள். மக்கள் பிரச்சினைகளைச் சார்ந்து நான் எழுப்பும் கேள்விகளுக்குத் திசைதிருப்புதலும் (Diversion) பழிபோடுகின்ற தந்திரங்களும் இல்லாமல், முதல்வர் உரிய பதிலை அளிப்பார் என்ற நம்பிக்கையுடன் எனது பேச்சைத் தொடங்குகிறேன். ஆக்கபூர்வமான விமர்சனங்களை எழுப்பத்தான் சட்டமன்றத்திற்கு எதிர்க்கட்சியாக எங்களை மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளனர்.
முதலில், இந்த அரசு வழங்கியுள்ள கொள்கை விளக்கக் குறிப்பு நேற்று இரவு 12 மணி அளவில் என்னிடம் வந்து சேர்ந்தது. அதைப் படித்துப் பார்த்தேன். ‘திராவிட மாடல்’ ஆட்சியில் குற்றங்கள் குறைந்துள்ளதாகக் கொள்கை விளக்கக் குறிப்புப் புத்தகத்தின் 293, 295 மற்றும் 296-ஆம் பக்கங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பாக, வழிப்பறி, திருட்டு ஆகிய குற்றங்கள் 2024-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2025-ஆம் ஆண்டில் பெருமளவு குறைந்துள்ளதாக அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். கொலை, கொலை முயற்சி, கலவரங்கள், பாலியல் குற்றங்கள் அனைத்தும் குறைந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இன்னும் சொல்லப்போனால், சாதிப் பாகுபடுத்தப்பட்ட கொலைகள் பெருமளவில் குறைந்துள்ளதாக உங்கள் கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளீர்கள். எனவே, எங்களது ‘திராவிட மாடல்’ ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு நன்றாக இருந்தது என்று காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் நேர்மையாக ஒப்புக்கொண்டதற்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த அரசு அமைந்து சரியாக 116 நாட்கள் ஆகின்றன. இந்த 116 நாட்களில் இந்த அரசு புதிதாக எந்தத் திட்டங்களையும் கொண்டுவரவில்லை; ஏற்கனவே இருந்த எங்களது அரசு கொண்டுவந்த பல்வேறு திட்டங்களை ரத்து செய்துள்ளனர். இந்த அரசிடமிருந்து ஒன்று பெயர் மாற்ற அறிவிப்பு வருகிறது, இல்லை என்றால் திட்டமே ரத்து என்ற அறிவிப்பு வருகிறது. உதாரணத்திற்கு:
பரந்தூர் விமான நிலையம்
காஞ்சிபுரம் புது நகர் திட்டம்
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம்
நாமக்கல் சிப்காட்
பரந்தூர் மெட்ரோ
ஈ.சி.ஆர். (ECR) மேம்பாலம்
ஓசூர் டைடல் பார்க்
ஓசூர் நாலெட்ஜ் பார்க்
மாமல்லன் நீர்த்தேக்கம் திட்டம்
என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. எங்களது கழக அரசு நடைபெற்றபோது தமிழ்நாடு ‘டாப் கியர்’ -ல் போய்க்கொண்டிருந்தது. ஆனால், இந்த 116 நாட்களில் தமிழ்நாடு ‘ரிவர்ஸ் கியர்’-ல் போய்க்கொண்டிருக்கிறது.
நான் முதல்வரிடம் கேட்க விரும்புவது கழக அரசு தமிழ்நாட்டின் நன்மைகளுக்காகக் கொண்டுவந்த திட்டங்களை எதற்காக ரத்து செய்துள்ளீர்கள்? தேர்தல் வாக்குறுதியில் ஏராளமான திட்டங்களைச் சொல்லியிருந்தீர்கள்; ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே நிறைவேற்றுவோம் என்றீர்கள். விவசாயக் கடன் முழுத் தள்ளுபடி என்றீர்கள், வருடத்திற்கு மூன்று சிலிண்டர் என்றீர்கள், அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்குக் கட்டணமில்லாப் பயணம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தீர்கள். ஆனால், இவர்களின் அறிவிப்பு எல்லாம் எப்படி இருக்கிறது என்றால், விவசாயக் கடன் தள்ளுபடிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை (Slab) வைத்துள்ளீர்கள். இப்போது மூன்று சிலிண்டர் மட்டும்தான் தருவோம், அதையும் அடுத்த ஆண்டுதான் தருவோம் என்று சொல்லியிருக்கிறீர்கள். கொடுத்த வாக்குறுதியை முழுமையாகச் செயல்படுத்தாமல், பாதி பாதியாக நிறைவேற்றப் போவதாக அறிவிப்பு மட்டுமே வெளியிட்டுள்ளீர்கள். ‘தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்’ என்று சொன்னீர்கள், ஆனால் இந்த அரசின் எல்லா திட்டங்களுக்கும் சேர்த்து மொத்தமாக ‘தாய்மாமன் காதுகுத்துத் திட்டம்’ என்று பெயர் வைத்துவிடலாம். இந்த அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்றடைவதை விட, இவர்கள் போடும் ‘ரீல்ஸ்’ (Reels) எல்லாம் மக்களை அதிகமாகச் சென்றடைந்தால் போதும் என்ற நிலையில்தான் இந்த அரசின் செயல்பாடுகள் உள்ளன. இந்த நிலை எப்போது மாறும் என்று முதல்வர் தனது பதில் உரையில் சொல்ல வேண்டும்.
காவல்துறையைப் பொறுத்தவரை, துறையின் மேம்பாட்டிற்காகக் கழக ஆட்சியில் எங்களது தலைவர் முதல்வராக இருந்தபோதுதான் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழகத்தில் காவல்துறை சீர்திருத்தத்திற்காக இதுவரை அமைக்கப்பட்ட ஐந்து காவல் ஆணையங்களில், நான்கு காவல் ஆணையங்கள் எங்களது அரசின் கால கட்டத்தில்தான் அமைக்கப்பட்டன. கடைசியாக, 2023-ஆம் ஆண்டு எங்கள் தலைவர் தலைமையிலான ஆட்சியில், ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சி.டி. செல்வம் தலைமையில் ஐந்தாவது காவல் ஆணையம் அமைக்கப்பட்டது.
அந்த ஆணையத்தில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அலாவுதீன், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி கே. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல காவல் துறை அதிகாரிகள் இந்தப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். 2023-ல் அவர்கள் இடைக்கால அறிக்கை அளித்தனர். அதற்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையில், அன்றைய முதல்வரான எங்களது தலைவர் அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டார். ஐந்தாவது போலீஸ் கமிஷன் 800 கோரிக்கைகளைக் கொடுத்திருந்தது; அதில் 86 பரிந்துரைகளை எங்களது ஆட்சியில் படிப்படியாக நிறைவேற்றிக் காட்டினோம். இந்த அரசை நான் கேட்டுக்கொள்வது, மீதமுள்ள கோரிக்கைகளைப் படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் என்பதாகும்.
முக்கியமாக, இஸ்லாமிய சமுதாயத் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று, பல ஆண்டுகளாகச் சிறையில் வாடிய இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு எங்களது ஆட்சியில் நீண்டகால விடுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. எங்களது அரசு செய்ததுபோல், இந்த அரசும் நீண்டகாலமாகச் சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளுக்கு நீண்டகால விடுப்பு வழங்க வேண்டும் என்று அவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த கோரிக்கையை அரசு ஏற்று உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.
சட்டம் இருக்கு ஆனால் ஒழுங்கு?
கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு நிச்சயம் சிறப்பாகச் செயல்பட்டது. இதுவரை இல்லாத வகையில் அதிக அளவிலான போதைப் பொருள்களை எங்களது ஆட்சியில் நாங்கள் பறிமுதல் செய்துள்ளோம். முதல்முறையாகக் குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகள், சொத்துக்கள் முடக்கப்பட்டன. அதிகப்படியான தண்டனைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டன. குறிப்பாக, பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் உடனுக்குடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை எங்களது அரசு பெற்றுத் தந்தது. உதாரணத்திற்கு, வேலூரில் நடந்த ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கில் 32 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தோம்.
ஆனால், இன்று என்ன நிலைமை? சட்டம் இருக்கிறது; ஆனால், ஒழுங்கு இல்லை. இது வெறும் குற்றச்சாட்டு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நிலைமையும்கூட. இவர்களின் 116 நாள் ஆட்சியில் மக்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு இது ஒரு மிகப்பெரிய சோகமாக (Tragedy) மாறிவிட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என்று தினமும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கறிக்கடையில் கூட இந்த அளவிற்கு வெட்ட மாட்டார்கள், அந்த அளவிற்குத் தமிழ்நாட்டில் தினசரி வெட்டுக்குத்துகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நகைக்காகக் கொலை, போதைப்பொருள் விற்பனையை அம்பலப்படுத்தினால் கொலை, மதுபோதையில் கொலை என, கொலை நடக்காத நாளே தமிழ்நாட்டில் இல்லை.
‘காதல் படுகொலைகள்’
சென்ற ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கோவை மாவட்டத்தில் மட்டும் 9 பேர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இந்த ஆட்சி அமைந்த 116 நாட்களில் 10 ஆணவக் கொலைகள் நடந்துள்ளன; அதில் ஒன்றுக்குக் கூட முதல்வர் வாய் திறக்கவில்லை. முதலில் ‘ஆணவக் கொலைகள்’ என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள், இந்த ஆட்சி அமைந்தவுடன் அதைக் ‘கௌரவக் கொலைகள்’ என்று மாற்றினார்கள். இப்போது, சமீபத்தில் அதைக் ‘காதல் படுகொலைகள்’ என்று பத்திரிகையாளர்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆட்சிக்கு வந்த பிறகு இப்போது தனிநபர் ஒழுக்கம்தான் காரணம் என்று மக்களுக்குப் பாடம் எடுக்கிறார்கள்.
ஆளுங்கட்சியினர் தினசரி குற்றச் செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. உதாரணத்திற்கு, தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு எம்.எல்.ஏ.-வின் பெயரைச் சொல்லி ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதுகுறித்து ஏற்கனவே இந்த அவையில் பதிவுசெய்திருக்கிறேன். அந்தப் பெண் புகார் கொடுத்தும், சம்பந்தப்பட்ட ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. மீது இந்த அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்றார். ” இதற்கு தவெக தரப்பில் கடும் கண்டனம் எழுந்தது.
