விஜய் முன்னிலையில் தவெகவினர் மீதான புகார்களை பட்டியலிட்ட உதயநிதி

Published On:

| By Pandeeswari Gurusamy

முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய காவல்துறை, கட்டுப்பாடு இல்லாமல் செயல்பட என்ன காரணம் . ஜனநாயக ரீதியாகக் கருத்துச் சொல்பவர்கள், போராடுபவர்களைப் பார்த்து இந்த அரசும் காவல்துறையும் பயப்படுவது ஏன்? என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று பேரவையில் பேசிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், “ஆளுங்கட்சியினர் தினசரி குற்றச் செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. உதாரணத்திற்கு, தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு எம்.எல்.ஏ.-வின் பெயரைச் சொல்லி ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதுகுறித்து ஏற்கனவே இந்த அவையில் பதிவுசெய்திருக்கிறேன். அந்தப் பெண் புகார் கொடுத்தும், சம்பந்தப்பட்ட ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. மீது இந்த அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்றார்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து பேசிய தவெக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், “பெண் ஒருவர் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியது குறித்த குறிப்பு என்று பேசத் தொடங்கினார். அப்போது திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. உடனடியாக அமைச்சர் ஆனந்த், “அந்த சட்டமன்ற உறுப்பினர் இங்கு இருக்கிறார், அவர் கேட்கும்போது பதில் சொல்லிவிடுகிறோம். கடந்த 31.05.2026 அன்று தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரில், த.வெ.க. இளைஞரணி நிர்வாகி பாலசுப்பிரமணியன் தனக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 03.05.2026 அன்று ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடிக்கு அழைத்துச் சென்று, அவரும் ஜெயபால் என்பவரும் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகத் தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்ற எண் 20/2026, பி.என்.எஸ். (BNS) சட்டப் பிரிவுகள் 123, 318, 70-ன் கீழ் பதிவு செய்யப்பட்டு, 01.06.2026 அன்று பாலசுப்பிரமணியம் மற்றும் ஜெயபால் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேற்படி பாலசுப்பிரமணியன் 02.06.2026 அன்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டார். மேலும், கைது செய்யப்பட்ட ஜெயபால் த.வெ.க.-வைச் சார்ந்தவர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. புலன் விசாரணையில் சட்டமன்ற உறுப்பினர் சரவணனுக்கு இதில் தொடர்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. இந்த அரசு தவறு செய்பவர்கள் த.வெ.க. உள்ளிட்ட எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும்; கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

மேலும் எதிர்க்கட்சியினரைப் பார்த்து, “உங்கள் ஆட்சியில் உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் குற்றங்களில் ஈடுபட்டால், அதில் 10 முதல் 15 நாட்கள் வரை கேஸ் போடலாமா வேண்டாமா என்று நீங்கள் யோசிப்பீர்கள். இங்கு அப்படி அல்ல, முதலமைச்சர் உடனடியாக யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லக்கூடியவர்” என்றார்.

இதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், “எதிர்க்கட்சித் தலைவர் பேசியதற்கு நான் மறுப்பு சொல்கிறேன், நீங்கள் குற்றச்சாட்டுகளைச் சொல்லிக்கொண்டே இருந்தால் என்ன அர்த்தம்?” என்றார்.

ADVERTISEMENT

அப்போது குறுக்கிட்டுப் பேசிய சபாநாயகர், “உங்கள் கோபம் எனக்குப் புரிகிறது; ஒரு கட்சியின் பொதுச் செயலாளர், தன் கட்சியின் மீது உண்மைக்குப் புறம்பான தகவல் சொல்லும்போது நீங்கள் வெகுண்டு எழுவது எனக்குப் புரிகிறது, உங்கள் உணர்வு புரிகிறது. ஆனாலும், எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிறார்; அவர்கள் பேசி முடித்த பிறகு பேசுங்கள்” என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது நாங்கள் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தோம். அமைச்சர் எழுந்து நின்று குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்வது வழக்கம், ஆனால் நீங்கள் எல்லோரும் எழுந்து நிற்பது அவர் பேசுவதைத் தடைசெய்வது போல் நடந்து கொள்வது எப்படி சரியாக இருக்கும்? இதுபோல் எப்போதாவது நடந்திருக்கிறதா?” என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது நாங்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறோம். எங்கள் கட்சி என்று வரும்போது அவர் ஒரு உண்மையைச் சொல்கிறார், ஆனால் அவர் பேசிய பின்பு அதற்கான பதிலை நாங்கள் கொடுக்கும்போது அவர்கள் யாரும் எழுந்திருக்கக் கூடாது என்ற உத்தரவாதத்தை எதிர்க்கட்சித் தலைவரைத் கொடுக்கச் சொல்லுங்கள்” என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர், “எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது குறுக்கீடு வேண்டாம். அவர் பேசும்போது குற்றச்சாட்டுகள் ஒரு கட்சியின் மீது குற்றச்சாட்டு வந்ததால், பொதுச்செயலாளர் என்ற முறையில் அவர் உணர்ச்சிவசப்பட்டு உண்மைக்குப் புறம்பான தகவல் என்று சொன்னார். இப்போது நான் சொல்கிறேன், எதிர்க்கட்சித் தலைவர் பேசட்டும். நான் விரும்புவது என்னவென்றால், எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போதும் முதல்வர் பேசும்போதும் குறுக்கீடு இல்லாமல் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். இப்போது அவர் பேச வேண்டும், அவர் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், விவரம் அறிந்தவர்கள் முதலமைச்சர் சார்பாகப் பதில் பேசுவதற்கு உரிமை இருக்கிறது; அவர்களும் பேசலாம். நீங்கள் பேசும்போது எந்தக் குறுக்கீடும் இல்லாமல் பேச நான் அனுமதிக்கிறேன்” என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், “நான் பேசும்போது குறுக்கிடக்கூடாது என்று சொல்கிறீர்கள், ஆனால் இங்கு குறுக்கீடு செய்கிறார்கள். உணர்ச்சி என்பது எல்லோருக்கும் இருக்கிறது, அது பொதுவான விஷயம்தான். இன்று நான் உரையாற்றுவது காவல்துறை மீதான விவாதத்தில்தான்; நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை விவாதத்தில் நான் பங்கேற்கவில்லை” என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “ஒரு சட்டமன்ற உறுப்பினர் மீது குற்றச்சாட்டு சொல்லும்போது எந்தத் துறை அமைச்சர் என்பது அல்ல, கூட்டுப் பொறுப்பு என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். இதில் யார் வேண்டுமானாலும் எழுந்து சொல்லலாம். ஒரு சட்டமன்ற உறுப்பினர் மீது குற்றச்சாட்டு இருக்கிறது என்று சொன்னால், அதற்கான பதில் சொல்வதற்கு அமைச்சர்களுக்கு உரிமை இருக்கிறது. உங்கள் அமைச்சர் ஏ.வ வேலு அமைச்சராக இருந்தபோதும் இதுபோன்றுதான் பேசினார்” என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய திமுக எம்எல்ஏ ஏ.வ. வேலு, “அமைச்சர்கள் குறிப்பிட்டுப் பேசுவதற்கு எப்படி அதிகாரம் உள்ளதோ, அதேபோல் எதிர்க்கட்சித் தலைவருக்கு என்று சில அதிகாரங்கள் உள்ளன. எல்லா எம்.எல்.ஏ.-க்களுக்கும் அந்தப் பொறுப்புகள் இருக்காது. நீங்கள் அனுமதித்தால் அவர் புரோட்டோகாலில் (Protocol) கேபினட் லெவலில் (Cabinet Level) இருக்கிறார். அவர் ஒரு குற்றச்சாட்டையோ அல்லது ஒரு கருத்தைப் பற்றிப் பேசும்போது அது முழுமை அடைந்தால்தானே அமைச்சர்கள் கூட பதில் சொல்ல முடியும்? அவர் பேசிண்டிருக்கும்போதே இடைமறித்துவிட்டால் அவர் முழுமையாகப் பேசி முடிக்கவில்லையே” என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “நான் பேச்சை ஆரம்பிக்கும்போதே முதல்வர் எல்லாவற்றையும் கேட்டுப் பதில் சொல்லட்டும், திங்கட்கிழமை பதில் சொல்லும்போது சொல்லட்டும் என்றுதான் சொன்னேன். நான் பட்டியலை இப்போதுதான் ஆரம்பிக்கிறேன், இன்னும் நிறைய இருக்கிறது” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சியின் இன்னொரு பெண் உறுப்பினர் மற்றும் ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் பிரைட்டர், ரூஸ்வெல்ட் என இரண்டு பேர் மீது பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளனர்; அந்த வழக்கிலும் இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னையில் ஆளுங்கட்சியின் ஆலந்தூர் பகுதி செயலாளர் வேம்புலி ஒரு பெண்ணிற்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரைக் கட்சியை விட்டு நீக்கியதாகச் செய்திகள் வந்தன, ஆனால் கைதான சில நாட்களிலேயே அவர் வெளியில் வந்து, ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

ஆளுங்கட்சியின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் மோகன் ஒரு பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் அளிக்கப்பட்டது. நான்கு பிரிவுகளில் எஃப்.ஐ.ஆர். (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை விஜய் மோகன் அவர்களைக் கைது செய்யவில்லை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னை காசிமேட்டில் ஆளுங்கட்சியின் ஆர்.கே. நகர் 43-வது வார்டு பொறுப்பாளராக இருந்த பாம்பு தினேஷ், 11 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் கொடுக்கப்பட்டது. சேலத்தில் பொள்ளாச்சி சம்பவத்திற்கு இணையாக 50-க்கும் அதிகமான பெண்களின் ஆபாசப் படங்களை எடுத்து மிரட்டியதாக ஆளுங்கட்சி பிரமுகர் மணிகண்டன் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

அதேபோல், திருவள்ளூர் தெற்கு மாவட்ட ஆளுங்கட்சியின் மாவட்ட செயலாளர் பிரகாஷ் என்ற குட்டி, ஆளுங்கட்சியின் பெண் நிர்வாகிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகச் செய்திகளில் வந்துள்ளது. சிவகங்கையில் பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆளுங்கட்சி நிர்வாகிகள் மகாராஜா, ராபின், ஹரிஷ்; கரூர் குளித்தலையில் திருமணமான பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆளுங்கட்சியின் ஒன்றிய செயலாளர் ரமேஷ்; மதுரை கீழமாத்தூர் பகுதியில் பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆளுங்கட்சி நிர்வாகி கண்ணன் – இப்படி இந்த 116 நாட்களில் ஆளுங்கட்சியினர் பெண்களுக்கு எதிராகச் செய்த அட்ராசிட்டிகளுக்கு ஒரு பெரிய பட்டியலே உள்ளது” என்றார்.


ஆட்சிக்கு வருவதற்கு முன் காவல் மரணங்களுக்கு எதிராகப் பேசிய தற்போதைய முதலமைச்சர், ” சாரி வேண்டாம், நீதிதான் வேண்டும்” என்று பேசினார். ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த 116 நாட்களில் இதுவரை 8 காவல் மற்றும் சிறை மரணங்கள் நடந்துள்ளன; இதற்கெல்லாம் இதுவரை நீதியும் கிடைக்கவில்லை, முதலமைச்சர் ஒரு ‘சாரி’யும் சொல்லவில்லை.

எம்.ஜி.ஆர். நகர் வெங்கடேசன், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த கதிரேசன், தூத்துக்குடி அருணாச்சலம், மதுரையில் பூசாரி பரமசிவம் ஆகியோர் காவல் நிலையங்களில் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் வேல்முருகன் என்ற மாரியப்பன் காவல்துறை தாக்கிய அவமானத்தில் தீக்குளித்து இறந்துள்ளார். அதேபோல், காவல் நிலையத்தில் விசாரணை நடத்திய பிறகு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்ட கன்னியாகுமரி சபரி வர்மன், சேலையூர் பாலாஜி, மதுரை சிறையில் அன்வரூதீன் உள்ளிட்டோர் மரணமடைந்துள்ளனர். இந்தச் சம்பவங்களில் இதுவரை இந்த முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்று கேட்க விரும்புகிறோம்; அதை இந்த அவையின் வாயிலாக நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

ஒட்டுமொத்தமாக இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு மிக மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய உள்துறையும் உளவுத்துறையும் மொத்தமாகச் செயல்பாடு இழந்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால், குற்றச் சம்பவங்களைத் தடுக்க வேண்டிய காவல்துறையினர், அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினர், குறிப்பாக ‘ஜென்சி’ (Gen Z) இளைஞர்கள், அவர்களது கூட்டணியில் இருக்கும் கூட்டணிக் கட்சியினர் மற்றும் பத்திரிகையாளர்களைக் கைது செய்வதில் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர். ஆனால், முதலமைச்சரை ஓப்பனாக விமர்சிக்கும் பாஜக தலைவர்கள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை, ஒரு கம்ப்ளைன்ட் கூட இதுவரை யாரும் கொடுக்கவில்லை. “எங்களுக்கு வந்தால் ரத்தம், அவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?” என்று கேட்கிறோம். இப்படி பாஜக அடித்தாலும் வலிச்சாலும் வெளியே சொல்லக்கூடாது என்ற ஆளுங்கட்சியின் இந்த ‘பொலிட்டிக்கல் ஸ்ட்ராட்டஜி’யை (Political Strategy) நான் இதுவரை பார்த்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை.

கடற்கரைக்கு பூட்டு போட்ட அரசு

ஜனநாயக ரீதியான போராட்டங்களை முடக்குவதில் இந்த அரசு மும்முரமாகச் செயல்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக இந்தியா முழுவதும் மாணவர்கள் போராடினார்கள்; சென்னை மெரினாவில் அந்தப் போராட்டத்தை நடத்த இந்த அரசு அனுமதி கொடுக்கவில்லை. மாணவர்களுக்குப் பயந்து, உலகத்திலேயே கடற்கரைக்குப் பூட்டுப் போட்ட ஒரே அரசு இந்த அரசுதான். இரண்டு நாட்களுக்கு முன்பு பெசன்ட் நகர் கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்ட நீட் ஒழிப்புப் போராளி அனிதா நினைவேந்தல் நிகழ்ச்சிக்கும் இந்த அரசு அனுமதி தரவில்லை; அனுமதி இல்லாமல் மட்டும்தான் அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

சென்னை, மதுரையில் நீட்டுக்கு எதிராகப் போராடிய மாணவர்களைக் காவல்துறையினர் நேம் பேட்ச் (Name badge) இல்லாமலேயே சென்று தாக்கியுள்ளனர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்குச் சென்று நீட்டுக்கு எதிராகப் போராடிய மாணவர்களைக் கைது செய்ய முயன்றிருக்கிறார்கள். உயர்கல்வித்துறை சார்பாக எல்லா கல்வி நிறுவனங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்; அதில், ‘காக்ரோச் ஜனதா பார்டி, மற்றும் இடதுசாரி அமைப்புகள் நடத்தும் போராட்டங்களுக்கு மாணவர்களை அனுப்பக்கூடாது, அப்படி அனுப்பினால் கல்லூரி நிர்வாகத்தின் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படும், மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கையில் சொல்லியிருந்தனர். இந்த அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் இடதுசாரித் தோழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த பிறகு, அந்தச் சுற்றறிக்கையை Withdraw செய்துள்ளனர். தலைமைச் செயலாளரும் டி.ஜி.பி.-யும்தான் இதற்கெல்லாம் காரணம் என்று ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சியினரே ஓப்பனாகச் சொல்கிறார்கள். அப்படியானால், முதலமைச்சருக்கு இதெல்லாம் தெரிந்து நடக்கிறதா? தெரியாமல் நடக்கிறதா? என்ற கேள்வியை நாங்கள் இந்த அரசுக்கு வைக்க விரும்புகிறோம்.

பெரியார் திடலில் காவல்துறை

முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய காவல்துறை, கட்டுப்பாடு இல்லாமல் செயல்பட என்ன காரணம் என்று நாங்கள் கேட்க விரும்புகிறோம். ஜனநாயக ரீதியாகக் கருத்துச் சொல்பவர்கள், போராடுபவர்களைப் பார்த்து இந்த அரசும் காவல்துறையும் பயப்படுவது ஏன்? தந்தை பெரியாரை இந்த ஆளுங்கட்சிக் கொள்கைத் தலைவர் என்று சொல்கிறார்கள்; பெரியார் திடலுக்குச் சென்று முதல்வர் மரியாதையெல்லாம் செய்தார். ஆனால், நீட் தேர்வு, EWS – இட ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு எதிராகத் திராவிடர் கழகம் சார்பில் சமீபத்தில் ஒரு பைக் பேரணி நடத்த ஏற்பாடு செய்தனர். ஆனால், அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று காவல்துறையினரைப் பெரியார் திடலில் குவித்தது இந்த அரசு. அதன் பிறகு, திராவிடர் கழகம் நீதிமன்றத்திற்குச் சென்று, நீதிமன்ற உத்தரவின் பெயரில்தான் அந்தப் பைக் பேரணியை இப்போது நடத்தி முடித்துள்ளனர். இந்த நடவடிக்கைகளைப் பார்த்தால், தமிழ்நாடு இதுவரை எதிர்கொள்ளாத ஒரு அசாதாரண சூழ்நிலையை இந்த ஆட்சி எதிர்கொண்டிருப்பது உறுதியாகிறது.

சட்டம்-ஒழுங்கு தொடர்பாக, காவல்துறை சம்பந்தமாக இந்தக் கூட்டத்தொடரில் நான் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் பல கேள்விகளை எழுப்பியுள்ளோம். ஆனால், இதுவரை எந்தக் கேள்விக்கும் முதல்வர் எழுந்து பதில் சொல்லவேயில்லை. வழக்கமாக டிவி சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களின் கால்ஷீட் (Call sheet) முடிந்துவிடும், அவர்கள் வேறு சீரியலில் நடிக்கப் போய்விடுவார்கள். அப்போது டைட்டிலில் மக்களுக்குப் புரியும்படியாக ‘இவருக்குப் பதில் இவர்’ என்று டைட்டில் பெயர் போடுவார்கள். ஆனால், இந்த அரசில் எந்தக் கேள்வி கேட்டாலும், வேளாண் துறை அமைச்சருக்குப் பதிலாக விளையாட்டுத்துறை அமைச்சர், சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்குப் பதிலாக மின்சாரத்துறை அமைச்சர் பதில் சொல்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர், “அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்பு; எந்த அமைச்சருக்கும் இன்னொரு அமைச்சர் கண்டிப்பாகப் பதில் சொல்லலாம். முதலமைச்சர் சார்பாகக் கூட எந்த அமைச்சரும் பதில் சொல்லலாம், அது உங்களுக்கே தெரிந்த விஷயம்தான்” என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், பேசுகையில் அவர் பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் – மனதார நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள் – அவர் எப்படி கொச்சைப்படுத்திப் பேசுகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “இதில் எந்தத் தவறான வார்த்தையையும், ‘அன்பார்லிமென்டரி வேர்ட்’ (Unparliamentary word) எதையும் நான் பயன்படுத்தவில்லை. இந்த விதியைத் திங்கள் கிழமையும் நீங்கள் ஃபாலோ-அப் (Follow-up) செய்ய வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை” என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர், “எப்படி அமைதியாக இருந்து முதலமைச்சர் கேட்டுக்கொண்டு இருக்கிறாரோ, அதேபோல் அமைதியாக இருந்து நீங்களும் கேட்க வேண்டும் என்றுதான் நான் வேண்டுகோள் வைக்கிறேன்” என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “பேரவைத் தலைவர் அவர்களே, இப்போது எப்படி ஆளுங்கட்சியினர் அமைதியாக இருக்கிறார்களோ, அதே போல நாங்களும் அமைதியாக இருப்போம்” என்றார். இதற்கு ஆளும் கட்சி தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதைத் தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “உயர்கல்வித்துறை அமைச்சர் பேசப் போகிறார் என்றால் நான் எனது பேச்சை முடித்துக் கொள்கிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “நாங்கள் இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறோம்; முதலமைச்சர் பொறுப்பு வகிக்கும் பல துறைகளுக்கும் இங்கு அமைச்சர்கள் ஒவ்வொருவராக எழுந்து பதில் சொல்கிறார்கள். நாங்கள் எல்லாம் இன்னும் காவல்துறை முதலமைச்சர் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்று நம்பிப் பேசிக்கொண்டிருக்கிறோம்.

தவெக ஆட்சியின் குற்ற சம்பவங்கள்

கடந்த 116 நாட்களில் சுமார் 550 குற்ற சம்பவங்கள் நடந்துள்ளன; அதில் 200 கொலைகள், 300-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன, 8 காவல் மரணங்கள் நடந்துள்ளன, 10 ஆணவக் கொலைகள் நடந்துள்ளன. ஆட்சிக்கு வந்து ஆறு மாதம் கூட ஆகவில்லை என்று ஆளுங்கட்சியினர் சொல்கிறார்கள். ஆனால், அப்படி அவர்கள் சொல்வது தேர்தல் வாக்குறுதிகளுக்குப் பொருந்தும், அதை நான் மறுக்கவில்லை. ஆனால், சட்டம்-ஒழுங்கைப் பொறுத்தவரை அதைச் சொல்லித் தப்பிக்க இயலாது. ஒரு புது ஆட்சி வந்ததும் குற்றவாளிகளுக்கு ஒரு ‘ஸ்ட்ராங் மெசேஜ்’ (Strong message) அந்த அரசு கொடுக்க வேண்டும். முதலமைச்சரும் ஆட்சிக்கு வந்த புதிதில், ‘எபிஷியன்ட்டான (Efficient) அதிகாரிகளை நான் நியமித்துவிட்டேன்’ என்றார். அரசினுடைய கொள்கை விளக்கக் குறிப்பிலும் பொது அமைதியை நிலைநிறுத்துவதில் இந்த அரசு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது என்று எழுதியுள்ளது. ஆனால், எப்படி இப்படி இத்தகைய குற்றங்கள் நடந்தது என்பதை ஆராய வேண்டும். முதலமைச்சரின் பதிலுக்கு இன்னும் மூன்று நாட்கள் நேரம் உள்ளது, நன்றாகத் தயார் செய்து வாருங்கள்” என்றார்.

இதற்கு த.வெ.க. தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர், “முதலமைச்சர் கரங்களைக் கட்டிக்கொண்டு அமைதியாக உட்கார்ந்திருப்பதை பார்க்கும்போது, அவர் எதற்கும் தயாராக வந்திருக்கிறார் என்பதைத்தான் அவர் வெளிப்படுத்தி வருகிறார். அவர் அமர்ந்து கூர்ந்து வார்த்தைகளைக் கவனித்து வருகிறார்; அவர் இறுதியாக தயார்படுத்தி வரவேண்டிய தேவை இல்லை என்று கருதுகிறேன், தயாராகவே வந்திருக்கிறார் என்று நான் கருதுகிறேன். திங்கட்கிழமை அவர் பதில் சொல்லட்டும்” என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “பேரவைத் தலைவரே, நான் இங்கிலீஷில் சொன்னதை நீங்கள் தமிழில் சொல்கிறீர்கள். நான் என்ன ‘தயாராக வர வேண்டாம்’ என்று சொல்கிறேன்? தயார் ஆகிட்டு வாருங்கள் (Prepare agitu varungal) என்றுதான் சொன்னேன்!” என்றார். மேலும் அவர் தயாராகி வந்திருந்தால் அவர் இப்போதே பதில் சொல்லட்டும் என்றார்.

அதற்கு சபாநாயகர் “திங்கள் கிழமை முதல்வர் பதில் சொல்வார்” என்றார்.

தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “வரட்டும், அதில் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. அதிகாரிகள் இருக்கிறார்கள், அதிகாரிகளிடம் தகவல்களைக் கேட்டு வாருங்கள். மீண்டும் எங்கள் மீது பழி போடாமல், ‘இன்னும் திமுகதான் ஆட்சி செய்கிறது’ என்பதை உங்கள் மனதில் இருந்து எடுத்து விடுங்கள். எங்களை நோக்கி எதிர் கேள்வி கேட்காமல், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளியுங்கள். ‘எங்கள் ஆட்சியில் அப்படி நடந்தது, இப்படி நடந்தது’ என்று விதண்டாவாதத்தில் இறங்காமல், எங்கள் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் அன்றைய முதல்வர், எங்களது தலைவர் அவையில் பொறுமையாகவும் பொறுப்பாகவும் டேட்டாவோடு பதில் கொடுத்தார். இப்போது நீங்கள் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருக்கிறீர்கள், உங்களிடம் கேள்வி கேட்கும் பொறுப்பில் நாங்கள் இருக்கிறோம். அந்தக் கடமை எங்களுடையது, அந்தப் பொறுப்பைத்தான் மக்கள் எங்களிடம் ஒப்படைத்துள்ளனர். எனவே, ‘ரீல்ஸ் கன்டென்ட்’காக (Reels content) இல்லாமல், ‘ரோல், கேமரா, ஆக்‌ஷன்’ மோடில் இல்லாமல், சம்பந்தமே இல்லாமல், லாஜிக்கே இல்லாமல் குட்டிக் கதைகள் சொல்லாமல், மக்களின் கேள்விகளுக்கு, எங்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்ட்ரெயிட்டாக (Straight) பதில் சொல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share