கொளத்தூர் தொகுதி வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக தலைமையிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கூறினார்.
கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ விஎஸ் பாபு வெற்றியை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திமுக சட்டத்துறை செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ, ”நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் கொளத்தூர் தொகுதியில் 19 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்த்துவிட்டு 14 இயந்திரங்கள் மட்டுமே சரியாக இயங்குவதாகத் தேர்தல் ஆணையம் அறிக்கை கொடுத்தது.
14 இயந்திரங்களில் 5 இயந்திரங்கள் பழுதடைந்திருப்பதன் மூலம் ஏறக்குறைய 32–33% மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குறைபாடுகள் இருப்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளோம்.
இந்நிலையில் கொளத்தூர் தொகுதியில் 100 சதவிகித EVM-களையும் சரிபார்த்து, விவிபேட் வாக்குச் சீட்டுகளை எண்ணிப் பார்க்க வேண்டும் என ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 100-ல் EVM பழுதடைந்தால் தேர்தலைத் தள்ளுபடி செய்யலாம் என்ற காரணம் சேர்க்கப்படவில்லை, ஏனெனில் அது 1951-ல் இயற்றப்பட்ட சட்டம்.
அரசியலைப்புச் சட்டத்தில் தேர்தல் முடிவுகளை எதிர்த்து 45 நாட்களுக்குள் தேர்தல் மனு தாக்கல் செய்ய வேண்டும். கொளத்தூர் தொகுதியை பொறுத்தவரை 14 இயந்திரங்களை சரிபார்க்க வேண்டும் என்று மே 7ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருந்தோம். ஆனால் தேர்தல் ஆணையம் EVM பரிசோதனையை 3 மாதங்களுக்குப் பிறகே செய்தது.
இந்தசூழலில் கொளத்தூர் தொகுதி வழக்கை தேர்தல் வழக்ககாக தாக்கல் செய்திருக்க வேண்டும் என்றும் நாங்கள் தாக்கல் செய்த ரிட் மனு நிலைக்கத்தக்கது அல்ல என்றும் கூறி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இருப்பினும், 100% EVM-களைச் சரிபார்ப்பது குறித்து உரிய நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அல்லது உயர் நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்யலாமா என்று திமுக தலைவரிடமும் தலைமைக்கழகத்திடமும் ஆலோசிப்போம். தலைமை அறிவுறுத்தலின்படி அடுத்தக்கட்ட முடிவெடுக்கப்படும்” என்று கூறினார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகி இருந்தால் என்ன நடவடிக்கை என்பது குறித்த சட்டச் சிக்கல் இந்தியாவிலேயே முதல்முறையாக கொளத்தூர் தொகுதியில்தான் எழுப்பப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார் என்.ஆர்.இளங்கோ.
