சேலம் மாவட்டம், எடப்பாடியில் உள்ள தனது தோட்டத்தில் திருட்டு நடந்துள்ளது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் இன்று (செப்டம்பர் 3) காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “விவசாயிகளின் பம்ப் செட்டுகளில் உள்ள காப்பர் வயர்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருகின்றன. அதேபோல், ஆடு, மாடு போன்ற கால்நடைகளையும் திருடிச் செல்லும் அளவிற்குச் சூழல் நிலவுகிறது. இதற்கெல்லாம் காரணம் போதை ஆசாமிகள்தான்; அவர்களுக்குப் பணம் கிடைக்கவில்லை என்றால் இப்படிப்பட்ட திருட்டுகளில் ஈடுபடுகிறார்கள்.
இன்றைக்குக் கூட திண்டுக்கல், மதுரை மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை, வத்தலகுண்டு, சோழவந்தான், வாடிப்பட்டி போன்ற பகுதிகளில் இந்தத் திருட்டு சம்பவங்களால் விவசாயிகள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர். காவல்துறையினர் விவசாயிகள் கொடுக்கும் புகார்களைப் பதிவு செய்யாமல் அலைக்கழித்து வருகின்றனர். இன்று கூட நிலக்கோட்டை தாலுகா, விளாம்பட்டி காவல் நிலையத்தில் தங்களது மின் வயர்கள் மற்றும் கால்நடைகளைப் பறி கொடுத்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் காவல்துறையில் புகார் அளிக்கச் சென்றுள்ளனர்; இன்று காலையிலிருந்து அங்குதான் இருக்கின்றனர். காவல்துறையினர் உடனடியாக மாவட்ட அளவில் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்.
அதேபோல், சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், சிலுவம்பாளையம் கிராமத்தில் எனது தோட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு கிணற்றில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல் மின் மோட்டாரில் இருந்த மின் வயர்களை அறுத்து எடுத்துச் சென்றுவிட்டனர். இதை நான் எங்கு போய் சொல்வது? இதை நான் பேரவைத் தலைவரிடம் காட்டி அனுமதி வாங்கப்பட்டுள்ளது. எனக்கே இப்படிப்பட்ட நிலைமை என்றால் மக்களுக்கு எப்படி இருக்கும்?” என்றார்.
அப்போது குறிப்பிட்டுப் பேசிய துணை சபாநாயகர் ரவிசங்கர், “ரொம்ப நாளாகப் பார்த்து வைத்துக் கொண்டிருந்து, யாரோ கை வைத்துவிட்டார்கள் போலிருக்கிறது! காவலன் பெரியவனா, கள்வன் பெரியவனா என்றால் – கடைசியில் கள்வன்தான் பெரியவன் என்பதை அவரே காட்டிவிட்டார்!” என்றார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
இதைத் தொடர்ந்து பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “அதை அவை குறிப்பில் ஏற்ற வேண்டாம்…” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இது அவைக்குறிப்பில் வந்து விடும். லைவ்லேயும் போயிட்டு இருக்குது. இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த 116 நாட்களில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துவிட்டது; இதைத் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் போதைக்கு அடிமையாகிப் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்” என்று குற்றம் சாட்டினார்.
