Video: “கேப்டன் இருந்திருந்தா…” – அமைச்சர் கீர்த்தனா பேச்சுக்கு ஆவேசமாக பதிலளித்த பிரேமலதா!

Published On:

| By Pandeeswari Gurusamy

கேப்டன் பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு ஏன் என்று மக்கள் பிரச்சினைகள் பற்றிக் கேட்டார். ஆனால், அது திசை திருப்பப்பட்டு எங்கெங்கோ போய் அதன் பிறகு சண்டையாக மாறியது வரலாறு என அமைச்சர் கீர்த்தனாவுக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்தார்.

சட்டமன்றத்தில் காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், “இரண்டு மணி நேரமாக ஒரே சப்ஜெக்டைத்தான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். இன்று 13 பேர் பேச வேண்டியுள்ளது. ஆனால், இப்போது வரை உதயா மட்டும்தான் பேசி இருக்கிறார், இரண்டு மணி நேரம் கடந்துவிட்டது. மற்ற 12 பேர் எப்போது பேசி முடிப்பது? எல்லோருக்கும் பேச வாய்ப்பு கொடுங்கள். ‘மாறி மாறி சண்டை போட இது ஒன்றும் சண்டை மன்றம் இல்லை, சட்டமன்றம்’ என்று நாங்கள் சொல்லி இருந்தோம். இன்று முதல்வர் வந்த நிலையில் மீண்டும் அதே விஷயம் நடந்துள்ளது என்றார்.

ADVERTISEMENT

அப்போது குறுக்கிட்டுப் பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, “இது சண்டை மன்றம் என்று சொல்வதற்கெல்லாம் இடமில்லை. இதே விஷயம் கேப்டன் விஜயகாந்த் ஐயாவிற்கு நடந்திருந்தால், அவங்களும் இன்று எழுந்து நின்று கண்டிப்பாகப் பேசி இருப்பார்கள்” என்று ஆவேசமாக கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், “கேப்டன் இருந்தபோது நான் அவையில் இல்லை; அன்று அவையில் இருந்தவர்களுக்கு அது நன்கு தெரியும். கேப்டன் அன்று பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு ஏன் என்று மக்கள் பிரச்சினைகள் பற்றிக் கேட்டார். ஆனால், அது திசை திருப்பப்பட்டு எங்கெங்கோ போய் அதன் பிறகு சண்டையாக மாறியது வரலாறு. அதனால், மீண்டும் அதே வரலாறு திரும்ப வேண்டுமா? ‘மாற்றம் கொண்டு வருவோம்’ என்று சொன்ன நீங்கள், அதற்கேற்ற மாற்றத்தை கொடுக்க வேண்டாமா என்பதுதான் எனது கேள்வி.

ADVERTISEMENT

நீங்கள் சொல்வது தவறு என்று நான் சொல்லவில்லை; உங்கள் கருத்தை நீங்கள் சொல்கிறீர்கள், எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்தைச் சொல்கிறார்கள். எல்லோரும் தங்கள் கருத்துக்களை 15 முதல் 20 நிமிடங்கள் பேசுங்கள். சரியாக இரண்டு மணி நேரமாக ஒரே சப்ஜெக்டைத்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். இன்று காவல்துறை மானியக் கோரிக்கைகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் உள்ளிட்ட 13 பேர் பேச வேண்டும். இதுவரை தம்பி உதயா மட்டும்தான் பேசி இருக்கிறார் என்பதுதான் எனது கருத்து. அதனால், நீங்கள் சொல்வது தவறு என்றோ அவர்கள் சொல்வது தவறு என்றோ நான் பேச வரவில்லை” என்றார்.

அப்போது குறிக்கிட்டுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “அக்கா பிரேமலதா விஜயகாந்த், என்னை ‘இரண்டு மணி நேரம் பேசினார், இரண்டு மணி நேரம் பேசினார்’ என்று சொல்கிறார். நான் வெறும் 25 நிமிடம் மட்டும்தான் பேசி இருக்கிறேன் என்பதை இந்த அவையில் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

ADVERTISEMENT

உடனே குறுக்கிட்ட சபாநாயகர், “நீங்கள் 35 நிமிடங்கள் பேசியிருக்கிறீர்கள்” என்றார்.

தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், “எதிர்க்கட்சித் தலைவர் பேசத் தொடங்கி இரண்டு மணி நேரம் ஆனது உண்மைதான். ஆனால், அதில் அவர் பேசியது 35 நிமிடம்; மீதி நேரம் முழுவதும் குறுக்கீடுகளும் விவாதங்களும்தான் நடந்திருக்கின்றன என்பதுதான் எனது கருத்து. இன்று காவல்துறை சார்ந்த லட்சக்கணக்கானோர் நமக்கு என்ன சொல்லப் போகிறார்கள் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக நாம் பேசுவோம்” என்று பேசைத் தொடர்ந்தார்.

Premalatha Speech | சண்டை மன்றமா? பிரேமலதாவுடன் சண்டைக்கு போன கீர்த்தனா | Keerthana | DMDK | TVK
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share