முதல்வர் விஜய் இன்று (செப்டம்பர் 3) சட்டப்பேரவைக்கு வரும்போது, திடீரென மூன்று பேர் அவரது வாகனத்தை மறிக்க முயன்றதால் காமராஜர் சாலையில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முதல்வர் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிலிருந்து கடற்கரைச் சாலை வழியாக தலைமைச் செயலகத்துக்கு வந்து செல்கிறார்.
காலை மாலை தலைமைச் செயலகத்துக்கு வந்து செல்லும்போது மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இரு புறங்களிலும் முதல்வர் விஜய்யை காண பலர் கூடி நிற்பார்கள்.
அந்த வகையிலும் இன்று காலை பலர் நின்று கொண்டிருந்தனர். பாதுகாப்பு பணிக்காக போலீசாரும் நிறுத்தப்பட்டிருந்தார்கள்.
இந்த சூழலில் முதல்வர் விஜய் வரும்போது சற்றும் எதிர்பாராத விதமாக திடீரென மூன்று பேர் சாலையின் குறுக்கே ஓடி முதல்வரின் கான்வாயை மறிக்க முயன்றனர்.
உடனடியாக பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து இழுத்து வந்தனர்.
இதன் காரணமாக விஜய்யின் கான்வாய் சில நொடிகள் நிறுத்தப்பட்டன. அவரது பாதுகாப்பு கமாண்டோக்களும் காரை விட்டு இறங்கினர்.
இதைத்தொடர்ந்து ஒரு சில நொடிகளுக்குப் பின் முதல்வர் கான்வாய் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.
விஜயின் காரை மறிக்க முயன்றது யார்?
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த ஆகாஷ் 2026 மார்ச் 8ம் தேதி குற்ற வழக்கில் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழந்தார்..
இந்த சம்பவம் தொடர்பாக 6 காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் நீதி கேட்டு ஆகாஷின் உறவினர்கள் முதல்வர் விஜய் தலைமைச் செயலகம் செல்லும் வழியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது. முதல்வர் விஜய்யின் கட்டுப்பாட்டில் உள்ள துறை என்பதால் அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இவ்வாறு செய்துள்ளனர்.
வரும் திங்கள் அன்று இன்றைய விவாதத்துக்கு முதல்வர் விஜய் பதில் அளித்துப் பேசுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
